Published:Updated:

'நீட் தேர்வை எதிர்ப்பதில் நியாயம் இல்லை!'  -வரிந்து கட்டும் வி.சி.க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'நீட் தேர்வை எதிர்ப்பதில் நியாயம் இல்லை!'  -வரிந்து கட்டும் வி.சி.க.
'நீட் தேர்வை எதிர்ப்பதில் நியாயம் இல்லை!'  -வரிந்து கட்டும் வி.சி.க.

'நீட் தேர்வை எதிர்ப்பதில் நியாயம் இல்லை!'  -வரிந்து கட்டும் வி.சி.க.

முன்குறிப்பு: 'நீட் தேர்வு அவசியமா?' என்ற வாதங்களுக்கு இடையே,  நீட் தேர்வின் அவசியம் குறித்த மறுபக்கத்தை ரவிக்குமார் முன்வைக்கிறார். எந்த விஷயத்தின் இருதரப்பையும் ஆராய்ந்தே முடிவுக்கு வர முடியும் என்பதே நோக்கம். கட்டுரையை வாசித்த பின் இதுகுறித்து தங்கள் கருத்துகளை கமென்ட் பாக்ஸில் பதியலாம்.

மருத்துவக் கல்வி இடங்களுக்கு நடந்த நீட் தேர்வில் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட சோதனை, நாடு முழுவதும் பெருத்த விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ' நீட் தேர்வை எதிர்ப்பது அவசியமற்றது. நமது கல்விமுறையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராமல் எதிர்ப்பது சரியானதல்ல. விதிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்வு எழுத வந்தது மாணவர்கள் செய்த தவறு' என அதிர வைக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார். 

இந்தியா முழுவதும் 2017-18 கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு 56 ஆயிரம் இடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் என அறிவித்தது மத்திய அரசு. கடந்த 7-ம் தேதி நடந்த இந்தத் தேர்வில் பலவிதமான சோதனைகளுக்கு ஆளானார்கள் மாணவர்கள். தமிழ்நாட்டில் மட்டும் 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, மாணவர்களின் ஆடைகளைக் களைந்து சோதனை செய்தது; முழுக்கை சட்டையைக் கிழித்தது என கல்வி அதிகாரிகள் சிலர் வரம்பற்று நடந்து கொண்டனர். இதற்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார்,

" நீட் தேர்வுக்கான விதிமுறைகளில், 'முழுக்கை சட்டை, ஹை ஹீல்ஸ் போட்டுவரக் கூடாது' என முன்கூட்டியே அறிவுறுத்தியுள்ளனர். தவிர, தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் மைக்ரோ உபகரணங்கள் வந்துவிட்டன. இதன்மூலம் காப்பியடிக்கும் நிகழ்வுகள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, கல்வித்துறை ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதற்காக, சட்டையைக் கிழிப்பது போன்ற செயல்களை நான் ஏற்கவில்லை. 'முழுக்கை சட்டை போட்டு வரக் கூடாது' எனக் கூறிய பின்னரும், மாணவர்கள் ஏன் அவ்வாறு தேர்வுக் கூடத்துக்குச் செல்ல வேண்டும்? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலேயே பல விதிமுறைகள் உள்ளன. நீட் தேர்வுக்கு என வழிமுறைகள் சொல்லும்போது, அதைக் கடைபிடிக்க வேண்டியது மாணவர்களின் கடமை. அரசின் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்றவர்கள் போலீஸார் அல்ல. கல்வித்துறையில் பணிபுரிகின்றவர்கள்தான். 'உள்ளாடை அணியக் கூடாது என அதில் விதிமுறை இருக்கிறதா?' என்றெல்லாம் பார்க்காமல் சில இடங்களில் முட்டாள்தனமாக நடந்துள்ளனர். விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தேர்வுக்கு வருகின்ற மாணவர்கள், காப்பியடிக்கும் நோக்கில்தான் வருகிறார்கள் என அனைவரையும் ஒரே நோக்கில் வைத்துப் பார்ப்பதுவும் தவறானது. கடந்த சில நாள்களாக, ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது. ' கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட்' என சிலர் பேசுகின்றனர். நம்முடைய கல்விமுறையை 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றாமல் வைத்திருக்கிறார்கள். தொடக்க காலங்களில் கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்தது. அவசர நிலை காலகட்டத்தில் அதை பொதுப் பட்டியலுக்கு மாற்றிவிட்டார்கள். இத்தனை ஆண்டுகளாக இன்னும் பொதுப் பட்டியலில்தான் இருக்கிறது. இதற்கு எதிராக எந்த மாநிலங்களும் குரல் கொடுக்கவில்லை. பொதுப்பட்டியலில் இருப்பதால், கல்வியை தரப்படுத்துவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது. 'அந்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இதற்கான ஒரு நடவடிக்கையாக, நீட் தேர்வை அமல்படுத்தும்போது, ' எங்கள் தரம் குறைவாக இருக்கிறது. விலக்கு கொடுங்கள்' எனக் கேட்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. 'நீட் வந்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்' என்பதைவிட அப்பட்டமான பொய் இருக்க முடியாது. கிராமப்புற மாணவர்களில் 90 சதவீதம் பேர் அரசுப் பள்ளியில்தான் படிக்கின்றனர். இங்கிருந்து மருத்துவப் படிப்புக்குச் செல்கின்றவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கே 30 பேர்தான். இன்றைக்கு உள்ள கல்வி முறை ஏழை மாணவர்களுக்கு உறுதுணையாக இல்லை. கிராமப்புற மாணவர்களை மேம்படுத்தாமல், தனியார் பள்ளிகளுக்கு சாதகமான போக்கைத்தான் மாநில அரசுகள் கடைபிடிக்கின்றன. 

நாமக்கல் உள்பட சில மாவட்டங்களில் பிளஸ்-2 பாடத்தையே இரண்டு ஆண்டுகள் நடத்துகிறார்கள். அதன்மூலம் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்கிறார்கள். இந்த சட்டவிரோதத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதைக் களைய பிளஸ்-1 பொதுத் தேர்வை அரசு நடத்த வேண்டும் அல்லது ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் உள்ளது போல, பத்தாம் வகுப்புக்குப் பிறகு இளநிலைக் கல்லூரிகளாக மாற்ற வேண்டும். மற்ற மாநிலங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 என இல்லாமல் இளநிலைக் கல்லூரிகளாக இருக்கும்போது, இங்கும் அப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அதைச் செய்யாமல், 'நாங்கள் பின்னால் இருக்கிறோம். நீட் தேர்விலிருந்து விதிவிலக்குக் கொடுங்கள்' என்கிறார்கள். திட்டமிட்டே கல்வித் தரம் பின்னால் போனதற்கு யார் காரணம்? கிராமப்புற மாணவர்களைக் காரணம் காட்டி, தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளையடிப்பதற்குத்தான் இவர்கள் வழி செய்கிறார்கள். கல்வி என்பது பொதுப் பட்டியலுக்குச் சென்றபோதே நமது உரிமை பறிபோய்விட்டது. அதை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. அதற்காக இவர்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை? தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வரம்பற்றக் கொள்ளையை எப்படித் தடுப்பது? இதைப் பற்றி இவர்கள் பேசுகிறார்களா? அதையெல்லாம் செய்யாமல் நீட் தேர்வைப் பற்றி மட்டும் பேசுவது என்பது எப்படிச் சரியாகும்? நீட்டை எதிர்த்து முதலில் வழக்குப் போட்டது தனியார் மருத்துவக் கல்லூரிகள்தான். 'நாங்களே நுழைவுத் தேர்வை வைத்து நடத்திக் கொள்கிறோம்'  என அவர்கள் வைத்த வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், எதிர்ப்பது எந்த வகையில் நியாயமானது இல்லை" என்றார் கொந்தளிப்புடன். 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு