Published:Updated:

“நீட் தேர்வால் சிதைந்த கனவு!” ஏமாற்றத்தில் தறி ஓட்டும் மாணவர்

“நீட் தேர்வால் சிதைந்த கனவு!” ஏமாற்றத்தில் தறி ஓட்டும் மாணவர்
“நீட் தேர்வால் சிதைந்த கனவு!” ஏமாற்றத்தில் தறி ஓட்டும் மாணவர்

“நீட் தேர்வால் சிதைந்த கனவு!” ஏமாற்றத்தில் தறி ஓட்டும் மாணவர்

“எங்கப்பா இரவுபகல் பாராமல் கஷ்டப்பட்டுத் தறி ஓட்டி என்னைப் படிக்கவைத்தார். அதை உணர்ந்து நானும் கஷ்டப்பட்டுப் படித்து, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் நிறைய மதிப்பெண் எடுத்தேன். என் குடும்பத்தினரும், 'இனி குடும்பக் கவலை தீர்ந்துவிட்டது' என்று மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அதில் இடி விழுந்தாற்போல் நீட் தேர்வு நடத்தப்பட்டதால், எங்கள் குடும்பமே சோகமானது. என் கனவும் சிதைந்துபோனது'' என்கிறார் மாணவர் ரஜினி ரகு.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்துக்கு அருகே கே.கே.நகர் பகுதியில் உள்ள வீட்டில், தறி ஓட்டிக் கொண்டிருந்த ரஜினி ரகுவிடம் பேசினோம். ''எங்க அப்பா பேரு வடிவேல். அம்மா பெருமாயி. என் உடன் பிறந்தவர்கள் அக்கா கெளசல்யா, அண்ணன் அறிவழகன், நான் கடைக்குட்டி. எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானதாகும். சின்ன வயதில் இருந்தே நான் நன்றாகப் படிப்பேன். 'நீ டாக்டர் ஆக வேண்டும்' என்று என் குடும்பத்தினரும், கிராமத்தினரும் சொல்லிச்சொல்லியே வளர்ந்ததால், டாக்டர் ஆவது என் கனவாகவே இருந்தது. அப்பா, இரவுபகல் பாராமல் தறி ஓட்டி, அதில் கிடைக்கிற வருமானத்தைக் குருவி சேர்ப்பதுபோலச் சேர்த்து, எங்க கிராமத்துக்கு அருகில் உள்ள சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் என்னைப் படிக்கவைத்தார். நான் பத்தாம் வகுப்பில் 500-க்கு 497 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் மூன்றாம் இடம்பிடித்தேன். பத்தாம் வகுப்பில் நான் எடுத்த மதிப்பெண்ணால் என் கனவும், என் குடும்பத்தினர் கனவும் உறுதியாக நிறைவேறும் என்று நம்பிக்கொண்டிருந்தோம்.

ப்ளஸ்-டூ பொதுத்தேர்வில் 1,200-க்கு 1,190 மதிப்பெண்ணும், மருத்துவப் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணாக 199.5 மதிப்பெண்ணும் இருந்தது. நிச்சயம் எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என நம்பினேன். ப்ளஸ் டூ ரிசல்ட் வந்ததும் என் மார்க்கைப் பார்த்துவிட்டு, எங்க அப்பா ஒரு வாரமாகக் கஷ்டப்பட்டுத் தறி ஓட்டி வைத்திருந்த பணத்தை எடுத்து 'கேக்' வாங்கிவந்து, எங்க கிராமத்துக்கே கொடுத்து குதூகலம் அடைந்தார். “என் கவலையெல்லாம் தீர்ந்தது. பையன் டாக்டர் ஆயிடுவான்” என அக்கம்பக்கத்தினரிடமும், உறவினர்களிடமும் சொல்லி மகிழ்ந்தார். நானும் என் நண்பர்களிடம் எப்படியும் மெடிக்கல் சீட் கிடைத்துவிடும் எனச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

இந்தச் சூழ்நிலையில்தான், அரக்கன்போல உருவெடுத்தது 'நீட்' தேர்வு. 'இந்தத் தேர்வை எழுத வேண்டும்' எனச் சில அரசியல்வாதிகளும், 'எழுதத் தேவையில்லை' என வேறு சில அரசியல்வாதிகளும் சொல்லி, எங்கள் வாழ்க்கையில் விளையாடினார்கள். நாங்கள் குழப்பமான மனநிலையிலேயே நீட் தேர்வு எழுதுவதற்கான அறைக்குள் நுழைந்தோம். எங்கள் படிப்புக்குச் சம்பந்தமே இல்லாத கேள்விகளை எல்லாம் கேட்டிருந்தார்கள். தெரிந்ததை மட்டுமே எழுதி நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 201 மதிப்பெண் எடுத்தேன். எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை. இதனால் மிகவும் மனவேதனை அடைந்தேன். நான் டாக்டர் ஆக வேண்டும் என்ற என்னுடைய கனவும், என்னைவிட அதிகம் அக்கறை கொண்டிருந்த என் குடும்பத்தினரின் கனவுகளும் நீட் தேர்வு முறையால் சிதைந்துவிட்டது.

தற்போது என் குடும்பமே சோகமயமாகி விட்டது. ஏதோ வாழ்க்கைக்கு உயர்படிப்பு படித்தாக வேண்டும் என்பதற்காக, விரக்தியுடன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கிறேன். நீட் தேர்வு மூலம் மாநிலக் கல்வித் திட்டத்தைத் திட்டமிட்டு ஒழிக்க நினைக்கிறார்கள். நீட் தேர்வு தொடர்ந்து நடைமுறையில் இருந்தால் யாரும் மாநிலக் கல்வித் திட்டத்தில் படிக்கமாட்டார்கள். அப்படி மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தால் உயர் கல்விக்குப் போக முடியாத நிலை உருவாகும். ஏழை, எளிய மக்களின் மருத்துவக் கனவு சிதைந்துபோகும். அதனால் நீட் தேர்வு அவசியமில்லை'' என்றார்.

மாணவர்களின் கனவைச் சிதைப்பதுதான் ஓர் அரசாங்கத்தின் கடமையா?

அடுத்த கட்டுரைக்கு