Published:Updated:

மொழிப்போர் முதல் நீட் வரை... இளைஞர்கள் எழுச்சியின் காலக் கண்ணாடி!

மொழிப்போர் முதல் நீட் வரை... இளைஞர்கள் எழுச்சியின் காலக் கண்ணாடி!
மொழிப்போர் முதல் நீட் வரை... இளைஞர்கள் எழுச்சியின் காலக் கண்ணாடி!

திக்கம் திணிக்கப்படும்போதெல்லாம் காத்திரமான கிளர்ச்சியின் மூலம் அதை முறியடிக்க முயற்சி செய்த வரலாற்று மரபுக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள். 1938-ல் தொடங்கிய மொழிப்போராகட்டும், இன்று 2017-ல் நீட்டுக்கு எதிரான கல்விப் போராட்டமாகட்டும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் களமாடுதலில் முன்னணி சக்தியாக இருப்பது இளைய சமூகமே. இவர்கள் அணிதிரண்டு நடத்திய போராட்டங்கள் தமிழ்நாட்டு அரசியல், சமூக, பொருளாதார இயங்குதளத்தில் சாதித்ததும், அசைத்துப் பார்த்ததும் பல. எழுச்சிகர போராட்டங்களின் மூலம் பெற்ற உரிமைகளைக் கொண்டு, தமிழ்நாட்டை முன்னோக்கி நகர்த்திச் சென்றதில், அந்தந்த காலத்தின் இளைய சமூகத்தின் பங்கே பிரதானம். வரலாற்றுப் பயணத்தில் இன்று, இக்கணிப்பொறி கால இளைஞர்களை மீண்டும் ஒன்றிணைத்துள்ளார் ‘அனிதா’. அவருக்கான எழுச்சியை உள்வாங்க, ‘நடராசனி'ல் இருந்து தொடங்குவோமே.

மொழிப்போராட்ட எழுச்சி:

1938-ம் ஆண்டு, ஏப்ரல் 21-ம் நாள், சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை அப்போதைய சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்த ராஜாஜி அரசு வெளியிட்டது. இது, தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் எதிரான திணிப்பு என்று இதற்கு எதிராகத் திரண்டார்கள் பெரியார் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள். மறுபுறம், ‘பெண்கள் பங்கேற்பில்லாமல் எந்தப் போராட்டமும் வெற்றிபெற்றதில்லை’ என்று டாக்டர் தருமாம்பாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்ட தமிழர் உணர்வாளர்கள், திருச்சியில் இருந்து சென்னைக்கு  நடை பரப்புரையை மேற்கொண்டனர். 42 நாள்கள் நடந்தபடியே வழியெங்கும் இந்தித் திணிப்பை எதிர்த்த இவர்கள் பரப்புரை, பலத்த ஆதரவைப் பெற்றது. தமிழுணர்வை ஒடுக்கும்விதமாகப் பலரைச் சிறைக்குத் தள்ளியது ராஜாஜி அரசு. இதில், சிறையின் மோசமான சூழலால் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டார் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த நடராசன்.

‘மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்தால் விடுதலை செய்கிறோம்’ எனத் தூண்டில் போட்டது சிறை நிர்வாகம். ‘மன்னிப்பா..? நான் பெரியாரின் பெருந்தொண்டன். சுயமரியாதைக்காரன். சிறையில் செத்தாலும் சாவேனே தவிர, மன்னிப்பு கேட்கமாட்டேன்’ என முழங்கிய நடராசன், கடுமையான வயிற்றுவலியால் 1939 ஜனவரி 15-ம் தேதி உயிர்நீத்தார். அன்று ஒடுக்கப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த நடராசன் செய்த உயிர்த்தியாகமே, தமிழர் இன உணர்வுக்கான பொறியாக அமைந்தது. அதே ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி, தமிழுக்காகச் சிறை சென்ற தாளமுத்துவும், சிறையிலேயே உயிர்நீத்தார். நடராசன், தாளமுத்துவின் தியாகங்கள், இளையச் சமூகத்தை எரிமலையாகப் பற்றிக்கொண்டன. போராட்டங்கள் விஸ்வரூபம் எடுக்க, இறுதியாக ராஜாஜி அரசு பதவி விலகியது. 1940-ல் கட்டாய இந்தித் திணிப்பு ஒழிக்கப்பட்டு, ‘அது ஒரு விருப்பப் பாடமாக வேண்டுமானால் நடைமுறையில் இருக்கலாம்’ என்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மீண்டும், விடுதலைபெற்ற இந்தியாவில், 1953-ல் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார் முதலமைச்சரான ராஜாஜி. ‘முடிதிருத்துவோர் மகன் முடிதிருத்துவோராகவும், துப்புரவுப் பணி செய்பவர் மகன் துப்புரவுப் பணி மட்டுமே செய்ய வேண்டுமா?' என இதற்கெதிராக இளம் பட்டாளம் கொந்தளித்தது. இதற்கெதிராகக் கொழுந்துவிட்டு எரிந்த இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டங்களை, ‘நான்சென்ஸ்’ என்று விமர்சித்தார் அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு. மறுபுறம், தொடர்வண்டி நிலையங்களில் இந்திப் பெயர் பலகைகள் திணிக்கப்பட்டிருந்தன. இந்த மூன்றுக்கும் எதிராக மிகத்தீவிரமான போராட்டங்களை இளைய சமூகத்தினர் எடுத்துச் சென்றனர். அவர்களால் டால்மியாபுரம்,’கல்லக்குடி'யாக மாறியது. இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் மு.கருணாநிதி. போராட்டங்களைச் சமாளிக்க முடியாத ராஜாஜி, ‘போராட்டங்களைப் பெரியாரும், தமிழுணர்வாளர்களும்,தி.மு.க-வினரும் தூண்டிவிடுகின்றனர்’ என்ற விமர்சனங்களை முன்வைத்தார். ஆனாலும் வழக்கம்போல் போராட்டங்களே வெற்றிபெற்றன. இறுதியாக. ‘இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிறவரை இந்தி கட்டாயமில்லை’ என உறுதியளித்தார் நேரு.

1965 மொழிப் போராட்டம்:

அடிபட்ட பூனையாக மீண்டும் ஆட்சி மொழி மசோதா வடிவத்தில் நுழைந்தது இந்தி. பிரதமர் நேரு மறைவுக்குப்பிறகு பதவியேற்ற லால்பகதூர் சாஸ்திரி, ’இந்தி மட்டுமே ஆட்சிமொழி’ என்ற  ஆட்சிமொழி மசோதா ஒன்றைக் கொண்டுவந்தார்.

‘மொழி என்பது இனத்தின் அடையாளம். மொழிவழியே பண்பாடும், சமூகமும் உருவாகின்றன. மொழியை அழிப்பது இனத்தை அழிப்பதற்குச் சமம். பெரும்பான்மை மொழிபேசும் ஒரு தேசிய இனத்தில், ஆட்சிமொழியாக இந்தியைத் திணிப்பது மானுட அறமல்ல’ என்று முன்னெப்போதும் இல்லாத அளவிலான போராட்டங்கள் தமிழ்நாட்டின் வீதிகளில் பரவின. இதில், 1964-ம் ஆண்டு, ஜனவரி 25-ம் நாள் அதிகாலை 4.30 மணியளவில் திருச்சி தொடர்வண்டி நிலையம் அருகில் நடந்த ஒரு நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழர்களையும் உலுக்கிவிட்டது. சின்னசாமி என்ற 27 வயது இளைஞர், பெட்ரோலை வாங்கிக்கொண்டு வந்து தன் மீது ஊற்றி, ‘இந்தி ஒழிக, தமிழ் வாழ்க’ என்று முழக்கமிட்டபடியே, தனக்குத்தானே தீ வைத்துக்கொள்கிறார். உலகில் தாய்மொழியைக் காப்பதற்கான முதல் உயிர்கொடையாக வரலாறு அவரின் தியாகத்தைப் பதிவுசெய்கிறது. தற்கொலை தவறென்று தமிழ்த் தலைவர்கள் முழங்கினாலும், அதைச் செவிமடுக்காமல், சின்னசாமி வழியில் தமிழுக்காகப் பலர் தமது உயிரைத் தாமே தியாகம் செய்தனர். இத்தியாகம் மாணவச் சமூகத்தை, இந்தி திணிப்புக்கு எதிராகக் கொந்தளிக்கச் செய்தது. மாணவச் சமூகம் அறுதிப் பெரும்பான்மையாகத் தமிழுக்காகக் களமாடத் தொடங்கியது.

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் 4,000 பேர்  தடையைமீறிப் போராட்டத்தில் குதித்தனர். ஊர்வலத்தின்போது, காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. சிவகங்கையைச் சேர்ந்த ராஜேந்திரன் நெஞ்சில் குண்டடிபட்டு பலியாகிறார். பல மாணவர்கள் காயமடைகின்றனர். குண்டுகள் கண்டு அச்சமுறாமல் போராட்டங்களை மாணவர்கள் தீவிரப்படுத்த,  இதைக் கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது. அதன் துப்பாக்கி கங்குகளுக்கு 10 தமிழர்கள் இரையாகினர். மணப்பாறை, கரூர், தஞ்சை எனப் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 28 பேர் பலியாகினர். உயிர்ப் பலிகள், மாணவப் போராட்டங்களை மேலும் உசுப்பிவிட்டன. எஃகு கோட்டையாக நின்ற மாணவச் சமூகத்தின் நெஞ்சுரத்தின் முன் ராணுவத் துப்பாக்கிகள் தோற்றுப்போயின.

இந்தி எதிர்ப்புப் போராட்டச் செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளின் ஆசிரியர்களும் அச்சிடுவோரும் கைதுசெய்யப்பட்டனர். எழுச்சிமிகு மாணவப் போராட்டத்தின் பலனாக ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. முதலமைச்சரான அண்ணா, இந்தி திணிப்புக்கு எதிராக, இருமொழிக் கொள்கையை அறிமுகம் செய்தார்.

 காளைகளின் மெரினா எழுச்சி:

எப்போதும் தாங்கள் கடைப்பிடித்துவரும் பண்பாட்டுப் பழக்கவழக்கத்தின் மீதான ஒடுக்குமுறைகளின்போது, அதற்கெதிராக, வழக்கத்தைவிடக் கூடுதலாகவே, களத்தில் இறங்குகின்றனர் தமிழ் இளைஞர்கள். அப்படியான எழுச்சிக்குச் சாட்சியாக அமைந்தது ‘மெரினா எழுச்சி’. தமிழ்நாட்டில் ஒரு பண்பாடாகப் பழக்கத்தில் இருந்துவந்த ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைபோட்டது. ‘விலங்குகள் துன்புறுத்தல்’ என்றடிப்படையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக நின்றது பீட்டா என்ற தன்னார்வ அமைப்பு. 'எங்கள் பண்பாட்டுக்குத் தடையா' என காளையென சீறினர் தமிழ்நாட்டு இளைஞர்கள். மெரினாவில் சில நூறு இளைஞர்கள் ஜனவரி 17 அன்று திரண்டார்கள். அதன்பின் நடந்ததெல்லாம் உலகக் கண்ணாடியின் முன்பான வரலாற்றுப் பதிவு. ‘ஜல்லிக்கட்டு’-க்கு எதிராகக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, இரவுபகல் பாராமல் போராட்டக் களத்தில் இணைந்தார்கள்.

உலகத்தின் இரண்டாம் பெரிய கடற்கரை, ‘காளைகளின்’ சீற்ற அலைகளாய் காட்சி தந்தது. போராட்டத்தை ஒடுக்க ஆயிரக்கணக்கில் காவல் துறையினரைக் குவித்தது ஆளும் அ.தி.மு.க அரசு. அதன்பிறகே ஆயிரம், லட்சமானது. லட்சக்கணக்கில் குவிந்த போராளிகள், அறவழியில், தங்களுக்குள்ளாகவே ஓர் ஒழுங்குமுறையில் அமைத்த உணர்வுபூர்வமான எழுச்சி,  மத்திய பி.ஜே.பி ஆட்சியையும், மாநில அ.தி,மு.க ஆட்சியையும் வழிக்குக் கொண்டுவந்தது. விலங்குகள் வதை தடைச்சட்டத்தில் காளைகளுக்கு விலக்கு அளித்து,  தமிழ்நாடு அரசு அவசர சட்டமியற்ற அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிக்க, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான தடை நொறுங்கியது.

அனிதா மரணமும்... நீட்டுக்கு எதிரான எழுச்சியும்!

ஒடுக்குமுறை இருக்கும்வரை, எதிர்வினையான போராட்டங்கள் இருக்கும் என்ற விதிக்கேற்ப ‘நீட்’ தகுதித்தேர்வை, தமிழர்கள் மீதான மத்திய அரசின் திணிப்பாகப் பார்த்தனர் தமிழ்நாட்டு மக்கள். ‘நீட்’ விலக்கு கேட்டு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதும்,  நீட் விலக்கு கிடைக்கும் என நம்பிக்கையூட்டி, பிறகு நீட்டை மத்திய அரசு திணித்ததும் மாணவச் சமூகத்தின்மீது இடியாக இறங்கியது. தமது கனவு கலைக்கப்பட்ட துயரத்தில் தூக்குக்கயிற்றைச் சுமந்தார் ப்ளஸ் டூ-வில், 1,176 மதிப்பெண் பெற்ற அரியலூர் ‘அனிதா’. அவரின் மரணம், ‘சமூக நீதிக்கு நிகழ்த்தப்பட்ட அநீதி’ என்று காத்திரமாகக் களத்தில் இறங்கியது இளைய சமூகம். மெரினா எழுச்சி அனுபவத்தால், அங்கே போராடத் தடை போட்டிருந்தது அ.தி.மு.க அரசு. எனவே, இம்முறை தங்கள் வீதிகளையும், சாலைகளையுமே மெரினாவாக மாற்றினர் தமிழ்நாட்டு மக்கள். வழக்கம்போலவே  மாணவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்துவருகிறது அரசு. ஆனாலும் போராட்டச் சுவடுகள் மறையவில்லை. குறிப்பிடத்தக்க ஒன்றாக, நுங்கம்பாக்க சாலையில் திரண்ட பள்ளி மாணவிகளின் போராட்டம் அனைவரின் கவனத்தையும் திருப்பியது. மேலும் சபரிமாலா என்கிற ஆசிரியை, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய ஆசிரியர் பணியையே ராஜினாமா செய்ததோடு வீட்டிலிருந்தும் போராட்டம் நடத்தினார். நீட் விலக்குக்கான போராட்டங்களால் தமிழ்நாடு அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தங்கள் உணர்வுகளில் கைவைக்கும்போது, அதற்கு எதிராகத் திமிறி எழுவது ஒடுக்கப்பட்ட மக்களின் இயல்பு. இதையே உணர்த்துகிறது, விதையாக மாறிய நடராசன் முதல் அனிதா வரையிலான உயிர்த் தியாக வரலாறு. இத்தீரமிகு எழுச்சியே... தமிழர்களை, தமிழர்களாக உணரச் செய்கின்றன .

கட்டுரைக்கு உதவிய நூல்கள் :

க.நெடுஞ்செழியனின் 'தி.மு.க வரலாறு' 

கோவி லெனினின் 'திராவிடர் இயக்கம் நோக்கம் தாக்கம் தேக்கம்'