நெல்லை மாநகரில், சாலைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. அதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சாலைகளில் இருக்கும் குழிகளில் விழுந்து கை கால்களை முறித்துக்கொள்ளும் சம்பவங்களும் அதிக அளவில் நடக்கின்றன.

நெல்லை மாநகரில் இருக்கும் சாலைகளில் பயணிக்கவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தென்காசி, ஆலங்குளம், முக்கூடல் உள்ளிட்ட நகரங்களிலிருந்து நெல்லைக்கு வருவதற்கே அச்சப்படும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
நெல்லை மாநகராட்சியில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள், பாதாளச் சாக்கடைப் பணிகள், குடிநீர் திட்டப் பணிகள் என அனைத்தும் ஒரே நேரத்தில் நடப்பதுடன், அனைத்துச் சாலைகளும் ஒரே சமயத்தில் தோண்டப்பட்டுக் கிடப்பதால், மாற்றுச் சாலையைப் பயன்படுத்தக்கூட வழியில்லாத நிலையில் வாகன ஓட்டிகள் திணறுகிறார்கள்.

மாநகரத்தின் பிரதான சாலைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோண்டப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் கிடக்கின்றன. தற்போது வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் தீவிரமாகியிருப்பதால், சாலைகளின் நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது.
சாலைகளைச் சீரமைத்து மக்கள் சிரமமின்றி பயணங்களை மேற்கொள்ள வழிவகை செய்ய வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சியினரும் மாநகராட்சி நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இருப்பினும், சாலைகள் தற்காலிகமாகக்கூட சீரமைக்கப்படவில்லை. அதனால், மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தக் கட்சியினர், புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி, நீண்ட பதாகையில் மாநகரச் சாலைகளின் மோசமான நிலையைச் சித்திரிக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அந்தப் புகைப்படங்களைப் பொதுமக்கள் வேதனையுடன் பார்த்துச் சென்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சிச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் நம்மிடம் பேசுகையில், ``நெல்லை மாநகரச் சாலைகள் அனைத்தும் போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லை. எனவே, அவற்றைச் சீரமைக்கக் கோரி பலமுறை நாங்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், பேசியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால்தான் போராடவேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.

நெல்லை மாநகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இந்தப் பணிகளை விரைவாக முடித்து சாலைகளைச் சீரமைக்க வேண்டும். அத்துடன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் நெல்லை தாலுகா குழு உறுப்பினரான ராஜேஷ், ``நெல்லை மாநகரத்தில் இருக்கும் எல்லா சாலைகளும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காகத் தோண்டப்பட்டு, பாரமரிப்பு இல்லாமல் கிடக்கின்றன. இந்தச் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால், சாலைகளைச் சீரமைக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மூன்று மாதங்களில் சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனாலும்கூட மாநகராட்சி நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதனால் சேதமடைந்த சாலைகளின் நிலைமையைத் தெரியப்படுத்தும் வகையில் புகைப்படங்களாக எடுக்கத் தொடங்கினோம். அவற்றை நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது புகைப்படக் கண்காட்சி நடத்தி அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தோம். இதையெல்லாம் பார்த்த பிறகாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``நெல்லை மாநகரில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பணிகள் முடிந்ததும் சாலைகள் சரிசெய்யப்படும்" என்றார்கள்.