16 மருந்துகள் தரமற்றவை... மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் அறிக்கை!

கடந்த மாதம் 1,001 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 985 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது; 16 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் மருந்து உற்பத்தி மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 16 மருந்துகள் தரமற்றவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பொதுச் சுகாதார சேவை இயக்ககத்தின் கீழ் இயங்கும் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாடு நிறுவனம் (CDSCO) மேற்கொண்ட மாதாந்திர ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து சி.டி.எஸ்.சி.ஓ அறிக்கை வெளியிடுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 1,001 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 985 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது; 16 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஜீரணக் கோளாறு, பாக்டீரியா தொற்று தடுப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள்; கைகளைச் சுத்தப்படுத்தும் கிருமி நாசினிகள் உள்ளிட்ட 16 மருந்துகள் தரமின்றி இருப்பதாக இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத், தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மருந்துகளின் பட்டியலை, சி.டி.எஸ்.சி.ஓ அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதே போல், 2020 டிசம்பர் மாதம் 943 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 928 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டு, 15 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 59 மருந்துகள் தரமற்றவை என்று ஆய்வில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.