சமூகம்
Published:Updated:

மணப்பெண் கிடைக்காமல் திண்டாட்டம்... மோசடிக் கும்பலுக்கு கொண்டாட்டம்...

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

கொங்கு மண்டலத்தில் புதிய பிரச்னை!

ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கோவை மாவட்டங்களில் 40 வயதைக் கடந்தும், திருமணம் ஆகாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இவர்களைக் குறிவைத்து மோசடி செய்யும் கும்பல்களும் அதிகரித்திருப்பது கொங்கு மண்டலத்தின் புதிய தலைவலியாகிவருகிறது.

இந்தத் திருமண மோசடிக் கும்பலால், அண்மையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள, கோயில்பாளையம் புதூரைச் சேர்ந்த 43 வயதான பழனிசாமியும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏமாற்றப்பட்டிருக்கிறார். இது குறித்துப் பேசுகிற பழனிசாமியின் தம்பி, ‘‘என் அண்ணனுக்குப் பெண் பார்க்குமாறு கார்த்தி என்ற திருமண புரோக்கரை அணுகினோம். ‘பழனிசாமிக்கு 43 வயதாகிவிட்டதால், இனிமேல் பெண் கிடைப்பது சிரமம். எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் ஏற்கெனவே திருமணமாகி, கைக்குழந்தையுடன் தனியே சிரம வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். அவரை பழனிசாமிக்குப் பெண் பார்க்கலாமா?’ என்று கேட்டார். நாங்களும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டோம்.

மணப்பெண் கிடைக்காமல் திண்டாட்டம்... மோசடிக் கும்பலுக்கு கொண்டாட்டம்...

எங்கள் ஆர்வத்தைப் பார்த்து, ‘பெண்ணுக்கு, மாப்பிள்ளை வீட்டார்தான் நகை போட வேண்டும். கல்யாணச் செலவு முழுவதையும் மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்றெல்லாம் கண்டிஷன் போட்டார். தவிர, பெண் பார்த்துக் கொடுத்ததற்கான புரோக்கர் கமிஷனாக இரண்டரை லட்சம் ரூபாயையும் முன்கூட்டியே வாங்கிக்கொண்டார்.

திருமணம் நடந்து சில தினங்களிலேயே மணப்பெண் லீலாவதி, பழனிசாமி தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்றும் மிரட்ட ஆரம்பித்துவிட்டார். சந்தேகமடைந்த நாங்கள், லீலாவதியின் நடவடிக்கைகள் குறித்தும், புரோக்கர் கார்த்தி மீதும் போலீஸில் புகார் கொடுத்தோம்” என்றார்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரணை நடத்திய பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகத்திடம் பேசியபோது, ‘‘நாங்கள் விசாரித்த வரை இந்த வழக்கு வேறு மாதிரியாக இருக்கிறது. அதைப் பத்திரிகைகளில் பகிர்ந்துகொள்ள முடியாது. எனக்கு உடல்நலம் சரியில்லை. எனவே, இப்போது என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்’’ என்று கூறி தொடர்பைத் துண்டித்தார்.

இந்த நிலையில் குன்னத்தூர், தோட்டத்துப்பாளையம், பங்களாபுதூர் பகுதிகளிலும் இதே போன்று மோசடித் திருமணத்தை திருமண புரோக்கர் கார்த்தி நடத்தியிருப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் வந்தன. பெருந்துறை காஞ்சிகோயில் அருகே ஆடு வளர்த்துவரும் செல்லம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் மகன் திருமணத்துக்காகத் திருமண மோசடிக் கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாந்துபோனது குறித்து நம்மிடம் பேசினார்.

‘‘என்னுடைய மூத்த மகனுக்கு 39 வயதாகியும் திருமணமாகவில்லை. இதை அறிந்து எங்களைத் தொடர்புகொண்ட திருமண புரோக்கர் கார்த்தி, என் பையனுக்கு பெண் பார்த்துத் தர புரோக்கர் கமிஷனாக ரூ.2 லட்சம் கேட்டார். கஷ்டப்பட்டு ஆடு மேய்த்து, கிடைத்த வருமானத்தில் கார்த்திக்கு கமிஷன் பணம் ரூ.2 லட்சம் கொடுத்தேன். இதையடுத்து சிவகாசியைச் சேர்ந்த ஏழைப் பெண் என்று பிரியா என்றொரு பெண்ணை அழைத்து வந்தார். அவர் கூறியதை நம்பி நானும் அந்தப் பெண்ணை என் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தேன். ஆனால், புதன்கிழமை திருமணமாகி, வெள்ளிக்கிழமையே அவள், ‘என் மகனுடன் வாழ மாட்டேன்’ என்று கூறி வீட்டைவிட்டுப் போய் விட்டாள்’’ என்றார் கண்ணீருடன்.

கார்த்தி, சின்னசாமி
கார்த்தி, சின்னசாமி

இதையடுத்து புரோக்கர் கார்த்தியிடம் விளக்கம் கேட்டுப் பேசினோம். ‘‘இதோ இப்போ கூப்பிடுறேன்’’ என்று கூறி நமது அழைப்பைத் துண்டித்தவர், சிறிது நேரத்தில் அவரின் வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் என்பவரோடு கான்ஃபரன்ஸ் காலில் நம்மிடம் பேசினார். அப்போது, ‘‘இந்தப் பிரச்னை களுக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும் பிரச்னை வந்த பிறகு, புரோக்கர் கமிஷனாக வாங்கிய பணத்தை நான்கைந்து இடத்திலும் திருப்பிக் கொடுத்துவிட்டேன்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட ஸ்ரீகாந்த், ‘‘நீங்கள் எங்களைப் பற்றித் தவறாக எழுதினால் மானநஷ்ட வழக்கு தொடருவோம்’’ என்று மிரட்டலாகக் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்தார்.

இது பற்றி நம்மிடம் பேசிய பொதுமக்கள் சிலர், “கொங்கு மண்டலத்தில், குறிப்பாக கிராமத்திலேயே தங்கிவிட்ட மணமகன்களுக்குப் பொருத்தமான மணப்பெண்கள் கிடைப்பதில்லை. இவர்கள்தான் மோசடிக் கும்பலின் முதல் குறி. திருமணத்துக்குள் எவ்வளவு சுருட்ட முடியுமோ சுருட்டிவிட்டு, திருமணமான ஓரிரு நாளிலேயே மணப்பெண் வீட்டைவிட்டே போய்விடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. சில பெண்களும், புரோக்கர்களும் இதைத் தொழிலாகவே செய்கின்றனர்” என்றனர்.

திருமண மோசடிக் கும்பல் குறித்துப் பேசுகிற கொங்கு திருமண தகவல் மையத்தின் தலைவர் சின்னசாமி, ‘‘சமீபகாலமாக, திருமண மோசடிக் கும்பலிடம் ஏமாறுபவர்களில் பெரும்பாலானோர் குடும்ப மானம், மரியாதையை நினைத்து விஷயத்தை மூடி மறைக்கத்தான் பார்க்கிறார்கள். அப்படியே புகார் கொடுத்தாலும், வாங்கிய கமிஷனில் ஒரு பங்கை போலீஸுக்கும் வக்கீலுக்கும் கொடுத்து தப்பித்துவிடும் மோசடி புரோக்கர்கள், தைரியமாக அடுத்த ஏமாற்று வேலைக்குத் தயாராகிவிடுகிறார்கள். மக்கள்தான் விழிப்பாக இருக்க வேண்டும்’’ என்றார் அவர்.

வயது வந்தோர் தங்களுக்குப் பொருத்தமான இணையைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்ள பெற்றோர் உதவினாலே, இப்படிப்பட்ட மோசடி புரோக்கர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்!