Published:Updated:

`1.50 லட்சம் பேருக்குச் சிகிச்சை... 1000 மைக்ரோ சர்ஜரி' - பிளாஸ்டிக் சர்ஜரி நாயகன் `பத்மஶ்ரீ' வெங்கடசாமி

சமீபத்தில்கூட ஸ்டான்லி மருத்துவமனையில், இரண்டு கைகளும் இல்லாத ஒருவருக்கு செயற்கை கை பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செய்தியைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்

`1.50 லட்சம் பேருக்குச் சிகிச்சை... 1000 மைக்ரோ சர்ஜரி' - பிளாஸ்டிக் சர்ஜரி நாயகன் `பத்மஶ்ரீ' வெங்கடசாமி
`1.50 லட்சம் பேருக்குச் சிகிச்சை... 1000 மைக்ரோ சர்ஜரி' - பிளாஸ்டிக் சர்ஜரி நாயகன் `பத்மஶ்ரீ' வெங்கடசாமி

``ருத்துவம் படிக்கணும்னு முடிவாயிடுச்சு. சென்னையில, மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ், ஸ்டான்லினு ரெண்டு காலேஜ் இருந்தது. ரெண்டு காலேஜ்லயும் இடம் இருந்துச்சு. எங்க படிக்கலாம்னு யோசிச்சப்ப, எனக்கு தொடக்கப்பள்ளியில பாடம் சொல்லிக்கொடுத்த எங்க ஹெட்மாஸ்டர் ஸ்டான்லி சார் ஞாபகம் வந்தது. அவர் பேர்ல உள்ள காலேஜ்லயே படிக்கிறது பெருமைன்னு ஸ்டான்லிலயே சேர்ந்துட்டேன்'' தான் மருத்துவம் படிக்கக் கல்லூரி தேர்வு செய்த விதத்தை ஆரவாரச் சிரிப்போடு பகிர்ந்து கொள்கிறார், மருத்துவர் ரா.வேங்கடசாமி. பத்மஶ்ரீ விருதுக்குச் சொந்தக்காரர். இன்று காலை அந்தப் பெருமைமிகு விருதை ஜனாதிபதியிடமிருந்து பெற்றிருக்கிறார். 

இந்திய அரசின் பத்ம விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இயற்கை விவசாயிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், மருத்துவர்கள் என 112 பேர் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்டமாகக் கடந்த திங்கள்கிழமை டெல்லியில் நடந்த விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமிருந்து பிரபுதேவா, மோகன்லால், தமிழகத்தைச் சேர்ந்த  மருத்துவர் ஆர்.வி.ரமணி உட்பட 56 பேர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். இரண்டாம் கட்டமாக, இன்று நடந்த விழாவில் மீதமுள்ள 56 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவரும், பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் பல்வேறு சாதனைகளைச் செய்தவருமான மருத்துவர் ரா.வேங்கடசாமியும் ஒருவர். 

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு, பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது. அதற்கான விதையைத் தூவியவர் மருத்துவர் வேங்கடசாமி. அந்தத் துறையைத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல், திறமைவாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் பலரை உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும். அதற்கான அங்கீகாரமாக பத்மஶ்ரீ விருது கிடைக்கப்பெற்ற மகிழ்வான தருணத்தில், தான் கடந்து வந்த பாதைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``விருதுநகர் மாவட்டத்துல உள்ள கொத்தநேரிங்கிற குக்கிராமத்தில பிறந்தவன் நான். எங்க அப்பா ராமசாமி, அம்மா தாயம்மாள் ரெண்டுபேரும் விவசாயிங்க. ரொம்ப சாதாரண குடும்பத்துல நான் பிறந்தேன். ஆரம்பக்கல்வியை எங்க ஊர்ல இருக்குற தொடக்கப் பள்ளியிலதான் முடிச்சேன். அடுத்ததா, கோபிநாயக்கம்பட்டியில இருக்கற ராமகிருஷ்ணா வித்யாலயாவுல சேர்ந்தேன். நான் நல்லா படிக்கிறதைப் பார்த்த அய்யாவு ஆசிரியர்தான் படிச்சு பெரிய இடத்துக்குப் போகணும்கிற உத்வேகத்தை எனக்குக் கொடுத்தார்.

இன்டர்மீடியட் காரைக்குடி அழகப்பா காலேஜ்ல ஃப்ர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணினேன். சென்னையில ஏதாவது ஒரு டிகிரி படிக்கலாம்கிற ஐடியாலதான் நான் இருந்தேன். எங்க அப்பாதான் `நீ டாக்டருக்குப் படிப்பா'ன்னு சொன்னார். அவரே அப்ளிகேஷன் போட்டு இன்டர்வியூவுக்கு அனுப்பி வெச்சார். அப்பல்லாம் நாம நல்ல மார்க் வாங்கியிருந்தாலும் இன்டர்வியூல செலக்ட் ஆகணும்; அப்பதான் டாக்டருக்குப் படிக்கமுடியும். என்னை கோவிந்தராஜ நாயுடு, சடகோபன் போன்ற பிரபலமான மனிதர்கள் இன்டர்வியூ பண்ணினாங்க. முதல் தலைமுறையா மருத்துவம் படிக்க வர்ற மாணவர்களுக்கு அவங்க முன்னுரிமை கொடுப்பாங்க. அப்படித்தான் எனக்கும் முன்னுரிமை கொடுத்தாங்க. நான் நல்ல மார்க் வாங்கியிருந்தாலும், அவங்களோட நல்ல மனசுதான் என்னை மருத்துவக் கல்லூரிக்குள்ள கொண்டுபோய் சேர்த்துச்சு.

கல்லூரியில சேர்ந்து படிப்புல மட்டுமல்லாம டிராமா, ஆக்டிவிட்டின்னு கலந்துக்க ஆரம்பிச்சேன். அதனால, மாணவர்கள் மத்தியில பிரபலமானேன். அதனாலேயே காலேஜ்ல மாணவர் மன்றச் செயலாளரா ஆனேன். வசதியான வீட்டுப் பிள்ளைங்கதான் அதுவரைக்கும் அந்தப் பொறுப்புக்கு வந்திருந்தாங்க. சாதாரண விவசாயக் குடும்பத்துல இருந்து அந்தப் பொறுப்புக்கு வந்த முதல் மருத்துவ மாணவன் நான். 1956 - ல எம்.பி.பி.எஸ் முடிச்சேன். ஒருவருஷம் ஹவுஸ் சர்ஜனா பிராக்டிஸ் பண்ணினேன்.  

1958-ம் வருஷம் பொது அறுவை சிகிச்சைத்துறையில முதுகலை முடிச்சேன். அந்தக் கையோட, மதுரை அரசு மருத்துவமனையில அசிஸ்டன்ட் சர்ஜனா சேர்ந்து பிராக்டிஸ் பண்ணினேன். அப்போ எனக்குத் திருமணம் நிச்சயமாச்சு. என் மனைவி சிவராணி, அவங்களும் ஒரு மருத்துவர். மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல படிச்சாங்க. இப்படியே போனா சரியா இருக்காது, ஏதாவது பண்ணலாம்னு தோணுச்சு. உடனே, நாக்பூர்ல பிளாஸ்டிக் சர்ஜரி கோர்ஸ் சேர்ந்தேன். ஆறு மாதம்தான் போனேன், அம்மாவுக்கு உடம்புக்குச் சரியில்லைனு சொன்னதால ஊருக்குத் திரும்பிட்டேன். மதுரை அரசு மருத்துவமனையில திரும்பவும் வேலைக்குச் சேர்ந்தேன். திரும்ப, 1967-ல நாக்பூர் போய் ஏற்கெனவே முடிக்காமவிட்ட கோர்ஸைப் படிச்சு முடிச்சேன். 1970 வரைக்கும் மதுரை  இராசாசி மருத்துவமனையிலதான் வேலை பார்த்தேன்.

1971-ல ஸ்டான்லி மருத்துவமனைக்குத் திரும்ப வந்தேன். என் தாய் வீட்டுக்கே திரும்பி வந்த உணர்வு வந்தது. ஏதாவது செய்யணும்னு தோணுச்சி. பிளாஸ்டிக் சர்ஜரிதுறையை ஆரம்பிச்சா என்னன்னு யோசனை வந்தது. டீன் கிட்ட போய் பேசினேன். `ஆரம்பிக்கலாம் பிரச்னை இல்லை, ஆனா அதுக்காக தனியா வார்டு ஒதுக்குறது கஷ்டம்'னு சொன்னார். ஆனாலும், நான் என் முயற்சியைக் கைவிடலை. அங்க இருக்குற என் மருத்துவ நண்பர்கள்கிட்ட பேசினேன். ஒரு வார்டுக்கு ரெண்டு பெட் வீதம் 8 வார்டுல 16 பெட்டும், ஒரே ஒரு வார்டுல மட்டும் நாலு பெட்டும் ரெடி பண்ணினேன். ஆக, மொத்தம் 20 பெட் ரெடி பண்ணிட்டு டீனைச் சந்திச்சேன். அவர் உடனே ஓ.கே சொல்லிட்டார். அப்படி கஷ்டப்பட்டு ஆரம்பிச்சதுதான் ஸ்டான்லி மருத்துவமனையில செயல்பட்டு வர்ற பிளாஸ்டிக் சர்ஜரி துறை. எனக்கு உதவியாளரா ஒரு மருத்துவரையும் நியமிச்சாங்க. அவர் என்னைவிட சீனியரா இருந்தாலும், எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். 1973 -ம் வருஷம் பிளாஸ்டிக் சர்ஜரி துறைக்காகவே தனியா 20 பெட் ஓ.கே ஆனது.  

ஸ்டான்லி மருத்துவமனை இருக்குற ஏரியா ரொம்பவும் ஏழை மக்கள் வாழக்கூடிய பகுதி. பலபேர் கூலி வேலை பாக்குறாங்க. அடிக்கடி கையில அடிபட்டு வருவாங்க. அதுபோக, அந்தப் பகுதிகள்ல தொழிற்சாலைகளும் அதிகமா இருந்தது, அங்க இருந்தும் கையில அடிபட்டு பலர் வருவாங்க. கை விபத்து அதிகமா நடக்குறதால அதுக்கு மட்டும், தனியா ஒரு பிரிவு தொடங்கலாம்னு மருத்துவர்கள், டீன்கிட்ட சொன்னேன். கைக்கு மட்டும் தனிப்பிரிவான்னு எல்லோரும் ஆச்சர்யமாப் பார்த்தாங்க. அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் அன்பழகன்கிட்ட நான் நேர்லபோய் கோரிக்கை வெச்சேன். அவர் முதல்ல சந்தேகமாகத்தான் கேட்டார். நான் விளக்கமாச் சொன்னதும், ஓ.கே சொல்லிட்டார். அதுக்கப்புறம், அதுக்கு மட்டும் தனிப்பிரிவு தொடங்கினோம். இதனால பலபேர் பலனடைஞ்சாங்க.  
சிகிச்சையளிச்சதோட மட்டுமல்லாம பிசியோதெரபி மருத்துவர்களை வெச்சு, இலவசமாப் பயிற்சிகளும் கொடுத்தோம். ஹேண்ட் சர்ஜரிக்காக டிப்ளோமா கோர்ஸ் ஆரம்பிச்சோம். அதுமட்டுமல்லாம பிளாஸ்டிக் சர்ஜரியில முதுகலை மருத்துவப் படிப்பையும் தொடங்கினோம்.  

1980 - ம் வருஷம் 80 படுக்கைகள், 5 ஆபரேஷன் தியேட்டர்னு பிளாஸ்டிக் சர்ஜரித் துறையை மிகப் பிரமாண்டமா மாத்தினோம். அதுல 3 பிளாஸ்டிக் சர்ஜரிக்காகவும், 2 மைக்ரோ சர்ஜரிக்காகவும் பயன்படுத்தினோம். மேலும், 12 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டாங்க. கை துண்டிக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் அறுவை சிகிச்சை செய்துவிடுவோம். அதன் மூலம் பலரது கைகளை காப்பாத்தியிருக்கோம்.
1984-ம் வருஷம் தொழிற்சாலைகள் சார்பில் நிறைய உதவி கிடைச்சது. அதனால சிகிச்சை பெறக்கூடியவங்களுக்கு நல்ல தரமான உணவு, சுத்தமான தண்ணீர், சுகாதாரமான கழிப்பறைகள், பொழுதுபோக்க தொலைக்காட்சி, பார்வையாளர்களுக்கு இருக்கைகள் எனப் பல்வேறு வசதிகளுடன், தரம் உயர்த்தினோம். இப்படி அனைவரும் ஆச்சர்யப்படத் தக்கவகையில் எங்களோட டிபார்ட்மென்ட்டை மாத்தினோம்.

1991 - ல நான் ஓய்வு பெற்றேன். அதுவரைக்கும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்திருப்பேன். 1000 பேருக்குமேல் மைக்ரோ சர்ஜரி செஞ்சிருப்பேன். கை விரல்களுக்குப் பதிலா, கால் விரல்களை எடுத்துப் பொருத்தி வெற்றிகரமா பல அறுவை சிகிச்சைகளைச் செய்திருக்கிறோம். இதுபோன்ற அறுவை சிகிச்சை தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ஸ்டான்லி மருத்துவமனையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.  

இதுதவிர, விபத்தில் சிக்கி நரம்பு அறுந்து போனவர்களுக்கு, வேறோர் இடத்திலிருந்து நரம்பு எடுத்துப் பொருத்துவது, பிய்ந்துபோன நரம்புகளை ஒன்று சேர்ப்பது என நரம்பு மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவிலேயே முதன்முதலில் ஸ்டான்லி மருத்துவமனையில்தான் அறிமுகப்படுத்தினோம். இதன்மூலம் பலருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அதன்காரணமாக பலர் உடல் நலம் பெற்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்காங்க.  

ஓய்வு பெற்ற பிறகு, 1992 - ல மைக்ரோ சர்ஜரிக்கென தனி அசோசியேஷனைத் தொடங்கினேன். அனுபவம் வாய்ந்த பல நிபுணர்களைக் கொண்டு பல கருத்தரங்குகளை நடத்திட்டு வர்றேன். 2005 - ல இருந்து சாந்தி நிகேதன் ஆசிரமத்தில் இணைந்து மக்கள் பணி செய்றேன். என்னைப் பொறுத்தவரை கடமையைச் சரியாகச் செய்வதே மிகப்பெரிய சேவைதான். சமீபத்தில்கூட ஸ்டான்லி மருத்துவமனையில், இரண்டு கைகளும் இல்லாத ஒருவருக்கு செயற்கை கை பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செய்தியைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஒரு மனிதன் கண் இல்லாமல்கூட வாழ்ந்து விடலாம். ஆனால், கை இல்லாமல் வாழ்வது கடினம்.  

என் அப்பா மிகப்பெரிய தேசியவாதி. நமக்காக மட்டும் வாழாம, நாட்டு மக்களுக்கும் ஏதாவது செய்யணும்னு அடிக்கடி சொல்வார். எனக்குக் கிடைச்ச விருது மூலமா, அவரோட வாக்கை காப்பாத்தியிருக்கேன்னு நம்புறேன். இந்த விருது என் அப்பாவின் வார்த்தைக்கும் நம்பிக்கைக்கும் கிடைச்ச வெற்றியாகப் பார்க்கிறேன்...'' என்கிறார் `பத்மஶ்ரீ' நாயகன் வேங்கடசாமி.