Published:Updated:

ஐ.சி.யூ-வில் சென்னை... கோமாவில் அரசு! - 25 லட்சம் கொரோனா பாசிட்டிவ்?

கொரோனாவுக்கு மட்டுமல்ல... டெங்கு, பன்றிக்காய்ச்சல் சீஸன்களிலும் இதே வேலையைத்தான் இந்த அரசு செய்தது.

பிரீமியம் ஸ்டோரி

‘தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு விகிதம் 0.6 சதவிகிதம்தான். இறப்பு ஒரு சதவிகிதத்தைக்கூட எட்டவில்லை; இறப்பு விகிதத்தைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்’ என்று மீண்டும் மீண்டும் கூறிவருகிறது தமிழக அரசு. ஆனால், மருத்துவத்துறையில் இருக்கும் நேர்மையான அதிகாரிகளோ, “ஒருவேளை மக்களைப் பீதியடைய வைக்கக் கூடாது என்பதால் அரசு சிலவற்றைச் சொல்லாமல் மறைக்கலாம். ஆனால், பரிசோதனை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இந்த அரசு மொத்தமாகக் கைவிட்டுவிட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள் தொடங்கி சாமானியர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லை. நாம் நினைப்பதைவிட சென்னையில் வெகு வேகமாகப் பரவிவருகிறது கொரோனா. எங்கள் கணிப்பு சரியாக இருக்குமென்றால் சென்னையில் 25 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம்!” என்று அதிரவைக்கிறார்கள்!

அவர்கள் சொல்வதை உறுதிப்படுத்தும் வகையில் சென்னையில் அடுத்தடுத்து சில உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் `கிரேடு-1’ நிலையில் பணியாற்றிய மூத்த செவிலியர் பிரிஸில்லா உயிரிழந்தார். இறப்புக்கான சான்றிதழில் `கோவிட்-19 நெகட்டிவ்’ என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், அவருக்கு கொரோனா வார்டில்தான் சிகிச்சையளிக்கப்பட்டது. அவரது கேஸ் ஷீட்டில் `கொரோனா பாசிட்டிவ்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. காரணம் கேட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, ‘50 லட்சம் ரூபாய் இழப்பீடு அல்லது வாரிசுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்’ என்று மேலிடம் தரப்பில் சமரசம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஐ.சி.யூ-வில் சென்னை... கோமாவில் அரசு! - 25 லட்சம் கொரோனா பாசிட்டிவ்?

அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர் களுக்கும், அரசுடன் இணைந்து பணியாற்றியவர்களுக்குமே இந்த நிலைமை. அப்படியெனில் சாமானியர்களின் நிலை?

“கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் எடுக்கப்பட்ட சளி மாதிரிகள் அரசு ஆய்வகங்களுக்குத்தான் அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து உண்மையான பரிசோதனை முடிவுகள் வருவதில்லை. மேலிடத்தில் என்ன உத்தரவு வருகிறதோ அதற்கேற்ப பரிசோதனை முடிவுகள் மாற்றப்படுகின்றன. அரசு மருத்துவமனையில் ஒருவரை கொரோனா வார்டில் அனுமதித்து, கொரோனாவுக்கான மருந்துகளைக் கொடுத்து சிகிச்சையளித்தும்கூட ‘கொரோனா நெகட்டிவ்’ என்று முடிவு தெரிவித்ததே இதற்குச் சான்று.

கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில் ‘மிதமான பாதிப்புள்ளவர்கள்’ மற்றும் ‘உடல்நலம் தேறிவிடுவார்கள்’ என்ற நிலையில் உள்ளவர்களை மட்டுமே கொரோனா வார்டில் அனுமதிக்கின்றனர். உடல்நலம் மோசமாக இருப்பவர்களை கொரோனா நோயாளிகள் கணக்கில் சேர்ப்பதே இல்லை. பரிசோதனையில் அவர்களுக்கு ‘பாசிட்டிவ்’ என்று முடிவு வந்தாலும், ‘நெகட்டிவ்’ என்றே பொய்யாகக் காட்டுகிறார்கள். சரிவர சிகிச்சையும் அளிப்பதில்லை. பிறகு நோயாளிகள் உயிரிழந்ததும், அவர்களுக்கு ஏற்கெனவே இருந்த பிற உடல்நலக் கோளாறுகளைக் காரணமாகக் குறிப்பிட்டு இறப்புச் சான்றிதழ் அளிக்கப் படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனாவுக்கு மட்டுமல்ல... டெங்கு, பன்றிக்காய்ச்சல் சீஸன்களிலும் இதே வேலையைத்தான் இந்த அரசு செய்தது. தற்போது சென்னை மாநகரமே மிகத் தீவிரமான நோய்த்தொற்றில் சிக்கியுள்ள நிலையில் தமிழக அரசு கோமாவில் கிடப்பதுபோல முடங்கியிருக்கிறது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர்.

ஐ.சி.யூ-வில் சென்னை... கோமாவில் அரசு! - 25 லட்சம் கொரோனா பாசிட்டிவ்?

இறப்பு விகிதத்தைக் குறைத்துக் காட்டுவதில் மாநில அரசுக்குச் சளைத்ததல்ல மத்திய அரசு. இந்த விஷயத்தில் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்தே செயல்படுகின்றன. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறையின் சில முக்கிய அதிகாரிகள் நம்மிடம் பேசினார்கள்.

“ `பரிசோதனைகள் குறைவாகச் செய்யப்படுகின்றன’ என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, அவற்றின் எண்ணிக்கையைப் படிப்படியாக அதிகரித்தது தமிழக அரசு. ஆனால், தற்போது மீண்டும் பரிசோதனைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பரிசோதனைகளைக் குறைத்துவிட்டார்கள். `ரேபிட் டெஸ்ட்’ பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. இதில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கும் தகவல் அளிக்கப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

தமிழக சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகள் தினமும் மதியத்துக்கு மேல் நடத்தும் கூட்டங்களில்தான் அன்றைய தினம் அறிவிக்கப்பட வேண்டிய கொரோனா தொடர்பான எண்ணிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆட்சியாளர்கள் அளிக்கும் ‘அட்வைஸ்கள்’ அடிப்படையிலேயே இந்த எண்ணிக்கை ஊடகங்களுக்குச் சொல்லப்படுகிறது. உண்மை விவரங்கள் மறைக்கப்படுகின்றன. குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையை மட்டும் பிரபலப்படுத்துகின்றனர்.

உதாரணமாக, `சென்னையில் 25 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்’ என்று மருத்துவத்துறை தரப்பில் கணிக்கப் பட்டுள்ளது. அதாவது, சுமார் 25 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம். அவர்களில் திடகாத்திரமாக இருக்கும் பலருக்கும் தங்களுக்குத் தொற்று இருப்பதே தெரியாமல் இருக்கலாம். அவர்கள் தொடர்ந்து பிறருக்கும் தொற்றைப் பரப்பக்கூடும்.

ஆனால் பரிசோதனைகளைத் தவிர்ப்பது, பரிசோதனைக்குச் செல்பவர்களைத் திருப்பி அனுப்புவது என உண்மையான எண்ணிக்கையை எதிர்கொள்ளாமல் தவிர்த்துவருகிறது தமிழக அரசு. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் சமூகப் பரவல் அதிகரித்து, நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டது” என்றனர் வேதனையுடன்.

இது தொடர்பாக மருத்துவச் செயற்பாட்டாளர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்திடம் பேசினோம். “கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் பரவலையும், நோய் தீவிரம் அடைவதையும் தடுக்க முடியும். பாசிட்டிவ், நெகட்டிவ் என எது வந்தாலும் தெரிவித்துவிட வேண்டும். இரண்டு முறை நெகட்டிவ் வந்தாலும். மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், நிலைமை தலைகீழாக இருக்கிறது.

ஐ.சி.யூ-வில் சென்னை... கோமாவில் அரசு! - 25 லட்சம் கொரோனா பாசிட்டிவ்?

இறந்தவர்களுக்குப் பரிசோதனை செய்யாமலேயே ‘நெகட்டிவ்’ என்று குறிப்பிட்டுவிடுகின்றனர். இதுபோன்ற பேரிடர் சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு யார் இறந்தாலும், அவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்ய வேண்டும்.

இறந்தவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்திருந்தால், இறப்புக்கான அறிக்கையில் ‘அநேகமாக கொரோனா’ (Probably Covid) என்று குறிப்பிட வேண்டும். அத்துடன் அவருக்கு இருந்த பிற உடல்நலக் கோளாறுகளையும் குறிப்பிட வேண்டும். சென்னை கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்யப்பட்டதால்தான் கொரோனா இருந்தது கண்டறியப்பட்டது. சமீபத்தில் உயிரிழந்த ஐ.ஐ.டி ஊழியருக்கும் இப்படித்தான் கொரோனா கண்டறியப்பட்டது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் நிகழும் அனைத்து உயிரிழப்புகளிலும் இந்த முறை பின்பற்றப்படுவதில்லை” என்றார்.

`தமிழகத்தில் உண்மையான கொரோனா இறப்பு விகிதம் என்ன, கொரோனா மரணங்களை அறிவிப்பதில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறதா?’ என்று பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநரான மருத்துவர் வடிவேலுவிடம் கேட்டோம்.

“கொரோனா பரவுகிறது... சரி. இதனால், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு நிகழாமல் போய்விடுமா? உடல்நலக் கோளாறு களால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டவர்களின் இறப்பு எல்லாக் காலங்களிலும் எப்படி நிகழ்ந்ததோ அப்படித்தான் இப்போதும் தொடர்கிறது. எனவே, தற்போது இறப்பவர்கள் அனைவரும் கொரோனாவால் இறப்பவர்கள் என்று கூறிவிட முடியாது. சர்க்கரைநோய், பக்கவாதம், மாரடைப்பு போன்ற நோய்களாலும் உயிரிழக்க வாய்ப்புள்ளது. கொரோனா பாசிட்டிவ் உள்ள ஒரு நோயாளி உயிரிழந்தால், கொரோனா பாசிட்டிவ் குறியீட்டுடன் அவருக்கு இருந்த பிற உடல்நலக் கோளாறுகளையும் குறிப்பிட்டே அறிக்கை வழங்குகிறோம்.

நீங்கள் சொல்வதைப்போன்றெல்லாம் இறப்புகளை மறைக்க முடியாது. சுகாதாரத்துறையின் செயல்பாடுகளில் ஒளிவு மறைவு இல்லை; வெளிப்படைத்தன்மையுடன் இங்கு செயல்படுகிறோம். கொரோனா அறிகுறிகளுடன் இறந்தவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது வரை கொரோனா இறப்பு விகிதம் 0.7 சதவிகிதமாகத்தான் இருக்கிறது” என்றார் உறுதியான குரலில்.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு” என்றார் வள்ளுவர்.

ஓர் அரசு பசியும், பிணியும், அண்டை நாட்டு பகையும் நேராமல் தம் மக்களைக் காக்க வேண்டும். ஆனால், இவை மூன்றுமே இப்போது நம்மைப் பிடித்து ஆட்டுவிக்கின்றன. என்ன செய்யப்போகிறார்கள் ஆட்சியாளர்கள்?

மறைக்கப்படும் மரணங்கள்!

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் நம்மிடம், “கடந்த இரண்டு மாதங்களில் சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துமனையில் கொரோனா தொற்று காரணமாக சுமார் பத்துப் பேர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 26.3.2020-லிருந்து 30.5.2020 வரையிலான காலகட்டத்தில் இங்கு சுமார் 73 பேருக்கு போஸ்ட்மார்ட்டம் செய்திருக்கிறார்கள். `இவை கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் உடல்களாக இருக்கலாம்’ என்று சந்தேகம் எழுகிறது. இதற்கென தனிக்குழு அமைத்து மருத்துவ மனை ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

வட சென்னையில் 45 வயது பெண்மணி ஒருவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக் கிறார்கள். அவர் ஏழ்மையான குடும்பம்; பணம் வசூலிக்க முடியாது என்பதால், அரசு மருத்துவமனைக்குப் போகச் சொல்லிவிட்டார்கள். ஒமந்தூரார் மருத்துவ மனைக்கு அவர் வந்தபோது மூச்சுத்திணறல், குளிர்க் காய்ச்சல் என கொரோனா அறிகுறிகள் இருந்தன. ஓரிரு மணி நேரங்களில் அவர் இறந்துவிட்டார். கொரோனா பரிசோதனை எதுவும் செய்யாமல் ‘சர்க்கரைநோய் காரணமாக இறந்துவிட்டார்’ என்று சொல்லி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள். இப்போது அவரது உடலைக் கையாண்ட உறவினர்கள் உட்பட அத்தனை பேருக்கும் கொரோனா பரவியிருக்கும். சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்க இதுபோன்ற சம்பவங்கள்தான் காரணம்” என்றார் வருத்தத்துடன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு