Published:Updated:

மருத்துவர்கள் போராட்டம்... பாதுகாப்புச் சட்டம் தீர்வாக அமையுமா? #DoctorsStrike

பணியிடங்களில் பாதுகாப்புக் கோரி, பணியாளர்கள் போராட்டம் நடத்துவது இயல்பானது; நியாயமானது. எனினும், தற்போதைய மருத்துவர் போராட்டம் சிக்கலானது.

மருத்துவர்கள் போராட்டம்... பாதுகாப்புச் சட்டம் தீர்வாக அமையுமா? #DoctorsStrike
மருத்துவர்கள் போராட்டம்... பாதுகாப்புச் சட்டம் தீர்வாக அமையுமா? #DoctorsStrike

'என் வாழ்வை மனிதத்தின் சேவைக்காக முழுவதுமாக அர்ப்பணிக்கிறேன்' என்று தொடங்குகிறது ஹிப்போகிரேட்ஸ் உறுதிமொழி. மருத்துவர்களாகப் பணியாற்றப்போகும் ஒவ்வொருவரும் சூளுரைக்கும் உறுதிமொழி இது. மனிதத்தின் சேவைக்காகப் பணியாற்ற உறுதிமொழியேற்ற மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்தனர். கொல்கத்தாவில் தொடங்கிய மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம், இந்திய மருத்துவச் சங்கத்தின் உதவியுடன் நாடு முழுவதும் நடைபெற்றது.

பணியிடங்களில் பாதுகாப்புக் கோரி பணியாளர்கள் போராட்டம் நடத்துவது இயல்பானது; நியாயமானது. எனினும் இப்போது மருத்துவர்கள் நடத்திய போராட்டம் சிக்கலானது. கொல்கத்தாவின் என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரியில் கடந்த ஜூன் 10 அன்று, சிகிச்சைக்காக வந்த 75 வயது முதியவர் முகமது ஷஹீத் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உறவினர்கள் 'மருத்துவர்களின் அலட்சியம்தான் அவரின் மரணத்துக்குக் காரணம்' என்று கூறியதோடு, இளநிலை மருத்துவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் இளநிலை மருத்துவர் பரிபஹா முகோபாத்யாய் கடுமையாகத் தாக்கப்பட்டார். தாக்குதல் இருதரப்பு மோதலாக மாறியது. 

மறுநாள் ஏறத்தாழ 50 இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். மற்ற மருத்துவர்களும் போராட்டத்தில் இணைந்துகொண்டு, மிகப்பெரிய போராட்டமாக உருவானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மருத்துவர்களுக்கான சங்கம் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தது. மேற்கு வங்கம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 246 மருத்துவர்கள், தங்கள் பணியை ராஜினாமா செய்தனர். இந்திய மருத்துவர்கள் சங்கம், ஜூன் 17 முதல் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்துவார்கள் என அறிவித்தது. தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

மருத்துவர்கள் போராட்டம்... பாதுகாப்புச் சட்டம் தீர்வாக அமையுமா? #DoctorsStrike

பணியாற்றும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்புக்காகத் தனிச்சட்டம், மருத்துவமனையில் ரிசர்வ் காவல்துறையை நியமித்துப் பாதுகாப்பைப் பலப்படுத்துதல், அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றை கோரிக்கைகளாக மருத்துவர்கள் முன்வைத்தனர்.

போராட்டம் நடத்திய மருத்துவர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவமனைகளில் குறைதீர்ப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும், மருத்துவர்களின் பாதுகாப்புக்காகக் காவலர்கள் நியமிக்கப்படுவர் எனவும், ஹெல்ப்லைன் வசதி உருவாக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். இதையடுத்து, போராட்டம் நடத்திய மருத்துவர்கள், தங்களின் வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் மருத்துவத்துறையானது அரசு, தனியார் என இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து செயல்படுகின்றன. பண வசதியுள்ளவர்களுக்காகத் தனியார் மருத்துவமனைகள் செயல்படும் நிலையில், அரசு மருத்துவமனைகள் சாதாரண, ஏழை-எளிய மக்களின் சுகாதாரத் தேவைகளுக்காக இயங்கி வருகின்றன. மருத்துவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகளுக்கும் மருத்துவமனைகளின் தன்மைக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.

மருத்துவர்கள் போராட்டம்... பாதுகாப்புச் சட்டம் தீர்வாக அமையுமா? #DoctorsStrike

அரசு மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத்துக்கும் அரசு ஒதுக்கும் நிதி கடந்து சில ஆண்டுகளாகக் குறைந்துகொண்டே வருகிறது. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் அளிக்கப்படுவதில்லை. தனியார் மருத்துவமனைகள் அதீத லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. இப்படியான சூழலில், மருத்துவமனை நிர்வாகத்துக்கும்  நோயாளிகளுக்கும் இடையே இருப்பது ஒரே பாலமாக மருத்துவர்கள் மட்டுமே.

அரசின் மீதான எளிய மக்களின் அதிருப்தி, கோபமாக மாறி, இரவு பகல் பாராது பணியாற்றும் மருத்துவர்களின் மீது திருப்பிவிடப்படுகிறது. மருத்துவர்களும் தங்கள் பாதுகாப்புக்காகப் போராடுகின்றனர். பாதுகாப்பு அளிக்கப்பட்டாலும், அரசு மருத்துவமனைகளை பெரிய அளவில் மேம்படுத்துவார்களா என்பது கேள்விக்குறியே!

மேலும், இந்தப் போராட்டம் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான மோதலாக மாறியது. பணியாற்றும் மருத்துவர்கள் மீது அரசு நிகழ்த்தும் வன்முறைகளை எதிர்த்து, கடந்த ஆண்டுகளில் மருத்துவர்களால் எந்தவொரு பெரிய போராட்டமும் நிகழவில்லை. 

மருத்துவர்கள் போராட்டம்... பாதுகாப்புச் சட்டம் தீர்வாக அமையுமா? #DoctorsStrike

சமீபத்தில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த பாயல் தாத்வி என்ற மருத்துவ மாணவி சக மாணவிகளால் சாதிய ரீதியான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, தற்கொலை செய்துகொண்டார். இந்திய மருத்துவ சங்கம் பாயல் தாத்வியின் மரணத்தில், குற்றம் சாட்டப்பட்ட மாணவிகளுக்குத் தொடர்பிருந்தாலும், சாதிப் பிரச்னை எதுவும் இல்லை என்று கூறி முடித்துக்கொண்டது.  

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உத்தரப்பிரதேசத்தில், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 67 குழந்தைகள் சுவாசிக்க ஆக்ஸிஜன் இல்லாமல் மரணமடைந்தனர். மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வாங்குவதற்கு, அரசு பணம் கட்டாததுதான் காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 

எனினும், தன் பணத்தைச் செலவுசெய்து குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் வாங்கிப் பாதுகாத்த மருத்துவர் கபீல் கான், குழந்தைகள் மரணத்துக்குப் பொறுப்பாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய மருத்துவ சங்கம் அவருக்குப் பெயரளவில் மட்டுமே ஆதரவு வழங்கியது. தற்போது இந்திய மருத்துவ சங்கத்தினருக்கு ட்வீட் செய்த கபீல் கான், "முதல்வர் யோகி ஆதித்யநாத், என் பதவியைப் பறித்து இரண்டு ஆண்டுகளாகின்றன. நானும் மருத்துவர்தான். எனக்கும் ஆதரவு அளியுங்கள்" என்று கூறியுள்ளார். 

மருத்துவர்கள் போராட்டம்... பாதுகாப்புச் சட்டம் தீர்வாக அமையுமா? #DoctorsStrike

மருத்துவர் கபீல் கான்

மருத்துவர்கள் போராட்டம் பற்றி, மருத்துவர் கபீல் கானிடம் பேசினோம், "பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கிறேன். ஆனால், இப்போது நடைபெற்ற போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை" என்று தொடங்கிய அவர், "நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் இடையில் இருப்பது இருவழி உரையாடல். இரு தரப்பும் தங்களுக்கிடையில் சுமுகமாக நடந்துகொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு மோசமாக இருப்பதே, பெரும்பாலான நிகழ்வுகளில் மக்களின் கோபத்துக்குக் காரணமாக அமைகிறது. நான் பணிபுரிந்த மருத்துவமனையில் இருந்த கட்டமைப்புக் குறைபாடு காரணமாக, நான் பலியாடு ஆக்கப்பட்டேன். கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் கடும் சிரமத்துக்கு இடையேதான் பணியாற்றுகின்றனர். அவர்களுக்குப் போதுமான உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை. இந்திய மருத்துவ சங்கம் இதுபோன்ற பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார். 

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை எதிர்க்க, அரசியல் ரீதியாக, பி.ஜே.பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளால் இந்தப் போராட்டம் தூண்டிவிடப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கான சாத்தியங்களையும் மறுத்துவிட முடியாது. 

Vikatan