நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. மழை காரணமாக ஒருசில இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டுவருகிறது. நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இந்த நிலையில், குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை நந்தகோபாலா பாலம் அருகில் இன்று மதியம் பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது. ராட்சதப் பாறைகள் சாலையில் உருண்டு விழத்தொடங்கின.

தீடீரென மரங்கள் சாய்வதைக் கண்டு சுதாரித்துக்கொண்ட வாகன ஓட்டுநர்கள் முன்கூட்டியே வாகனத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கபட்ட நிலையில், மூன்று மணி நேரம் மாற்றுப்பாதையில் போக்குவரத்தைத் திருப்பியுள்ளனர்.
இந்த மண்சரிவு குறித்து நம்மிடம் பேசிய காட்டேரிப் பகுதி மக்கள், ``இந்தப் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் பெரிய அளவில் நடைபெற்றுவருகின்றன. நேற்று மாலை நல்ல மழை பெய்தது. மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது. பாறைகள் சரியும் ஆபத்தான பகுதி என ஏற்கெனவே இந்தப் பகுதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மீட்புப்பணிக்கு நெடுஞ்சாலைத்துறையினர் வரவில்லை. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து போக்குவரத்தைச் சீர்செய்தனர். வாகனப் போக்குவரத்து அதிகம் இருந்திருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். சரியும் நிலையில் இருக்கும் பாறைகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.