மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி (34). பிரபல செய்தித்தாள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்த ஆஷிஷ் யெச்சூரிக்குக் கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, குருக்கிராமிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஆசிஷ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆஷிஷ் யெச்சூரி இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் மூத்த மகனின் இறப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதில், ``எனது மூத்த மகன் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் இன்று காலை உயிரிழந்துவிட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு நம்பிக்கை அளித்து, எனது மகனுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் என அனைவரும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்த ஆஷிஷ் யெச்சூரி சென்னையில் அமைந்துள்ள ACJ கல்லூரியில் தனது இதழியல் பட்டப்படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.