
மார்க்கெட்டில் எல்லாவிதமான மருந்துகளும் தட்டுப்பாடில்லாமல் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அரசு மருத்துவமனையில் மட்டும் தட்டுப்பாடு என்றால் எங்கோ தவறு நடக்கிறது என்றுதான் பொருள்.
ஐயாயிரத்து நூறுக்கும் அதிகமான அரசு மருத்துவமனைகளைக்கொண்ட தமிழ்நாட்டில், எல்லாப் பக்கமும் எதிரொலிக்கும் ஒற்றைப் புலம்பல், ‘மருந்துத் தட்டுப்பாடு!’ கூடவே, “இது செயற்கையான தட்டுப்பாடு... யாரோ சிலர் பயன்பெற மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்” என்ற குற்றச்சாட்டும் எழுந்திருப்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டியது.
மருந்துத் தட்டுப்பாடு...
தமிழ்நாடு சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்திடம் இது குறித்துப் பேசினோம். “இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழகத்தில்தான் 27 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் தொடங்கப்பட்டு, குறைந்த செலவில் தரமான மருந்துகள் மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டுவருகின்றன. கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் இருக்கும் மருந்து குடோனில் சேமித்துவைக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில்தான் கொள்முதல் செய்யப்படுகின்றன.

பொதுவாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில்தான் மருந்துகளுக்குக் கொஞ்சம் தட்டுப்பாடு ஏற்படும். உடனடியாக அடுத்த கொள்முதலும் தொடங்கிவிடும். ஆனால், இந்த முறை ஆகஸ்ட்டிலிருந்தே தட்டுப்பாடு தொடங்கி விட்டது. இதற்கான காரணம் தெரியவில்லை. ஓரிடத்தில் ஆன்டிபயாடிக் இல்லை; மற்றோர் இடத்தில் பாரசிட்டமால் இல்லை; இன்னோர் இடத்தில் ஊசி மூலம் ஏற்றப்படும் மருந்து இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார - மாவட்ட மருத்துவமனைகள், பொது மருத்துவமனைகள் என அனைத்து மட்டங்களிலும் பற்றாக்குறை நிலவுகிறது. மருந்து கொள்முதலில், அங்கீகரிக்கப்பட்டவை, அங்கீகரிக்கப்படாதவை (Approved, Non-Approved) என இரு வகைகள் உள்ளன. நான்-அப்ரூவ்டு என்றால், `வாங்கவே கூடாதவை’ என்று பொருளல்ல. அரிதாகத் தேவைப்படும் மருந்துகள், அந்தப் பட்டியலில் இருக்கும். அவற்றை ‘லோக்கல் பர்ச்சேஸாக’ வாங்கிக்கொள்வார்கள். இப்போதைய பற்றாக்குறையைச் சமாளிக்க, நான்-அப்ரூவ்டு பட்டியலின்படி மருத்துவமனைகளே கொள்முதல் செய்துகொள்ளலாம் என்று சொல்லியிருக் கிறார்கள். அப்படி வாங்குவதற்கு ஒவ்வொரு மருத்துவமனைக்கும் பெரிய தொகை தேவை. அது பற்றிக் கேட்டால், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட நிதியைப் பயன்படுத்திக்கொள்ளச் சொல்கிறார்கள்.
டீலிங் பேசும் ஆளுங்கட்சிப் பிரமுகர்!
அப்படி லோக்கல் பர்ச்சேஸ் செய்யும்போது மருந்துகளுக்கான தொகையும் கூடுதலாகிறது, தரத்தையும் உறுதிப்படுத்த முடிவதில்லை. பற்றாக்குறை நிலவுகிறபோது, வரும் நோயாளிகளுக்கு மருந்துகள் இல்லையென்று அரசு மருத்துவர்கள் சொல்வதிலும் பல பிரச்னைகள் உள்ளன. குறிப்பிட்ட மருந்துகள் இல்லையெனில், வேறு மருந்துகளைக் கொடுக்கச் சொல்கிறார்கள். அதுவும் ஆபத்தானது. பிரச்னை அரசிடம் இருக்கையில், மருத்துவர்களைக் குறை சொல்கிறார்கள். 27 ஆண்டுகளாக ரொட்டீனாக நடந்துவரும் நிகழ்வில் திடீரென பிரச்னை எழுந்திருப்பதால், இது செயற்கையான தட்டுப்பாடு போன்றுதான் தோன்றுகிறது. பின்னணியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை” என்றார்.
பெயர் குறிப்பிட விரும்பாத அரசு மருத்துவர் ஒருவர் நம்மிடம், “மார்க்கெட்டில் எல்லாவிதமான மருந்துகளும் தட்டுப்பாடில்லாமல் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அரசு மருத்துவமனையில் மட்டும் தட்டுப்பாடு என்றால் எங்கோ தவறு நடக்கிறது என்றுதான் பொருள். ஆட்சி மேலிடப் புள்ளி ஒருவர், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் டீலிங் பேசிவருவதே டெண்டர் தாமதமாவதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. டாம்ப்கால் (TAMPCOL) மூலமாக சித்தா மருந்துகளை எவ்வாறு தமிழக அரசே உற்பத்தி செய்கிறதோ, அதேபோல தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலம் அடிப்படையான, நவீன மருந்துகளை அரசே உற்பத்தி செய்ய வேண்டும். அப்போது இந்த மாதிரியான பிரச்னைகள் வராது” என்றார்.
மக்களைத் தேடி மருத்துவம்?
இந்தப் பிரச்னையை அரசியல்ரீதியாக முன்னெடுத்துவரும் மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம். “திட்டமிடல் தோல்வி, மறைமுகமாகத் தனியார் மருத்துவமனைகளை நோக்கி நோயாளிகளைத் தள்ளக்கூடிய செயல் இவைதான் இங்கு நடந்துவருகின்றன. இத்தனை ஆண்டுகளில் இப்படியான தட்டுப்பாடு வந்ததில்லை. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்கிறார்கள். மக்கள் உங்களைத் தேடி வந்தாலே மருந்துகள் கொடுப்பதில்லையே! ஏதோ ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் கிடைக்க வேண்டும் என்கிற காரணம்கூட இருக்கலாம். யாரோ ஒருசிலர் பின்புலத்திலிருந்து பயன் பெறுவதற்காக, ஒட்டுமொத்தத் தமிழக மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகச் செயலாளர் தீபக் ஜேக்கப்பிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது என்பது மிகத் தவறான தகவல். 340 வகையான அத்தியாவசிய மருந்துகள் இருக்கின்றன. இவற்றில் ஐந்து வகை மருந்துகள் மட்டுமே உற்பத்தியாளர்களிடமிருந்து நமக்குச் சரியாக சப்ளை ஆகவில்லை. கொரோனா பேரிடருக்குப் பிறகு, மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி குறைந்திருப்பதே இதற்குக் காரணம். ஒரு மருந்து கிடைக்கவில்லை யென்றால், அதற்கு மாற்றாக மற்றொரு மருந்து எப்போதுமே நம்மிடம் கையிருப்பில் இருக்கிறது. உதாரணமாக பாரசிட்டமால் 500 எம்.ஜி இல்லை யென்றால்... நம்மிடம் பாரசிட்டமால் 650 எம்.ஜி கையிருப்பு இருக்கும். எந்த மருந்தும் இல்லை என்ற நிலை என்றுமே ஏற்பட்டது கிடையாது. புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ஒரு சில சிறப்பு மருந்துகளைக் குறிப்பிட்ட அளவே மருத்துவ சேவைக் கழகம் கொள்முதல் செய்யும். மேற்கொண்டு தேவைப்படும் மருந்துகளை அந்தந்த மருத்துவமனைகள் காப்பீட்டுத் தொகையில் வாங்கிக் கொள்ளும். இது நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் நடைமுறைதான். மருத்துவமனைகளில் ஒரு மருந்து இல்லாததால், ஏதாவது ஒரு நோயாளி பாதிக்கப் பட்டார் என்பதை நிரூபிக்க முடியுமா... யாரோ சிலர் தவறான தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
நெருப்பில்லாமல் புகையாது... அணைக்கவேண்டியது அரசின் கடமை!