Published:Updated:

30 நாள்களில் கொரோனாவை ஒழிப்பது எப்படி?- ‘புத்தகம் எழுதும்’ எடப்பாடி!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

தடுப்பு நடவடிக்கையிலும் கண்காணிப்பிலும் கோட்டைவிட்டது தமிழக அரசு. தமிழகத்தின் முதல் சில கோவிட்-19 நோயாளிகளை அரசு கண்டறியவில்லை.

நாளுக்கு நாள் கொரோனா தன் வீரியத்தைக் காட்டிக்கொண்டேயிருக்க, ஆட்சியாளர்கள் கையில் எடுத்திருக்கும் அனைத்து வழிமுறைகளும் உபயோகமற்றுப் போய்க்கொண்டிருக்கின்றன.

‘உலகமெங்கும் இருக்கிறது’ என்று சொல்லிக்கொண்டாலும், பல நாடுகளில் கவனமாகக் கையாண்டு மீண்டிருக்கிறார்கள்; மீண்டுகொண்டி ருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் நிலை பரிதாபம். குறிப்பாக, சென்னையில் இதன் கோரத்தாண்டவத்தை அடக்கவே முடியவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஊரடங்கில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள்; புறநகர்ப் பகுதிகளில் டாஸ்மாக்கைத் திறந்துவிட்டது; வெளியூர்களுக்குச் செல்பவர்களை முழுமையாகப் பரிசோதிக்காமல் அனுப்புவது; இ-பாஸ் வழங்குவதிலும் தில்லுமுல்லுகள்; கொரோனா பரிசோதனை களில் சந்தேகங்கள்; கொரோனா மரண எண்ணிக்கையில் குளறுபடிகள்... என அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பலவும் கொரோனாவுக்குச் சாதகமாகவே இருக்கின்றன. இவற்றையெல்லாம் முறைப்படுத்தாமல், ஒழுங்குபடுத்தாமல் தினம் தினம் மைக் முன்பாக முழங்குவது மட்டும்தான் நடந்துகொண்டிருக்கிறது.

தற்போது நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருக்கும் சூழலிலும் எடப்பாடி அரசின் நடவடிக்கைள், ‘30 நாள்களில் கொரோனாவை ஒழிப்பது எப்படி?’ என்று ஒரு புத்தகம் எழுதினால் எப்படியிருக்குமோ... அப்படித்தான் இருக்கின்றன. சொல்லப்போனால், ‘`முப்பதே நாள்களில் கொரோனாவை ஒழித்துக்கட்டும் திட்டத்துடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் அண்ணன் எஸ்.பி.வேலுமணியைக் களத்தில் இறக்கிவிட்டுள்ளார் எடப்பாடி. பாருங்கள் கொரோனா எந்த அளவுக்கு ஓட்டமெடுக்கப் போகிறது’’ என்று மூத்த அமைச்சர்களே ‘கிச்சுகிச்சு’ மூட்டிக்கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை!

கலவரமூட்டும் டெல்லி நிலவரம்!

`இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனாவின் தாக்கம் எட்டு லட்சத்தைத் தாண்டும்’ என்று மெக்ஸிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்துள்ளனர். தலைநகரான டெல்லியில் இறப்பும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால், மருத்துவ மனைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. ஒருகட்டத்தில் கொரோனா நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய மாநில சுகாதாரத்துறை, மத்திய அரசின் உதவியையும் நாடியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், பிணங்களை எரியூட்டக்கூடப் போதிய வசதி இல்லாமல் திண்டாடிவிட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார் டெல்லியில் பணிபுரியும் ஓர் அதிகாரி. ‘‘டெல்லி மாநகரில் நான்கு மின்சார சுடுகாடுகளும், ஆறு எரிவாயு சுடுகாடுகளும் உள்ளன. இவை தவிர சில இடங்களில் விறகு வைத்து எரியூட்டப்படும் இடங்களும் உள்ளன. ஆனால், கொரோனா தாக்கத்துக்குப் பிறகு அனைத்து சுடுகாடுகளிலும் பிணங்களை எரிப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. மின்சார சுடுகாடுகளில் ஒரு பிணத்தை எரிக்க மூன்று மணி நேரம் ஆகும். அதற்குப் பிறகு ஒரு மணி நேரம் கழித்துத்தான் அடுத்த பிணத்தை எரியூட்ட முடியும். ஆனால், ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டதால், பிணங்களை எரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. எனவே, வரிசையின் அடிப்படையில் பிணங்களைக் கொண்டுவரச் செய்து எரியூட்டினார்கள்.

இதனால், பிணவறையில் உடல்களைச் சேர்த்துவைக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர சில இடங்களில் உடல்களை உறவினர்களிடம் கொடுக்கும்போது மாற்றிக் கொடுத்த கொடுமையும் நடந்தது. இவையெல்லாம் அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய பிறகே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலில் கூட்டினார்கள். அடுத்தகட்டமாக மத்திய அரசுடனும் ஆலோசனை செய்தார்கள்’’ என்கிறார்.

அமித் ஷாவுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் சில திட்டங்கள் வகுக்கப்பட்டன. பிணங்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க, விறகுகள் மூலம் பிணங்களை எரிக்கும் இடங்களில் கூடுதலாகப் பிணங்களை எரியூட்ட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. டெல்லி மாநகரில் விறகுக்குத் தட்டுப்பாடு இருந்ததால், உத்தரப் பிரதேசத்திலிருந்து விறகுகளைக் கொண்டுவந்து, ஒவ்வொரு சுடுகாட்டிலும் சேமித்துவைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மரணத்துக்குப் பிறகும் டெல்லியில் நடக்கும் இந்தக் களேபரங்களால் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

டெல்லி நிலவரத்தைச் சொல்லி கலவரப் படுத்துவதற்காக இவற்றைச் சொல்லவில்லை. `கிட்டத்தட்ட அந்தச் சூழலை நோக்கித்தான் சென்னையும் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது’ என்கிறார்கள் தகவல் தெரிந்தவர்கள்.

அரசு எங்கே கோட்டைவிட்டது?

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியபோதே கேரளாவும் தமிழகமும் மருத்துவ அவசரநிலைச் சூழலைச் சந்திப்பதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்கின. தமிழகத்தில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டது. நோயாளிகளே வராதபோதும் செல்வதற்குத் தனி வழி, பிரத்யேக லிஃப்ட், ஆம்புலன்ஸ் எனத் தயார் நிலையில் இருந்தது. ஆனால், கேரளா செய்த முக்கியமான விஷயத்தை தமிழகம் செய்யவில்லை.

தடுப்பு நடவடிக்கையிலும் கண்காணிப்பிலும் கோட்டைவிட்டது தமிழக அரசு. தமிழகத்தின் முதல் சில கோவிட்-19 நோயாளிகளை அரசு கண்டறியவில்லை. வெளிநாட்டில், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த அந்தப் பயணிகளைத் தவறவிட்டது. சில அறிகுறிகள் தோன்றியதால், அவர்களாகவே மருத்துவ மனையில் பரிசோதனை செய்தபோது நோய் கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். விமான நிலையத்தில் கண்காணிப்பை ஏற்படுத்திய போதும், ரயில் நிலையங்களைக் கண்காணிக்கவில்லை.

மார்ச் மாதத்தில் ஷார்ஜாவிலிருந்து 118 பேர் விமானத்தில் கோவைக்கு வந்தனர். அவர்களில் 30 பேரை மட்டும் குவாரன்டைன் செய்த சுகாதாரத்துறையினர், மீதமுள்ள 88 பேரை எந்தக் கண்காணிப்பிலும் ஈடுபடுத்தாமல் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். இந்த விவகாரம் ஊடகங்களில் விவாதப் பொருளானது. சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இந்தக் கவனக்குறைவு குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘ஷார்ஜாவிலிருந்து வந்தவர்கள் வைஃபை இணைப்பு, டிகிரி காபி, ஏ.சி அறையெல்லாம் கேட்கிறார்கள். எங்களால் அவற்றையெல்லாம் வழங்க முடியாது என்பதால் அனுப்பிவிட்டோம்’ என்று பதில் தந்தனர். கண்காணிப்பில் அரசின் மெத்தனத்துக்கு இது ஒரு சோறு பதம்.

30 நாள்களில் கொரோனாவை ஒழிப்பது எப்படி?- ‘புத்தகம் எழுதும்’ எடப்பாடி!

தவறிய இடங்கள் இவைதான்!

அரசு தவறிய இடங்கள் எவை என்று அரசு மருத்துவர்கள் சிலரிடம் விசாரித்தோம். ‘‘மனிதவளக் கட்டமைப்பை மேம்படுத்தாததுதான் அரசு செய்த மிக முக்கியமான தவறு. ஒரு கட்டடத்தின் அஸ்திவாரத்தை பலமாகப் போடாவிட்டால் கட்டடம் தள்ளாடவே செய்யும். அதுதான் கொரோனா விஷயத்திலும் நடக்கிறது. சென்னை இன்று கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக மாறியிருக்கிறது. பிற மாவட்டங்களைத் தமிழக சுகாதாரத்துறையின் பொது சுகாதாரத்துறை நிர்வகிக்கிறது. ஆனால், சென்னையின் பொது சுகாதாரம் என்பது சம்பந்தமே இல்லாமல் சென்னை மாநகராட்சி வசம் உள்ளது. மாநகராட்சியால் பொது சுகாதார அவசரநிலையை எப்படி நிர்வகிக்க முடியும்?

இதுவரை சுனாமி, 2015-ம் ஆண்டு வெள்ளம், வர்தா புயல், பன்றிக்காய்ச்சல், டெங்கு எனப் பல்வேறு சுகாதார அவசரநிலைகளைச் சென்னை கையாண்டிருக்கிறது. அப்போதெல்லாம் மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளே அவற்றுக்குத் தீர்வு கண்டன. இப்போது நிலைமை அப்படியில்லை. நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மருத்துவர்கள், செவிலியர்களையும் புதிதாக நியமித்திருக்க வேண்டும். மருத்துவப் பணியாளர் நியமனத்துக்கென்றே உருவாக்கப்பட்ட மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

மனிதவளத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கொரோனா பணிகளுக்கு தொடர்ந்து குறிப்பிட்ட சில ஊழியர்களையே மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் பயன்படுத்துகின்றனர். அதனால், மருத்துவத்துறையினரும் தொடர்ந்து நோய்த்தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 127 ஊழியர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதே இதற்குச் சான்று.

நிலைமை கையைமீறிப் போன பிறகு தொகுப்பூதியத்தில் நியமனம் நடைபெறுகிறது. கான்ட்ராக்ட் முறையில் பணியாளர்களை நியமிக்கும்போது முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய மாட்டார்கள். அரசாலும் அவர்கள்மீது அதிகாரத்தைச் செலுத்த முடியாது. இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களும் சிகிச்சையில் தாக்கத்தை விளைவிக்கும். தரமான சிகிச்சைதான் நோயாளியை நோயிலிருந்து மீட்டெடுக்கும்’’ என்கின்றனர்.

சென்னை மீண்டெழுமா?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 50,000-ஐ தாண்டியிருக்கிறது. இதில் ஏறத்தாழ 70 சதவிகிதம் பேர் சென்னையில் மட்டும் பாதிப்படைந் துள்ளனர். நிலைமை கைமீறிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், முழு ஊரடங்கை அரசு மீண்டும் அறிவித்திருக்கிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முழுக் கட்டுப்பாட்டையும் கையிலெடுத்திருக்கிறார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த என்ன செய்யப்போகிறது சென்னை மாநகராட்சி, அவர்களின் திட்டம்தான் என்ன? மாநகராட்சியின் மூத்த அதிகாரிகளிடம் பேசினோம்.

‘‘மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மைக்ரோ லெவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறோம். கொரோனாவால் ஒருவர் பாதிப்படைந்தால், அவரின் வீட்டுக்கே சென்று மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் பரிசோதனை மேற்கொள்வார். இதுபோக, ஒவ்வொரு வார்டிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்துகிறோம். இங்கும் பரிசோதித்துக்கொள்ளலாம்.

கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் பெறுபவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா அறிகுறி இல்லையென்றாலும், அவர்களும் கட்டாயம் பரிசோதிக்கப்படுவார்கள். வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்ளும் சூழல் இல்லையென்றால், அரசின் கொரோனா தடுப்பு முகாம்களில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காகக் கூடுதல் படுக்கைகளுடன்கூடிய சிறப்பு முகாம்களை மண்டலவாரியாக ஏற்படுத்தியுள்ளோம். வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்பவர்கள் சுகாதாரத்தைப் பேணுகிறார்களா என ‘செக்’ செய்ய, களப் பணியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வீடு வீடாகச் சென்று பரிசோதிப்பார்கள். நோயாளியின் வீட்டுக்கருகே வசிப்பவர்களுக்கும் காய்ச்சல் அறிகுறி உள்ளதா எனப் பரிசோதிக்கப்படும். இவையெல்லாம் மண்டலவாரியாக மைக்ரோ லெவலில் நடைபெறும் என்பதால், தீவிரமாகக் கண்காணிக்க முடியும்.

குடிசைப் பகுதியில் யாருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டால், அவரோடு தொடர்பில் இருந்தவர்களையும் முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடாகியுள்ளது. இவர்களுக்கு மூன்று வேளை உணவும், கபசுரக் குடிநீரும் இலவசமாக வழங்கப்படும். பத்து முகாம்களுக்கு ஒரு தன்னார்வலர் பொறுப்பாளராக நியமிக்கப் படுவார். முகாம்களுக்குத் தேவைப்படும் பொருள்களை இவர் அரசிடமிருந்து பெற்று சப்ளை செய்வார். சென்னை முழுவதும் தினமும் இரு வேளை கிருமிநாசினி தெளிக்கப்படும். குடிசைப்பகுதி மக்கள் கைகளைக் கழுவுவதற்கு ஏற்ற வகையில் மொபைல் கைகழுவும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு களப் பணிகளை மேற்பார்வையிடும்’’ என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கொரோனா தடுப்புப் பணியில் இருந்த மூத்த அமைச்சர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ‘‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காதவரை சமூக விலகலையும், முகக்கவசம் அணிவதையும் கடைப்பிடித்தே ஆக வேண்டும். இந்த ஒழுக்கம்தான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும். அதிகாரி களின் நடவடிக்கைகளை ஆறு அமைச்சர்கள் குழு நேரடியாகக் கண்காணிக்கிறது. 30 நாள்களுக்குள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு பணியாற்றுகிறோம்’’ என்றார்.

வெளி மாநிலங்களில் கொரோனா பரவிக் கொண்டிருந்த காலத்தில் சட்டசபையை ஒத்திவைக்கும்படி தி.மு.க உறுப்பினர் துரைமுருகன் கேட்டபோது, ‘‘70 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பதால், துரைமுருகன் அச்சப்படுகிறார்’’ என்று கிண்டலாக பதிலளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கொரோனா பரவிய ஆரம்ப நாள்களில், ‘மூன்றே நாள்களில் கொரோனா போய்விடும்’ என்றும் ஆருடம் சொன்னார். அத்துடன், ‘இது பணக்காரர்களுக்கு மட்டும் வரும் வியாதி’ என்றும் திருவாய் மலர்ந்தார் முதல்வர். கொரோனா பரவல் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்பியதற்கு, ‘எதிர்க்கட்சியினர் அனைவரும் டாக்டர்கள் அல்ல’ என்று கிண்டலடித்தனர் அமைச்சர்கள். இப்படி விதண்டா வாதம் பேசியே ஆட்சியாளர்கள் காலத்தை ஓட்டினார்களே தவிர, கொரோனாவை ஒழிப்பதற்கான ஆக்கபூர்வமான எந்த வழிமுறையையும் கையிலெடுத்ததாகத் தெரியவில்லை.

எல்லாவற்றையும் திறந்துவிட்டவர்கள், தற்போது தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதுபோல ‘மீண்டும் ஊரடங்கு’ என்று கிளம்பியுள்ளனர். ஜூன் 19 முதல் 30 வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் (சென்னை பெருநகரக் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள்) முழு ஊரடங்கு அறிவித்துள்ளனர். ஆனால், ஆக்கபூர்வமான திட்டம் ஏதும் இல்லாமல் களத்தில் சுழல்வதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை என்பதே உண்மை.

30 நாள்களில் கொரோனாவை ஒழிப்பார்களா அல்லது 31 பேரும் (அமைச்சர்கள்) ஓடி ஒளிவார்களா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்!

ரகசியம் காப்பாளர் தாமோதரன்!

தமிழக முதல்வர் அலுவலக முதுநிலை தனிச் செயலாளர் தாமோதரன் கொரோனா தொற்றால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார்.

முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதும், தற்போது முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கும்போதும் முதல்வரையும் அவரின் செயலாளர்களையும் இணைக்கும் பாலமாக ஒன்பது ஆண்டுகள் பணியிலிருந்தார். ‘போன வாரம்தானே `நான் தாத்தா ஆயிட்டேன். பேத்தி பிறந்திருக்கு’னு எங்ககிட்ட சொல்லி தாமு சந்தோஷப்பட்டார்... இந்த வாரம் இப்படி போயிட்டாரே?’ - என்று முதல்வர் அலுவலக அதிகாரிகள் கண்ணீர்விடுகின்றனர்.

30 நாள்களில் கொரோனாவை ஒழிப்பது எப்படி?- ‘புத்தகம் எழுதும்’ எடப்பாடி!

முதல்வர் அறைக்கு மிக அருகில் அவரின் செயலாளர்கள் அமரும் வகையில் அறை இருக்கிறது. அங்கேதான் தாமோதரன் இருப்பார். அரசுத்துறைகளின் முக்கியச் செயலாளர்கள் அவசரமாக முதல்வரிடம் பேச வேண்டுமானால், இவரிடம்தான் சொல்லி இன்டர்காமில் கனெக்ட் பண்ணச் சொல்வார்கள். அமைச்சர்களும் அப்படித்தான்! இன்டர்காம் தவிர, நான்கு இலக்க எண்களைக்கொண்ட ஹாட் லைன் வசதி பிரத்யேகமாக இருக்கிறது. சில சமயம் சீனியர் அமைச்சர்கள்கூட தாமுவிடம் `முதல்வரின் மூடு எப்படியிருக்கிறது?’ என்று விசாரித்துக்கொண்ட பிறகே நேரில் வருவார்களாம். அந்த அளவுக்குத் தமிழகத்தின் முக்கியஸ்தர்களுடன் தொடர்பில் இருந்தாலும், யார் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி மூச்சுவிட மாட்டாராம். ‘ரகசியக் காப்பின் மறு பெயர் தாமு’ என்று உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள்.

கொரோனா அறிகுறி தெரிந்தும், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பணியில் பிஸியாக இருந்தாராம் தாமோதரன். மிகவும் சீரியஸான பிறகுதான் மருத்துவனைக்குப் போயிருக்கிறார். காலம் கடந்து வந்ததால், அவரைக் காப்பாற்ற முடியவில்லையாம்.