
தனியார் நிறுவன மேனேஜர்னு பொய் சொன்ன வின்சென்ட் பாஸ்கர், வேலைக்குப் போகிற மாதிரி நடிச்சிருக்கான்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில், ஆறு பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட மோசடி மன்னன் வின்சென்ட் பாஸ்கர் போலீஸில் சிக்கியிருக்கிறான். ஓரளவுக்கு வசதியான, சில காரணங்களால் திருமணம் தள்ளிப்போன பெண்களாகக் குறிவைத்துத் திருமணம் செய்யும் அவன், மூன்றே மாதங்களில் அவர்களிடமிருந்து பணம், நகைகளை அபேஸ் செய்துவிட்டு ஓடிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறான். மீண்டும் திருமணம்... மோசடி... தலைமறைவு... ரிப்பீட்டு!
வின்சென்ட் பாஸ்கரைக் கைதுசெய்திருக்கும் நெல்லை மாநகரக் காவல்துறையினரிடம் அவனின் மோசடிகள் குறித்து விசாரித்தோம்... “தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவன் வின்சென்ட் பாஸ்கர். வயசு 40. வேலைக்குப் போகாம சுத்திக்கிட்டிருந்தவன், ஒரு தனியார் நிறுவனத்துல மேனேஜரா இருக்குறதா பொய் சொல்லி, 2014-ல சொந்த ஊர்ல முதல்ல கல்யாணம் பண்ணியிருக்கான். ‘என்னடா வேலைக்கே போகாம மாப்பிள்ளை எப்பவுமே வீட்லயே இருக்கார்’னு பெண் வீட்டார் சந்தேகப்பட்டு விசாரிச்சிருக்காங்க. அப்பதான், அவன் எங்கேயுமே வேலை செய்யலைனு தெரியவந்திருக்கு. அதனால, குடும்பத்துல அடிக்கடி சண்டை நடந்திருக்கு. மனைவியைச் சமாதானப்படுத்திக் குடும்பம் நடத்தினவன், வியாபாரம் செய்யப்போறதா பொய் சொல்லி மனைவியோட நகைகளை வாங்கிக்கிட்டுத் தலைமறைவாகிட்டான். இதெல்லாம் நடந்து முடிஞ்சது மூணே மாசத்துல.

அடுத்ததா, நெல்லை மாவட்டம் பணகுடிக்கு பக்கத்துல இருக்கிற பாம்பன்குளத்துல, ஒரு பெண்ணை ரெண்டாவதா திருமணம் செஞ்சுருக்கான். அந்தப் பெண்கிட்டருந்து ரொக்கப் பணம், நகைகளைச் சுருட்டிக்கிட்டு தலைமறைவாகிட்டான். மூணாவதா களக்காட்டுக்குப் பக்கத்துல டோனாவூர்ங்கற கிராமத்துல ஒரு பெண்ணையும், நாலாவதா கீழக்காடுவெட்டியில ஒரு பெண்ணையும் அடுத்தடுத்து ஏமாத்தி கல்யாணம் பண்ணியிருக்கான். நகைகளை, பணத்தை அபேஸ் பண்ணிட்டு எஸ்கேப் ஆகியிருக்கான்.
தூத்துக்குடியில ஒரு குடும்பத்தை ஏமாத்தி அஞ்சாவதா கல்யாணம் செஞ்சுக்கிட்ட வின்சென்ட் பாஸ்கர், பாளையங்கோட்டையில ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருத்தரோட மகளை கடந்த ஜூலை மாசம் 15-ம் தேதி, ஆறாவதா கல்யாணம் செஞ்சுருக்கான். ‘கொரோனா காலம்கிறதால, ரொம்ப எளிமையா கல்யாணத்தை நடத்தணும்’னு வின்சென்ட் பாஸ்கர் சொன்னதால, பேராசிரியரும் நெருங்கிய உறவினர்களை மட்டும் கூப்பிட்டு மகளைக் கல்யாணம் செஞ்சு கொடுத்துருக்கார். தனியார் நிறுவன மேனேஜர்னு பொய் சொன்ன வின்சென்ட் பாஸ்கர், வேலைக்குப் போகிற மாதிரி நடிச்சிருக்கான். மனைவியை அடிக்கடி வெளியில அழைச்சுக்கிட்டுப் போய் நம்பிக்கை வர்ற மாதிரி நடந்திருக்கான். அந்தப் பெண் அவனை முழுமையா நம்பினதுக்கு அப்புறம், மூணே மாசத்துல 40 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கிட்டு ஓடிட்டான். ஒரு பொண்ணை டார்கெட் பண்றது; பிளான் பண்றது; கல்யாணம் பண்றது; மூணு மாசம் வாழ்றது; எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு ஓடுறது. மறுபடியும் முதல்லருந்து ஆரம்பிக்கிறதுன்னே இருந்திருக்கான்” என்றார்கள் போலீஸார்.

வின்சென்ட் பாஸ்கரிடம் ஏமாந்த பெண் ஒருவரிடம் பேசினோம். ‘‘திருமணத் தகவல் மையங்கள்ல பதிவு செஞ்சுருக்கறவங்கதான் அவனோட டார்கெட். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைத்தான் குறிவெப்பான். கல்யாண புரோக்கர் இன்பராஜ்னு ஒருத்தனை பெண்ணோட வீட்டுக்குப் போய் பேசச் சொல்வான். புரோக்கரோட பேச்சை நம்பி வின்சென்ட் பாஸ்கரோட வீட்டுக்குப் போனா, ஃபிளாரன்ஸ் - தாமரைச்செல்வினு ரெண்டு பேர் அம்மாவாவும் சித்தியாவும் நடிப்பாங்க. யாரா இருந்தாலும் உண்மையான குடும்பம்னு நம்பிருவாங்க. அப்படி இருக்கும் அவங்க பர்ஃபாமன்ஸ். இப்படி ஒரே டெக்னிக், ஒரே டீமை வெச்சுக்கிட்டுதான் தொடர்ந்து ஏமாத்துறான். என்னையும் அப்படி ஏமாத்தித்தான், மூணு மாசத்துக்குப் பிறகு பணத்தை எடுத்துக்கிட்டு ஓடினான்’’ என்று வேதனைப்பட்டார்.
வின்சென்ட் பாஸ்கர் பிடிபட்டது எப்படி எனக் கேட்டோம்... ‘‘ஏற்கெனவே பாதிக்கப்பட்ட அஞ்சு பெண்களும் அவமானம் கருதி போலீஸ்கிட்ட புகார் கொடுக்கலை. அதைத் தனக்குச் சாதகமாக்கிக்கிட்டவன், ஆறாவதாகவும் கல்யாணம் செஞ்சிருக்கான். ஆனா, அந்தப் பெண்ணோட அப்பா போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன்கிட்ட புகார் கொடுத்துட்டார். அவர், உடனடியாகத் தனிப்படை அமைச்சு விசாரணைக்கு உத்தரவிட்டாரு. எங்களோட விசாரணையில அவன் கயத்தாறு பகுதியில தங்கியிருந்தது தெரியவந்தது. அந்த வீட்டுக்குத் தேடிப் போனப்ப, அவனோட வயசான ரெண்டு பெண்களும் இருந்தாங்க. அதுவும் வெளியே ஏதோ விசேஷத்துக்குக் கிளம்பிக்கிட்டு இருந்தாங்க. அப்படியே மூணு பேரையும் கைது பண்ணிட்டோம். கூட இருந்த அந்த ரெண்டு பெண்கள் ஃபிளாரன்ஸும் தாமரைச்செல்வியும். இவங்களுக்கு உடந்தையா இருந்த புரோக்கர் இன்பராஜ் தலைமறைவாகிட்டான். அவனைத் தேடிக்கிட்டிருக்கோம்.
இதுல என்ன கொடுமைன்னா... இவங்ககிட்ட விசாரணை நடத்திக்கிட்டு இருந்தப்பவே, வின்சென்ட் பாஸ்கருக்கு ஒரு போன் வந்துச்சு. அதுல பேசினவர், ‘பொண்ணு பார்க்க வர்றதா சொல்லியிருந்தீங்களே... இன்னும் வரலையே’னு கேட்டாரு. அவருகிட்ட, இந்த மோசடிக் கும்பலைப் பத்திச் சொன்னதும், பதறிப்போயிட்டாரு. அப்பதான் எங்களுக்கே தெரிஞ்சுது, ஏழாவது கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கத்தான் அவங்க வெளியே கிளம்பிக்கிட்டு இருந்தாங்கன்னு’’ என்றார்கள் தனிப்படை போலீஸார்.

நெல்லை மாநகரக் காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமாரிடம் பேசினோம். ‘‘குற்றவாளிகளைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம். ஆறு பெண்கள் மட்டுமல்லாமல், மேலும் சில பெண்களையும் திருமணம் செய்து அவன் ஏமாற்றியிருக்க வாய்ப்பிருப்பதாகச் சந்தேகப்படுகிறோம். அதனால், நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் அவனிடம் விசாரணை நடத்துவோம்’’ என்றார்.
ஒரு மோசடிக்காரன், ஆறு திருமணங்கள் செய்து கொள்ளையடித்துச் சென்றுவிட்டு, ஏழாவது திருமணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்திருக்கிறான் என்றால், நாம்தான் எவ்வளவு ஏமாளிகள்?!
உஷார் மக்களே!