Published:Updated:

“தமிழ் மாணவர்கள் போராடுவது இந்திய மாணவர்களுக்காகவும்தான்!” - ‘நீயா நானா’ கோபிநாத்

“தமிழ் மாணவர்கள் போராடுவது இந்திய மாணவர்களுக்காகவும்தான்!” - ‘நீயா நானா’ கோபிநாத்
“தமிழ் மாணவர்கள் போராடுவது இந்திய மாணவர்களுக்காகவும்தான்!” - ‘நீயா நானா’ கோபிநாத்

“தமிழ் மாணவர்கள் போராடுவது இந்திய மாணவர்களுக்காகவும்தான்!” - ‘நீயா நானா’ கோபிநாத்

நீட் குறித்து, தான் நடத்தும் 'நீயா நானா' நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களிடையே ஒரு குறிப்பிட்ட அளவு கவனத்தை ஈர்த்தார் கோபிநாத். அனிதாவின் மரணத்துக்குப் பின் அவரின் வீட்டுக்குச் சென்றிருந்தார். தமிழகம் முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வரும் சூழலில் அவரிடம் பேசினோம். "தமிழக மாணவர்களின் போராட்டம் என்பதே இந்திய மாணவர்களுக்கான போராட்டம்தான்" என்ற கோபிநாத் மேலும் தொடர்ந்தார். 

"மாற்றம் எல்ல இடங்களில் நடக்கத்தான் செய்கிறது. அந்த மாற்றத்தை "தகுதி" "தரம் உயர்த்துதல்" போன்ற மறுக்கமுடியாத காரணங்களைச் சொல்லி வலிந்து திணிக்கிறார்கள். இங்கு இருக்கும் கவலை என்னவென்றால், சாமானியன் மருத்துவம் படிக்க வருவது என்பது ஏழைக்கு வாய்ப்பு கொடுப்பது என்றெல்லாம் இல்லை. அது சமூகத்தை சமநிலைப்படுத்துவது. அதுதான் இட ஒதுக்கீட்டில் முக்கியமான விஷயம். இங்கு உள்ள சிக்கல் என்னவென்றால்... ஒருவரைப் படிக்கச் சொல்கிறோம். 'நீ நன்றாகப் படித்து மதிப்பெண் வாங்கினால் மருத்துவப் படிப்பைப் படிக்கலாம்' என்று சொல்கிறோம். அவரும் நாம் சொன்னபடி பல ஆண்டுகள் நன்றாகப்படித்து நல்ல மதிப்பெண் வாங்குகிறார். அதற்குப் பின்னும் நாம் வேறு ஒரு வினாத்தாளைக் கையில் கொடுத்து இதில் தேர்ச்சி பெற்றால்தான் உனக்கு மேற்படிப்புக்கு அனுமதி என்று கூறுவது நியாயமற்ற செயல். ஒருவேளை இதே பாடத்திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு, அவர்கள் வெல்லவில்லை என்றால் நாம் ஏற்றுக்கொள்ளலாம். 

நீட் ஒரு தகுதி நுழைவுத்தேர்வு என்று வைத்துக்கொண்டால் கிராமப்புற மாணவர்கள், அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய மாணவர்கள் அதற்கான பயிற்சி பெற என்ன வழிமுறை இருக்கிறது? இதே நீட் தேர்வில் தற்போது வெற்றி பெற்றுள்ளவர்களில் இரண்டாவது முறை மற்றும் மூன்றாவது முறை முயற்சி செய்தவர்கள் நிறையப்பேர் உள்ளனர்.  காரணம் நீட் தேர்வில் வெற்றி பெற காலமும், பணமும் தேவையாக இருக்கிறது. ஒருமுறை தோற்றவர்கள் இரண்டாம் முறை படித்து எழுதக் காலமும், பணமும் தேவையாக இருக்கிறது. இங்கு பெரும்பாலான மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதே பெரும் சவாலாக உள்ளது. பணம் இருப்பவர்களை மட்டுமே நினைவில் கொள்ளக்கூடாது.

சமூகநீதி என்பது என்னைவிடப் பின்தங்கியுள்ளவன் குறித்தும் கவனத்தில் கொள்வது மட்டும்தான். நான் மட்டும் ஜெயித்துக்கொள்கிறேன் என்பது முதலாளித்துவம். படாத பாடுபட்டு பன்னிரண்டாவது தேர்ச்சியாகி வந்தவனுக்கு நீங்கள் புதிதாக ஒரு தேர்வை முன்வைக்கிறீர்கள். அதில் அவன் தோல்வியடைந்தவுடன் 'கவலைப்படாதே.. உனக்கு இன்னும் இரண்டு வாய்ப்பு உள்ளது. அடுத்த ஆண்டும் எழுதலாம்' என்று பெருந்தன்மையுடன் சொல்கிறீர்களே. அடுத்த ஓராண்டு முழுவதும் கோச்சிங் கிளாஸ் செல்வதற்கு அவன் என்ன உங்களைப் போன்ற குடும்பச் சூழலிலா இருக்கிறான்? அடுத்த ஓராண்டில் அவன் வாழ்க்கை  என்னவெல்லாம் ஆகும் என்று யாருக்குத் தெரியும். அவனிடம் போய் 'முயன்றால் முடியாதது இல்லை. என்று தன்னம்பிக்கை ஊட்டிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களை விட அதிக தன்னம்பிக்கை உள்ளதால்தான் கொசுக்கடியிலும், குடிசையிலும் இருந்து நீங்கள் கேட்கும் மதிப்பெண்ணை வாங்கி வந்திருக்கிறான். 

மதிய உணவை ஏன் கொண்டு வந்தோம்? பிள்ளைகள் சாப்பாட்டுக்கு எங்கே போவான். சாப்பாட்டைக் காரணம் காட்டி இவன் படிக்காமல் போய்விடக்கூடாது என்பதால்தான் மதிய உணவுத்திட்டமே கொண்டு வரப்பட்டது. இன்னமும் பெருவாரியான மாணவர்கள் மதிய உணவைச் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அரசு தரும் இலவச பஸ்  பாஸை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். குடும்பத்தின் வறுமையை வென்று, பசி வென்று, தந்தை இல்லாத, தாய் இல்லாத குடும்பங்களில் வளர்ந்து எனப் பலநெருக்கடிக்கு பிறகு அவன் பன்னிரண்டாம் வகுப்பு வென்று இருக்கிறான். இந்தப்பிள்ளைகளிடம் மீண்டும் பயிற்சியெடுத்து வெற்றி பெறலாம் என்று அறிவுரை சொல்லக்கூடாது. எந்த ஒரு சட்டமோ, ஒரு மாற்றமோ அது சாமானியனை பாதிக்கக்கூடாது. தகுதி உயர்த்தல் குறித்து யாரும் இரண்டாவது கருத்து வைக்கவில்லை. 

இந்தியா முழுவதும் நிறைய மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கு இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளை அந்தந்த மாநிலங்கள் அதிகரிக்க வேண்டும். அதற்கான கட்டமைப்பை மத்திய அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு 24 அரசு மருத்துவக்கல்லூரிகள் 13 தனியார் கல்லூரிகள் இது இல்லாமல் 10 தனியார் பல்கலைக்கழகம் கொண்டுள்ள தமிழகத்தின் கல்வி வளத்தில் பங்கு போட வருவது நியாயமே இல்லை. பகிர்தலுக்கும் விட்டுகொடுத்தலுக்கும் தமிழர்கள் என்றைக்கும் தயாராகத்தான் உள்ளனர். ஆனால் வெறுங்கையுடன் வருபவர்களுடன் எப்படி பங்குபோட முடியும்.

இது ஏதோ தமிழ்நாட்டின் பிரச்னை என்பது போல் சொல்லுகிறார்கள். மாற்றத்தையும் நவீனத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம் என்று ஜல்லிக்கட்டையும், நெடுவாசலையும், கதிராமங்கலத்தையும் உதாரணமாகக் காட்டி பேசுகின்றனர். மாற்றம் என்ன செய்யும் என்று படித்த சமூகத்துக்குத்தான் தெரியும். தமிழ்ச் சமூகம் நமக்கு அறிவுரை சொல்பவர்களை விடப் படித்த சமூகம். 

வலுவான உட்கட்டமைப்பு கொண்ட நம் மாநில மாணவர்களை விடுங்கள். ஜார்கண்ட், உத்ரகாண்ட், பீகார் தொடங்கி அங்கு இருக்கக்கூடிய மாணவர்கள் கோச்சிங் சென்டர் செல்ல முடியுமா? அவர்களுக்குக் கல்வியே சவாலாக இருக்கிறது. இங்கு வேலைக்கு வரும் வடமாநில இளைஞர்களின் கல்வித்தகுதி எந்த அளவில் இருக்கிறது. நமது மாணவர்கள் கூட இந்த ஆண்டுதான் ஏமாந்துவிட்டார்கள். அடுத்த ஆண்டு இதே  நீட் அமலில் இருந்தால், தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் கூட அசால்ட்டாக தேர்வை எழுதி பாஸ் ஆவார்கள். அறிவார்ந்த சமூகம் எல்லாப்பக்கமும் எழும் விளைவுகளையே யோசிக்கும். நாம் அவர்களுக்கும் சேர்த்துத்தான் போராடிக்கொண்டிருக்கிறோம். ஏதோ தமிழ் மாணவர்கள் சுயநலத்துடன் தங்களுக்காகப் போராடவில்லை. அப்பாவி வட மாநில மாணவச் சகோதரனுக்காவும்தான் வீதியில் போராடிக்கொண்டிருக்கிறான்.

யோசித்துப்பாருங்கள், இங்கு வந்து வடமாநில இளைஞர்களின் குடும்பங்களில் இருந்து ஒரு டாக்டர் உருவாகமுடியுமா? ஆனால் குடிசைகளில் இருந்து அனிதாக்கள் வருகிறார்கள். காரணம் இது தமிழ்நாடு. மாணவர்களின் இந்தப் போராட்டம் என்பது படிக்க வழியில்லாத, எளிய, தகுதியிருந்தும் படிக்க முடியாத இந்திய மாணவர்களுக்கான போராட்டத்தை தமிழக மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

இவர்களின் போராட்டம் என்பது நம்பிக்கை துரோகத்துக்கு எதிராக நடக்கிறது. 'பொறுப்பாகப் படி, டிவி பார்க்காதே, விளையாட்டில் கவனம் செலுத்தாதே' என்றெல்லாம் சொன்னோம். அதை எல்லாமே கேட்டு தன் பொழுதுபோக்குகளை, ஆசாபாசங்களை விட்டுக்கொடுத்துக் கண்விழித்து படித்து வந்தவனை மறித்து உனக்குத் தகுதி இல்லை என்று சொல்வது நம்பிக்கை துரோகமின்றி வேறு என்ன? 

‛இந்த ஆண்டு இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு நுழைவுத்தேர்வு எழுதலாம்தானே... அதற்கு ஏன் இவ்வளவு கோபம்’ என்று கேட்கின்றனர். இங்கு பெரும்பாலான வீடுகளில் பையன் படிக்கிறான் என்றுதான் வேலைக்கு அனுப்பாமல் இருக்கின்றனர். 'என் மகள் என்னதான் தப்பு பண்ணுச்சு" என்று அனிதாவின் அப்பாவின் கேள்விக்கு யாரிடம்தான் பதில் இருக்கிறது. இதை அவர் என்னிடம் கேட்ட போது என்ன சொல்லி தேற்றுவது என்றே தெரியவில்லை. 

இங்கு மாணவர்கள் சுயநலத்துடன் போராடவோ, சத்தம் போடவோ இல்லை. அவர்கள் தங்களுக்கும் சேர்த்து இந்திய ஏழை எளிய, வாய்ப்பற்ற மாணவர்களுக்காகப் போராடுகின்றனர். நீட்டின்  மூலம் தேர்வு செய்யப்படும் ஒருவர்தான் மருத்துவம் படிக்க தகுதியானவர் என்று எப்படி உறுதிப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. நீட் தான் முடிவு, அதில் மறுபரிசீலனை இல்லை என்கிறபோது, அடுத்த ஆண்டும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் மாணவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும். 

சமூகம் சமமாக மாறவேண்டும் என்று நினைக்கும், சமூக நீதி வேண்டும் என்று விரும்பும் சமூகம் இப்படித்தான் நடந்துகொள்ளும். எனவே தமிழக மாணவர்களின் போராட்டங்களில் அனைத்து நியாயமும் உள்ளது. 

இந்த நான்கு விஷயங்களை முக்கியமாகக் கூறவேண்டும் என்று நினைத்தேன். இவை எல்லாம் தாண்டி தமிழக மாணவர்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் 'நீங்கள் நன்றாகப் படிக்கிறீர்கள் என்றால் வாய்ப்பற்ற மாணவனுக்கு கை கொடுங்கள். சொல்லிக்கொடுங்கள். அவர்களையும் கை தூக்கிவிடுங்கள். தமிழனைப்போல் கல்விக்கு உதவுபவன் யாருமே கிடையாது. அது பொருளாதார உதவியாக இருந்தாலும் சரி அறிவு ரீதியாக இருந்தாலும் சரி'  போராட்டத்தில் தொடங்கி நீட்டை எதிர்கொள்வது வரை மாணவர்களின் கையில்தான் அனைத்துமே உள்ளது" என்றார் கோபிநாத்.

அடுத்த கட்டுரைக்கு