Published:Updated:

ஆர்.எஸ்.புரம் முனிசிபல் பள்ளி முதல் பத்மஶ்ரீ விருதுவரை... மருத்துவர் ஆர்.வி ரமணி கடந்த பாதை!

ஆர்.எஸ்.புரம் முனிசிபல் பள்ளி முதல் பத்மஶ்ரீ விருதுவரை... மருத்துவர் ஆர்.வி ரமணி கடந்த பாதை!
ஆர்.எஸ்.புரம் முனிசிபல் பள்ளி முதல் பத்மஶ்ரீ விருதுவரை... மருத்துவர் ஆர்.வி ரமணி கடந்த பாதை!

"ஒரு குழந்தைக்குப் பார்வை கொடுத்தா, 90 வருட ஆயுளை ஒரு உயிருக்குக் கொடுக்கிறோம்னு அர்த்தம். ஒரு நடுத்தர வயதுக்காரருக்குப் பார்வை கொடுத்தா, அவங்க  ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் வாழ்க்கை கொடுக்கிறோம் அர்த்தம். அதேசமயம் வயசான ஒருத்தருக்கு பார்வை கொடுத்தா யாருக்கும் தொந்தரவு இல்லாம நிம்மதியா தன்னோட முதுமையைக் கழிக்க ஒரு உயிருக்கு உதவி செய்றோம்னு அர்த்தம்.''

''எனக்கு பத்து வயசு இருக்கும்போது எங்க அப்பாகூட அடிக்கடி வெளியில போவேன். அப்படிப் போற சமயத்துல, தெருவுல எங்க காரைப் பார்த்தவுடனே, வீட்டுத்  திண்ணையில உட்கார்ந்து பேசிட்டு இருக்குற மக்கள் எல்லோரும் வரிசையா எந்திரிச்சு நிப்பாங்க, எங்க அப்பாவப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுவாங்க. பிளேக் நோயால  மக்கள் கஷ்டப்பட்ட காலத்துல, எங்க அப்பா செய்த சமூகப்பணிக்கு கிடைச்ச மரியாதைதான் அது. அன்னிக்கு முடிவு பண்ணினேன் படிச்சு டாக்டராகத்தான் ஆகணும்னு. அந்த விதைதான் என்னை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கு'' மலரும் நினைவுகளை நெகிழ்ச்சியோடு நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார், ஆர்.வி.ஆர். எனக் கோவை மக்களால் அன்போடு அழைக்கப்படும் மருத்துவர் ரமணி.

இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான, பத்ம விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர்களின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. 50,000 பரிந்துரைகளில்  இருந்து 112 பேர் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களில் இயற்கை விவசாயிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், மருத்துவர்கள் எனப் பலரும் அடக்கம். அந்த வகையில் மருத்துவத்துறையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 15 மருத்துவர்களில், இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அறுவை சிகிச்சைக்காக  மருத்துவர் ராமசாமி வெங்கடசாமியும், இலவச கண் சிகிச்சை சேவைக்காக மருத்துவர் ஆர்.வி.ரமணியும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். 

80:20 இதுதான் மருத்துவர் ரமணியால் தொடங்கப்பட்ட சங்கரா கண் மருத்துவமனையின் சேவை மந்திரம். 80 சதவிகித கண் சிகிச்சைகள் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும், 20 சதவிகித சிகிச்சைகள் வசதிபடைத்தவர்களிடம் கட்டணம் பெற்றுக்கொண்டும் செய்யப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பத்து மாநிலங்களில் இந்த சேவை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட கண் அறுவை சிகிச்சைகள் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளன. தான் பிறந்த தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே ஒளியூட்டி வருகிறார் மருத்துவர் ரமணி. அதற்கான அங்கீகாரமாகத்தான் பத்மஶ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது.

எங்கிருந்து தொடங்கியது இந்தப் பயணம், மருத்துவர் ஆர்.வி.ஆரிடம் பேசினோம்,

''என்னோட சொந்த ஊர் கோயம்புத்தூர். என் அப்பா ராமநாதனும் மருத்துவர்தான். கோவையின் முதல் மூன்று மருத்துவர்கள்ல எங்க அப்பாவும் ஒருத்தர். 1931 வருஷத்தில்  இருந்து கிளினிக் ஆரம்பிச்சு பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்தார். 1942-ல பிளேக் நோயால எங்க பகுதியில பலபேரு பாதிக்கப்பட்டாங்க. பலர் ஊரைக் காலி பண்ணிட்டு கிளம்பப் போனாங்க. அப்ப எங்க அப்பா செஞ்ச மருத்துவ உதவிகள்னால மக்கள் மத்தியில அவருக்கு நல்ல செல்வாக்கு. 

நான் ஸ்கூல் படிச்சது ஆர்.எஸ்.புரம் முனிசிபல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலதான். அடுத்து, மங்களூர்ல இருக்குற கஸ்தூரிபா மெடிக்கல் காலேஜ்ல 1971-ல எம்.பி.பி.எஸ் முடிச்சேன். நான் டாக்டருக்குப் படிச்சுட்டு இருக்கும்போதே எங்க அப்பா தவறிட்டார். படிச்சு முடிச்ச கையோட ஊருக்கு வந்து எங்க அப்பா பேருல 'ராமநாதன் மெமோரியல் கிளினிக்' ஆரம்பிச்சு, நானும் என் மனைவி மருத்துவர் ராதாவும் பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சோம். ஆரம்பிச்ச ஐந்து வருசத்திலேயே எங்க ஹாஸ்பிட்டலுக்கு மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு. குறுகிய நாள்களிலேயே கைராசியான மருத்துவர்கள்னு பேர் எடுத்தோம். எங்க கிளினிக்ல எப்போதும் மக்கள் கூட்டம் இருந்துட்டே இருக்கும். 

நாங்க ஆரம்பிச்ச கிளினிக் நல்லபடியா போய்ட்டு இருந்தாலும், என் மனசுக்குள்ள ஏதோ ஓர் உறுத்தல் இருந்துட்டே இருந்துச்சு. இந்த மக்களுக்கு நம்மளால முடிஞ்ச உதவி ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அந்த நேரத்துலதான், காஞ்சிப் பெரியவரோட பக்தர்கள், ஆர்.எஸ்.புரத்துல காமாட்சி அம்மனுக்கு கோயில் கட்டினாங்க. 'கோயிலுக்கு முன்னாடி ஒரு கிளினிக் ஆரம்பிச்சு மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்யப் போறதா'வும் சொன்னாங்க. நானும், என் மனைவியும் அவங்ககிட்ட பேசி 'பிரைமரி ஹெல்த் ஹேர் சென்டர்' ஆரம்பிச்சோம். எங்ககூட பத்து மருத்துவர்களும் சேர்ந்தாங்க. மருந்து விற்பனைப் பிரதிநிகள் மாத்திரை, மருந்துகள் இலவசமா  கொடுத்தாங்க.  

ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே தினமும் நூறு, நூற்றம்பது பேருக்கு மேல இலவசமா சிகிச்சை கொடுக்க ஆரம்பிச்சோம். கொஞ்ச நாள்ல ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு  மேல வர ஆரம்பிச்சாங்க. இது நடந்தது எல்லாம் 1977-களில். அந்த நேரத்துல அரசாங்கமும் நிறையா ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரம்பிச்சாங்க. அதே வேலையை ஏன் நாமளும் செய்யணும், வேற ஏதாவது செய்யலாமான்னு யோசிச்சோம்.

அந்த சமயத்துல தான் நம் மக்கள்ல பல பேரு கண் சம்பந்தமான பிரச்னைகளால பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டோம். உலகத்தில் கண் பார்வை இல்லாத  மக்கள்ல மூன்றில் ஒருபகுதி மக்கள் நம்ம நாட்டுலதான் இருந்தாங்க. சிகிச்சை அளிச்சா அவங்கள்ல எண்பது சதவிகிதம் பேருக்கு பார்வை கிடைக்கும். அதனால ஒரு கண் மருத்துவமனை கட்டலாம்னு நினைச்சோம். அப்போ எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுல இருந்த நண்பர் ஐந்தரை ஏக்கர் நிலத்தை மருத்துவமனை கட்ட எங்களுக்கு இலவசமாகக் கொடுத்தார். மருத்துவமனை கட்டுறதுக்கும் பலபேரு உதவி செஞ்சாங்க. அப்படிக் கட்டினதுதான் சங்கரா கண் மருத்துவமனை.

இன்னிக்கு மாநகருக்கு மத்தியில, 500 படுக்கைகளோட உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் கொடுத்துட்டு இருக்கோம். ஆரம்பத்துல, பார்வையற்றவர்களுக்குப்  பொருத்துவதற்கான கண்கள் பற்றாக்குறை அதிகமா இருந்துச்சு. அதைச் சரிசெய்றதுக்கு கண் வங்கி ஆரம்பிச்சோம். வாரத்துக்கு ஒரு ஜோடி கண்கள் கிடைச்சது. இன்னிக்கி நாளொன்றுக்கு ஒரு ஜோடி கண்கள் தானமா வந்துட்டு இருக்கு. 

அதுமட்டுமல்ல, கிராமங்கள்ல முகாம் நடத்தி பாதிப்பு இருக்குற மக்களுக்கு இலவசமா அறுவை சிகிச்சை செய்றோம். இதுவரை 55 லட்சம் கிராமத்து மக்களுக்கு கண்  பரிசோதனை செஞ்சிருக்கோம். 18 லட்சம் பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும் செஞ்சிருக்கோம். இப்ப நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செஞ்சிட்டு வர்றோம்.

அதேபோல, 'ஒளி படைத்த கண்ணினாய்' என்ற பெயரில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி, பாதிப்பு இருக்குற குழந்தைங்களுக்கு  இலவச சிகிச்சைகளும் கொடுத்துட்டு இருக்கோம். இதுவரை கிட்டத்தட்ட 50 லட்சம் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செஞ்சிருக்கோம். சர்க்கரை நோயால பாதிக்கப்பட்டு, கண் பார்வை பறிபோனவங்களுக்காகவும் சிறப்புச் சிகிச்சைகள் கொடுத்துட்டு இருக்கோம்.

நம்ம மாநிலம் மட்டுமில்லாம, இந்தச் சேவையை இந்தியா முழுவதும் கொண்டு போகணும்கிற எண்ணத்துல இந்தியாவுல பல மாநிலங்கள்ல எங்க மருத்துவமனையைத்  தொடங்க முடிவு செஞ்சோம். தற்போது தமிழகம் உள்பட ஆந்திரா, கர்நாடகா போன்ற பத்து மாநிலங்கள்ல எங்க மருத்துவமனை இருக்கு. இந்த வருஷம்  மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானாவுலயும் மருத்துவமனை தொடங்க இருக்கோம். அதன் மூலம் பலபேரோட பார்வைக் கோளாறைச் சரி செய்யமுடியும்னு நம்புறோம்'' என்றார்.

"ஒரு குழந்தைக்குப் பார்வை கொடுத்தா, 90 வருட ஆயுளை ஒரு உயிருக்குக் கொடுக்கிறோம்னு அர்த்தம். ஒரு நடுத்தர வயதுக்காரருக்குப் பார்வை கொடுத்தா, அவங்க  ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் வாழ்க்கை கொடுக்கிறோம் அர்த்தம். அதேசமயம் வயசான ஒருத்தருக்கு பார்வை கொடுத்தா யாருக்கும் தொந்தரவு இல்லாம நிம்மதியா தன்னோட முதுமையைக் கழிக்க ஒரு உயிருக்கு உதவி செய்றோம்னு அர்த்தம்.'' இதுதான் எங்களோட தாரக மந்திரம்.

எனக்குக் கிடைச்ச இந்த விருது என் உழைப்புக்கு கிடைச்ச வெற்றி மட்டும் இல்ல. எங்க மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் என அனைவரோட உழைப்புக்கும்,  உண்மைக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைச்ச வெற்றி. 

ஊர்கூடித் தேர் இழுத்ததாலதான் இந்த வெற்றி எங்களுக்குச் சாத்தியமாயிருக்கு. அதையெல்லாம் விட தெய்வத்தோட அனுக்கிரகமும், காஞ்சிப் பெரியவரோட  ஆசிர்வாதத்தாலதான் நாங்க இந்த இடத்துக்கு வந்துருக்கோம். இந்த விருது இன்னும் எங்கள உத்வேகத்தோடவும், உற்சாகத்தோடவும் செயல்பட வைக்கும். எதிர்காலத்துல  இதைவிடச் சிறப்பா செயல்படுவோம்...'' நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுகிறார், பத்மஶ்ரீ ரமணி ராமநாதன்.

அடுத்த கட்டுரைக்கு