Published:Updated:

`எய்ம்ஸ் ஒப்புதல்; திருவிழாவாக கொண்டாடுவோம்’ - பொன்.ராதாகிருஷ்ணன்

`எய்ம்ஸ் ஒப்புதல்; திருவிழாவாக கொண்டாடுவோம்’ - பொன்.ராதாகிருஷ்ணன்
`எய்ம்ஸ் ஒப்புதல்; திருவிழாவாக கொண்டாடுவோம்’ - பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அரசால் கடந்த வருடம்  அறிவிக்கப்பட்ட மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை மதுரை மற்றும் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.

ஓரிரு நாள்களுக்கு முன் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் தொடர்ந்து செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளதற்கு தமிழக மக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராக பேசி வரும் நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளித்துள்ள இந்த அறிவிப்பு மக்களின் கோபத்தை கொஞ்சம் தனித்துள்ளது. 


   

இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ``சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழின் தலைநகரான மதுரைக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இந்தியாவின் உயரிய எய்ம்ஸ் மருத்துவமனை தந்து, அதை விரைவில் தொடங்கிட மத்திய அமைச்சரவை மூலம் ஒப்புதல் வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது சார்பாகவும் ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் பிரதமர்  நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்நாளை ஓர் திருவிழாவாக கொண்டாடுவோம். தமிழுக்கும், தமிழகத்துக்கும் தொடர்ந்து நன்மைகள் பல செய்து வரும் பிரதமர் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.