Published:Updated:

``திருவிழாவுக்கு டிரஸ் எடுத்திருந்தோம்... இப்ப அவ பொணத்துக்கு..!’' - கதறும் பிரதீபா அண்ணன்

``நேத்து காலையில் 11 மணிக்கு, `இன்னைக்கு ரிசல்ட். நான் பாஸ் பண்ணிடுவேன். எனக்கு என்ன வாங்கித் தருவே?'னு கேட்டாளே...

``திருவிழாவுக்கு டிரஸ் எடுத்திருந்தோம்... இப்ப அவ பொணத்துக்கு..!’' - கதறும் பிரதீபா அண்ணன்
``திருவிழாவுக்கு டிரஸ் எடுத்திருந்தோம்... இப்ப அவ பொணத்துக்கு..!’' - கதறும் பிரதீபா அண்ணன்

 நீட் தேர்வுக்கு அனிதாவை அடுத்து பிரதீபாவையும் பலி கொடுத்திருக்கிறது தமிழகம். நேற்று நீட் தேர்வு முடிவு வெளியானது. கனவுகள் கலைந்த சோகத்தில் தன் உயிரையே கொடுத்திருக்கிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபா. தங்கள் உயிரையும் இழந்துவிட்ட வேதனையில் இருக்கிறது அவரின் குடும்பம்.

வீட்டின் உள்ளே எங்கெங்கும் மரண ஓலம் வியாபித்திருக்க, ``என் தங்கச்சி தானா சாகலை. நீட் கொன்னுடுச்சு'' எனத் தலையில் அடித்துக் கதறுகிறார் பிரதீபா அண்ணன் பார்த்திபன்.

``நேத்து காலையில அவளோடு பேசிட்டிருந்தப்போ, `நீ ஒரு டாக்டர்கிட்ட பேசிட்டிருக்கிற விஷயத்தை மறந்துறாதே'னு செல்லமா சண்டைபோட்ட என் தங்கச்சி, இன்னைக்குப் பிணமா கிடக்கு. அது டாக்டராக நினைச்சதைத் தவிர வேற என்ன பாவம் பண்ணுச்சு? பத்தாம் வகுப்புல ஸ்கூல் ஃபர்ஸ்ட். ப்ளஸ் டூவில் 1125 மார்க் வாங்கினா. ப்ளஸ் டூ முடிச்சு ரெண்டு வருஷம் ஆயிருச்சு. `படிச்சா டாக்டருக்குத்தான் படிப்பேன். இந்த ஊரிலே நான்தான் முதல் டாக்டராகப் போறேன்'னு சொல்லிட்டே இருப்பா. ரெண்டு வருஷமா எப்போ பார்த்தாலும் புக்கும் கையுமாதான் இருப்பா. ஊர்ல உடம்பு முடியாதவங்களைப் பார்க்கும்போதெல்லாம், 'இன்னும் நாலஞ்சு வருஷம் பொறுத்துக்கோங்க. நான் டாக்டராகி இலவசமா வைத்தியம் பார்க்கிறேன்' சொல்வா. அவங்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுபோய் மருந்து வாங்கிக் கொடுப்பா'' எனக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தொடர்கிறார் பார்த்திபன்.

``அவள் கனவு மேலே அவ்வளவு நம்பிக்கையோடு இருந்தா. அதைப் பார்த்து எத்தனையோ நாள் சந்தோஷப்பட்டிருக்கேன். போன வருஷம் நீட் தேர்வில் 155 மதிப்பெண் எடுத்தபோதுகூட, 'அடுத்த முறை எனக்கு அரசுக் கல்லூரியில் இடம் கிடைச்சுடும். யாரும் கவலைப்படாதீங்க'னு எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தவள். ஆனா, இந்த வருஷம் 39 மதிப்பெண் எடுத்ததை தாங்கமுடியாமல், இப்படி பண்ணிக்கிட்டா. எங்கள் அப்பா கூலி வேலை செஞ்சாலும், எங்க மூணு பேரையும் நல்லா படிக்கவைக்க நினைச்சார். காசு இல்லைன்னாலும் கல்விக்கு எங்க வீட்டில் குறையில்லை. என் தங்கச்சி நீட் எழுதிட்டு வந்ததும், 'நீ எப்படி எழுதியிருந்தாலும் பரவாயில்லே. இன்னும் எத்தனை வருஷம் நீட்டுக்குப் படிக்கணும்னாலும் படி. இல்லைன்னா, வேற படிக்க ஆசைப்பட்டாலும் சேர்த்துவிடறேன்'னு சொல்லியிருந்தார். அப்பவும், 'அட போங்கப்பா நான் டாக்டர்தான் ஆவேன்'னு சொல்லிச்சே'' என்கிற பார்த்திபன் குரல் நம் இதயத்தை அறுக்கிறது.

``நேத்து காலையில் 11 மணிக்கு, 'இன்னைக்கு ரிசல்ட். நான் பாஸ் பண்ணிடுவேன். எனக்கு என்ன வாங்கி தருவே?'னு கேட்டாளே... இப்போ அவள் பிணத்துக்கு மாலை வாங்கிப் போடுறதைத் தவிர வேற எதுவும்  பண்ண முடியாமல் போயிடுச்சு. எங்க வீட்டில் ஆன்லைன் வசதி கிடையாதுங்க. அவள் எப்படி ரிசல்ட் பார்த்தான்னே தெரியலை. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், எலி மருந்தை சாப்பிட்டிருக்கா. நீட்டுக்கு ஆதரவு தெரிவிச்சவங்க என் பிரதீபா முகத்தை கொஞ்சம் பாருங்க. அதுல உறைஞ்சுப்போன கனவுகள் தெரியும். நியாயமே இல்லாத ஒரு தேர்வுக்கு இன்னும் எத்தனை பிரதீபா உயிர்களை எடுக்கப் போறாங்க. சி.பி.எஸ்.இ ஸ்கூலில் படிக்காததுதான் என் தங்கச்சி செய்த தப்பா? எங்க குடும்பச்சூழலுக்கு தமிழ் மீடியத்துலதான் படிக்க முடியும். அப்போ, எங்களை மாதிரியான ஜனங்க டாக்டருக்கு படிக்க ஆசையே படக்கூடாதா? போன வருஷம் அனிதா. இந்த வருஷம் பிரதீபா. வருஷா வருஷம் போஸ்டர்களில் முகங்கள்தான் மாறும். வேற எதுவும் தமிழ்நாட்டுல மாறாது. எங்க ஊரில் இன்னைக்கு திருவிழாங்க. அதுக்காக வாங்கின டிரஸ்ஸை இப்படி அவள் பொணத்துக்குப் போடுவோம்னு நினைச்சே பார்க்கலைங்க. அந்தச் சாமி எங்க பிரதீபாவை கூட்டிட்டுப் போயிருச்சா, வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகள் காவு வாங்கிட்டாங்களான்னு தெரியலை. என் தங்கச்சிக்காக  அனுதாபப்படுறதைவிட இனிமே இன்னொரு உயிர் போகாமல் இருக்க என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க'' எனக் கதறுகிறார் பார்த்திபன்.

நீட்டுக்கு எதிரான மரண ஓலம் ஒலித்துக்கொண்டேதான் இருக்கப்போகிறதா?