ஆரோவில் கன்சல்டிங் குரூப் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் மார்டின் ஷெஃப்லெர் (Martin Scherfler), கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சூழலியல் மற்றும் சமூகரீதியிலான அக்கறை மிகுந்த வளர்ச்சி குறித்த ஆலோசனைகளை எப்படி முன்னெடுத்து செல்வது என்ற நோக்கத்துடனேயே செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரியாவைச் சேர்ந்த இவர், 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்தார். அதன்பின் அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்தியாவை தன்னுடைய இரண்டாவது தாயகமாகக் கருதிச் செயல்பட்டு வருகிறார். இந்தியாவில், ஆற்றல்துறைதான், மிகப்பெரிய சூழலியல் சேதங்களை விளைவிக்கும் தொழில் துறைகளில் முதன்மைப் பங்கு வகிக்கிறது.

ஆரோவில் கன்சல்டிங் குரூப் என்ற குழுவை 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியவர், பல தன்னார்வ அமைப்புகள், மாநில அரசு ஆகியவற்றோடு இணைந்து, நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை சார்ந்த, சூழலுக்கு இசைவான வளர்ச்சித் திட்டங்களை வகுப்பதில் உதவி வருகிறார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில், குறிப்பாக சூரிய மின் சக்தி உற்பத்தி துறை, மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல் தமிழ்நாட்டில் அவ்வளவு எளிமையான வகையில் இல்லை. ஆனால், தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கே முன்னோடியாக வரமுடியும் என்கிறார் மார்ட்டின் ஷெஃப்லெர். அதுகுறித்த அவருடனான நேர்காணல் இனி...
ஆஸ்திரியாவில் பிறந்து வளர்ந்த நீங்கள், ஆரோவில்லுக்கு வந்து சேர்ந்தது எப்படி?

``மத்திய ஆஸ்திரியாவிலுள்ள வால்ட்ஸெல் என்ற சிறிய கிராமத்தில்தான் நான் வளர்ந்தேன். அங்கிருந்து நான் ஆரோவில்லை வந்தடைந்தது ஒரு பெரிய கதை (சிரிக்கிறார்). 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில், சில நண்பர்களோடு இந்தியாவுக்கு சாலை வழிப் பயணத்தை மேற்கொள்ள முயன்றேன். அப்போது அந்த முயற்சி வெற்றியடையாததால், மற்ற பல முயற்சிகளுக்குப் பிறகு, மகா கும்ப மேளாவைப் பார்ப்பதற்காக எப்படியோ இங்கு வந்து சேர்ந்தேன். அந்தப் பயணத்துக்குப் பிறகு, நான் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் விதத்தில் தயாராகிவிட்டிருந்தேன். அந்த முதல் பயணத்தின்போதே ஆரோவில்லுக்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் ஆரோவில் வந்தேன். ஆனால், இந்த முறை இங்கேயே தங்கிவிட்டேன்.
ஆரோவில் கன்சல்டிங் குரூப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். அதைத் தொடங்க வேண்டும் என்று எப்போது தோன்றியது?

ஆரோவில் கன்சல்டிங் குரூப் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரோவில்லில் இருந்த சிலரோடு சேர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, இங்கிருக்கும் இளம் திறமைசாலிகளுக்கு அர்த்தமுள்ளதாக, அதேநேரம், அவர்களுடைய திறமைகளுக்குச் சவாலான வாய்ப்புகளை வழங்கக்கூடிய கன்சல்டிங் சேவையைத் தொடங்கினால் என்னவென்று எங்களுக்குத் தோன்றியது. அதேநேரம், ஆரோவில்லுக்கும் வெளியுலகுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்துக்கான ஓர் அமைப்பும் எங்களுக்குத் தேவைப்பட்டது. ஆரோவில் கன்சல்டிங் குரூப் இந்த இரண்டையுமே செய்வதற்கான ஒரு முயற்சிதான்.
கடந்த 11 ஆண்டுகளில், 300 பேருக்கும் அதிகமானோர் இந்தக் குழுவின் மூலம் இணைந்து, நாடு முழுக்க எண்ணற்ற சூரிய மின் ஆற்றல் கொள்கைகள் வகுக்கப்படுவதில் பங்கு வகித்துள்ளனர். அதுபோக, இன்னும் பல எதிர்கால புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களிலும் பணிபுரிந்து வருகிறார்கள். இதை ஆரோவில்லின் சில கூறுகளுடைய இயற்கையான விரிவாக்கம் என்றுகூடச் சொல்லலாம்.
ஆரோவில் கன்சல்டிங் குரூப் பணியாற்றிய திட்டங்களில் சிலவற்றைப் பற்றிச் சொல்ல முடியுமா?

கடந்த 11 ஆண்டுகளில், எங்கள் பங்குதாரர் நிறுவனங்களோடு இணைந்து, இந்தியா முழுக்கவுள்ள பல சூரிய மின் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிப்பு செய்துள்ளோம். உதாரணத்துக்கு, தமிழ்நாடு சூரிய மின் கொள்கை 2012. இந்தியாவில் சூரிய மின்சாரத்துக்கான நெட் மீட்டரிங் முறை கொண்டுவரப்பட்ட முதல் சூரிய மின் கொள்கையாக இதைக் கூறலாம். இதில் எங்களுடைய பங்களிப்பும் இருக்கிறது. அதேபோல், புதுச்சேரி, டெல்லி மற்றும் ஒடிசாவிலும் சூரிய மின் கொள்கைகளைத் தீட்டுவதிலும் 2019-ம் ஆண்டுக்கான சூரிய மின் கொள்கைகளை உருவாக்குவதிலும் பங்களித்துள்ளோம்.
இப்போது கைவசம் சோதனை நிலையில் பல திட்டங்கள் உள்ளன. அதில் நான் மிகவும் ஆர்வமாக இருப்பது, ஆரோவில்லுக்கான ஸ்மார்ட் மினி-க்ரிட் திட்டம். இது எதிர்காலத்தில் எங்கு வேண்டுமானாலும் உருவாக்கப்படும் வகையில் இருக்கும் என்று நம்புகிறேன். அதோடு, சூரிய மின் சக்தியைப் பொறுத்தவரை, அதை எங்கு நாம் பயன்படுத்தப்போகிறோமோ அங்கேயே அதை உற்பத்தி செய்துகொள்ளும் வகையில் இருப்பதன் மூலம் இதை எளிய முறையில் சாத்தியப்படுத்த முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், செயல்திறன் மிக்க பசுமை ஆற்றல் வளர்ச்சியை அடைவதில் இருக்கும் தடைகள் என்ன?

உற்பத்தி மையங்கள் எந்தளவுக்கு அமைக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் வளர்ச்சியைக் கணக்கிடுவது சரியாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். ஆற்றல் பயன்பாட்டு விகிதத்தில் அது எந்தளவுக்குப் பங்கு வகிக்கிறது என்பதைப் பொறுத்தே அதைக் கணக்கிட வேண்டும். மேலும், ஆற்றல் உற்பத்தியை ஒருபுறம் வைத்துவிட்டுப் பார்த்தால், வெளிப்படையாக நாம் கவனிக்க வேண்டிய இன்னும் பல காரணிகள் இருப்பது தெரியவரும். அதில் முதன்மையானது ஆற்றல் பாதுகாப்பு. அதாவது, என் தேவைகள் எதையும் குறைத்துக்கொள்ளாமலே, அதற்குத் தேவைப்படும் ஆற்றல் அளவைக் குறைத்து பயன்படுத்திக் கொள்ளுதல். சரி, நான் எப்படி குறைவான ஆற்றல் பயன்பாட்டை அடைவது?
தமிழ்நாட்டில் ஆற்றல் பாதுகாப்பு கட்டுமானக் குறியீடு (Energy Conservation Building Code, ECBC) இதுவரை அமல்படுத்தப்படவில்லை. ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதை உடனடியாகக் கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பசுமை ஆற்றலுக்கு மாறுவதை மக்களுக்கு எளிமையானதாக மாற்றக்கூடிய ஏதேனும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் இருக்கின்றனவா?

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்தின், விவசாயிகள் சூரிய பம்பு செட்டுகள் அமைப்பது, சூரிய மின் பயன்பாட்டுக்கான கட்டமைப்பை அமைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கான திட்டம், நுண்-பாசன திட்டங்களுக்கு சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுதல், இதர புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மையங்கள் அமைக்கும் திட்டங்கள் (PM KUSUM-C) ஆகிய அனைத்துத் திட்டங்களையும் ஒன்றாக இணைத்து ஒரே திட்டமாக்க வேண்டும். KUSUM-C என்ற திட்டத்திலுள்ள சிக்கலாக, அதீத நிலத்தடி நீர் பயன்பாடு சொல்லப்படுகிறது. நுண்-பாசனத் திட்டங்களில் நீர்ப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் ஊக்கத்தொகை அளிப்பது, பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் திட்டங்களை பிரபலப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், அந்தப் பிரச்னையைச் சரிசெய்ய முடியும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் மாநில அரசு இந்த மூன்று விஷயங்களை உடனடியாகச் செய்தாக வேண்டும் என்றால், எதையெல்லாம் செய்ய வேண்டும்?
முதலில், போக்குவரத்துத் துறையில் மின் வாகனங்களுக்கு அதிக அளவிலான முக்கியத்துவம் அளித்து, ஊக்குவிக்க வேண்டும். அடுத்ததாக, சமையல் இயந்திரங்களை மின்சாரமயப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு, புதைபடிம எரிபொருளைப் பயன்படுத்தும் காஸ் சிலிண்டர் அடுப்புகளுக்குப் பதிலாக, மின் அடுப்புகளைப் பயன்படுத்துவது போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். அடுத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் மிகவும் வலிமையான திட்டமிடுதல், மையப்படுத்தப்படாத உற்பத்தி மையங்கள் என்று தீவிரமாக அதன் உற்பத்தியை முன்னெடுக்க வேண்டும். இதை ஒருபுறம் செய்துகொண்டே நிலக்கரி பயன்பாட்டிலிருந்து முற்றிலுமாக வெளியேறுவதற்கான திட்டத்தையும் தீட்ட வேண்டும்.

மாநில அரசு, சூரிய மின் சமூகங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தலாம். அதாவது, ஏற்கெனவே பயன்பாட்டிலிருக்கும் சூரிய மின் உற்பத்தி மையங்களுக்கு மானியம் வழங்குவது போக, மக்கள் சமூகங்களுக்கு என மொத்தமாகப் பெரியளவில் சூரிய மின் உற்பத்தி மையம் அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம், மக்கள் பயனடைவதோடு, மின் உற்பத்திக்கு ஆகும் செலவையும் குறைக்க முடியும். இறுதியாக, தமிழ்நாடு அதன் சொந்தத் தேவைகளைத் தாண்டியும் திட்டமிட வேண்டும். காற்றாலை, சூரிய மின் உற்பத்தியில் தமிழ்நாடு வெளி மாநிலங்களுக்கும் உற்பத்தி செய்து விநியோகிக்கும் வகையில் வளரமுடியும். அதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவதன் மூலம், மற்ற மாநிலங்களுக்கும் தமிழ்நாடு முன்னோடியாக வர முடியும்.
- சிபி அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் ஆகியவை குறித்து எழுதி வரும் பத்திரிகையாளர், @sibi123/Twitter.