மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

“வாத்தியாரே... கொஞ்சம் நில்லுங்க...” வரப்பில் நடந்துகொண்டிருந்த வாத்தியார் வெள்ளைச்சாமியை அழைத்தபடியே வயலிலிருந்து வந்தார் ஏரோட்டி ஏகாம்பரம்.

த்தம் கேட்டு நின்ற வாத்தியார் திரும்பிப் பார்த்தார். “அட ஏகாம்பரமா... வாய்யா... என்ன இம்புட்டு அவசரம்?” என்றபடியே அருகிலிருந்த மரத்துக்குக் கீழே நின்றார். “அது ஒண்ணுமில்லீங்க... நேத்து ராத்திரி டி.வியில ஒரு செய்தி பார்த்தேன். `இன்னும் 15 நாள்கள்ல உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்போம். அடுத்த மாசம் தேர்தல் நடக்கும்’னு நிதியமைச்சர் ஓ.பி.எஸ் சொன்னதாகச் சொன்னாங்க. அது உண்மைங்களா... நிச்சயம் இந்த வருஷமாவது நடத்துவாங்களா?” கேட்டார் ஏரோட்டி.

“ஏய்யா... இதுக்குத்தான் இப்படி ஓடி வந்தியா... அவங்க நடத்தினா என்ன, நடத்தாம போனாத்தான் உனக்கு என்னய்யா...” என்று கடிந்துகொண்டார் வாத்தியார்.

“என்னய்யா அப்படிச் சொல்லிட்டீங்க... இந்தத் தடவை நம்மூர்த் தேர்தல்ல நான் பிரசிடென்ட்டுக்கு நிக்கலாம்னு இருக்கேன். அதுக்காகத்தான் கேட்டேன். ஏன் வாத்தியாரே... நான் நின்னா ஜெயிச்சிடுவேனா?’’ வெள்ளந்தியாகக் கேட்டார் வெள்ளைச்சாமி.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

“இப்பவே உன் அதிகாரம் தூள் பறக்குது. இதுல பிரசிடென்ட் ஆகிட்டா பிடிக்கவே முடியாமப் போயிடுமே...” தலையில் காய்கறிக் கூடையுடன் அந்த வழியாக வந்த கண்ணம்மாவும் இடையில் புகுந்தார். “எலெக்‌ஷன் நடந்தா நல்லதுதான். நீ நில்லுய்யா... பார்த்துக்குவோம்’’ என்றார் காய்கறி.

“காலையில வந்து அறுவடை முடிஞ்ச வயல்ல என்னய்யா செஞ்சிகிட்டு இருக்கே’’ என்று கேட்டார் வாத்தியார். “கரும்பு வெட்டியாச்சு. சோகையை எரிக்கலாம்னு வேலை பார்த்துகிட்டு இருக்கேன்’’ என்றார் ஏரோட்டி.

பதறிப்போன வாத்தியார், “அப்படிச் செய்யாதய்யா... அதை மக்கவிட்டா முழுக்க உரமாகிடும். இப்படி வேளாண்மைக் கழிவுகளை எரிக்கறதால காற்று மண்டலம் கெட்டுப் போகுதுய்யா... அப்புறம் நம்ம ஊரும் டெல்லி மாதிரி ஆகிடும்’’ என்றார் வெள்ளைச்சாமி.

“டெல்லிக்கு என்ன ஆச்சு?” பதற்றமாகக் கேட்டார் காய்கறி. “காற்று மாசுபட்டு, ஊரெல்லாம் புகைமூட்டமா இருக்குதாம். மூக்குல துணியைக் கட்டிக்கிட்டுதான் ஜனங்க நடமாடுறாங்க. இதுக்குக் காரணம், பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள்ல வைக்கோலை எரிக்கிறதுதான்னு சொல்றாங்க. `இதைக்கூடக் கட்டுப்படுத்த முடியலைன்னா எதுக்கு அரசாங்கத்தை நடத்துறீங்க... மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசுகள் ஆட்சியில இருக்கத் தகுதியேயில்லை. பயிர்க் கழிவுகளை எரிப்பதைத் தடுக்க உங்ககிட்ட பணமில்லையா... நாங்ககூட நிதி திரட்டிக் கொடுக்கிறோம்’னு மாநில அரசுகளை வெளுத்து வாங்கிடுச்சு சுப்ரீம் கோர்ட். புகைப் பிரச்னையால நாடே பத்தி எரியுது. இதுல நீ வேற எரிக்கப்போறியா” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் வாத்தியார்.

“இதுல இம்புட்டுப் பிரச்னை இருக்கா... இனிமே நான் எதையும் எரிக்க மாட்டேன்யா... நிலத்துலயே போட்டு மக்கவெச்சிடுறேன்’’ என்று பீதியானார் ஏரோட்டி. ‘‘நானும்தான் நேத்து ஒரு செய்தியைக் கேட்டேன். அம்மா ஆம்புலன்ஸ் ஆரம்பிச்சிருக்காங்களாம். இனிமே ஆடு, மாடுகளுக்கு உடம்பு சரியில்லைன்னா போன் பண்ணுனா போதும். நம்ம இடத்துக்கே வந்து வைத்தியம் பார்த்திடுவாங்களாம்’’ என்றார் கண்ணம்மா.

“இது ஏற்கெனவே இருக்கறதுதான். 2016-ம் வருஷம்... அப்போ முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா ஆரம்பிச்சுவெச்ச திட்டம். நடமாடும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவைத் திட்டம். அப்போ மதுரை, திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், நாமக்கல் மாவட்டங்கள்ல மாவட்டத்துக்கு ரெண்டு ஆம்புலன்ஸ் கொடுத்தாங்க. அதை இப்போ எல்லா மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் பண்ணியிருக்காங்க. இப்போ 22 ஆம்புலன்ஸ் வாங்கியிருக்காங்க. இந்த வண்டிகள்ல கால்நடைகளுக்கு வைத்தியம் செய்யத் தேவையான எல்லா வசதிகளும் இருக்கும். மனுஷனுக்கு உடம்புக்கு சரியில்லைன்னா 108-க்கு போன் பண்ற மாதிரி, ஆடு, மாடுகளுக்கு உடம்பு சரியில்லைன்னா, `1962’ என்ற நம்பருக்கு போன் பண்ணினாப் போதும், ஆம்புலன்ஸ் வந்துடும். வண்டி போக முடியாத இடங்கள்ல ஆடு, மாடுங்க இருந்தா அதை ஆம்புலன்ஸுக்குத் தூக்கிட்டு வர்றதுக்காகத் தள்ளுவண்டி வசதியும் இருக்காம். மாவட்டத்துக்கு ஒண்ணுதான் இருக்கு’’ என்று ஆம்புலன்ஸ் திட்டத்தைப் பற்றி விளக்கி முடித்தார் வாத்தியார்.

அப்போது மாடுகள் நெல் வயலுக்கு நுழைய “ஐயய்யோ... இந்தா போயி மாட்டைப் பிடிச்சுட்டு வந்திடுறேன்” என்று ஏரோட்டி எழுந்து ஓட, முடிவுக்கு வந்தது மாநாடு.