Published:Updated:

கைகழுவிய பழனிசாமி... காக்கப்போவது எந்தச்‘சாமி’?

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

சென்னையில் சாமானிய மக்கள் மட்டுமன்றி, பாதுகாப்பாக இருப்பதாகக் கருதப்படும் மேல்தட்டு வர்க்கம் தொடங்கி வி.வி.ஐ.பி-க்கள் வரை கொரோனா வேகமாகப் பரவிக்கொண்டிருக் கிறது.

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.

‘உலகத்தையெல்லாம் அரசன் காப்பாற்றுவான்’ என்கிறார் வள்ளுவர். ஆனால், தமிழகத்தை ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, ‘கொரோனா அழிவது எப்போது என்று கடவுளுக்குத்தான் தெரியும்’ என்று கைவிரிக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடந்த வாரம் `லாக்டௌன் என்று வதந்திகள் பரவுகின்றன’ என்று முதல்வர் பேட்டி கொடுத்தபோது 17.6.2020 தேதியிட்ட ஜூ.வி-யில் ‘மீண்டும் முழு லாக்டௌன்... கையறு நிலையில் எடப்பாடி... கைவிடப்படுகிறதா சென்னை?’ என்ற தலைப்பில், `லாக்டெளன் வருகிறது’ என்பதை அட்டைப்படக் கட்டுரையாக உறுதிபட எழுதியிருந்தோம். இரண்டு நாள்களிலேயே சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு லாக்டௌனை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அடுத்த சில நாள்களிலேயே அந்தக் கட்டுரையின் தலைப்பில் நாம் குறிப்பிட்டிருந்த, ‘கையறு நிலையில் எடப்பாடி’ என்கிற கருத்தையும் ‘கடவுளைச் சுட்டிக்காட்டி’ உறுதிப்படுத்தி யிருக்கிறார் முதல்வர். இதை முன்வைத்து, ‘கொரோனா விவகாரத்தில் பிரச்னையைக் கைகழுவி, மக்களைக் காக்கத் தவறிவிட்டாரா முதல்வர் பழனிசாமி?’ என்றெல்லாம் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.

கைகழுவிய பழனிசாமி... காக்கப்போவது எந்தச்‘சாமி’?

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக, `தினமும் ஆயிரம்’ என்ற எண்ணிக்கையைத் தாண்டி, சில நாள்களில் இரண்டாயித்தையும் தொட்டும் பரவிக்கொண்டிருக்கிறது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை. ஆனால் இன்னும், ‘சமூகப் பரவல் இல்லை’ என்று சாக்குப் போக்குகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வி.ஐ.பி-க்கள் பலி... பொது மக்கள் கிலி!

சென்னையில் சாமானிய மக்கள் மட்டுமன்றி, பாதுகாப்பாக இருப்பதாகக் கருதப்படும் மேல்தட்டு வர்க்கம் தொடங்கி வி.வி.ஐ.பி-க்கள் வரை கொரோனா வேகமாகப் பரவிக்கொண்டிருக் கிறது. டி.வி.எஸ் சுந்தரம் ஃபாஸ்ட்னெர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், வடபழனி விஜயா மருத்துவமனையின் இயக்குநர் சரத் ரெட்டி ஆகியோர் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாகியிருப்பது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க-வின் வட சென்னை முன்னாள் மாவட்டச் செயலாளர் பலராமன் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார். ரிஷிவந்தியம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

கொரோனா பரவல் வதந்திகளுக்கும் குறைவில்லை. `நடிகை நயன்தாராவுக்கு கொரோனா’ என்ற வதந்தியை அவரே மறுத்திருக்கிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று என்று தகவல்கள் வருகின்றன. ஆனால், `அவருக்கு உடல்நலக்குறைவு’ என்று மட்டுமே முதல்வர் சொல்கிறார்; அன்பழகனும் தனக்கு கொரோனா தொற்று இல்லை என்று மறுத்தார். ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலினோ ‘நான் அமைச்சரிடம் கேட்டுவிட்டுத்தான் கொரோனாவை உறுதி செய்தேன்’ எனச் சூடான பதில் தருகிறார். ஏன் இந்தக் கண்கட்டி வித்தைகள்? தொற்று இல்லையென்றால் அமைச்சர் ஏன் தன்னை வீட்டுக்குள் பூட்டிவைத்துக்கொள்ள வேண்டும்?

அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா என்ற தகவல் ஜூன் 21-ம் தேதி பரவியது. அன்றைய தினமே அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கும், அவர் மனைவிக்கும் அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ‘தொற்று இல்லை’ என்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் சண்முகத்துக்கு ஏற்கெனவே நுரையீரலில் பிரச்னை இருப்பதால் தொடர் சிகிச்சையில் இருந்துவந்தார். கடந்த வாரம் முழுவதும் அவருக்குக் காய்ச்சலும் இருந்தது. அதனாலேயே அவருக்கு கொரோனா தொற்று என்று வதந்தி பரவியது.

தலைநகர் சென்னை தலைதெறிக்கும் கிராம மக்கள்!

தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 800-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதில் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றி மட்டுமே 600-க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, சென்னை யிலிருந்து சொந்த ஊர்களுக்கு ஒரு கூட்டம் புறப்பட்டுப் போனது. ஒரு மாதத்துக்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் அவர்களில் சிலர் மட்டுமே திரும்பவும் சென்னைக்கு வந்தனர். இந்நிலையில், ஜூன் 19-ம் தேதி `சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு’ என்று மீண்டும் அறிவித்தவுடன், மீண்டும் வெளி மாவட்டத்தினர் சொந்த ஊருக்குத் திரும்ப ஆரம்பித்துவிட்டனர்.

கைகழுவிய பழனிசாமி... காக்கப்போவது எந்தச்‘சாமி’?

இதையடுத்து, ‘சென்னையிலிருந்து வருபவர் களால் கொரோனா ஆபத்து’ என்ற செய்தி வேகமாகச் சுழல ஆரம்பித்துவிட்டது. கடந்த ஒரு மாதமாக வெளி மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைவான எண்ணிக்கையிலேயே அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 20-ம் தேதியன்று அரசு வெளியிட்ட பாதிப்பு பட்டியலில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியிருந்தது. தென் மாவட்டங்களில் கணிசமான அளவுக்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாவட்ட எல்லைகளில் சோதனையைத் தீவிரப்படுத்தினர். சென்னையிலிருந்து கோரப்பட்ட இ-பாஸ்கள் ரத்துசெய்யப்பட்டன.

அதேசமயம், ‘`ஏற்கெனவே தமிழகம் முழுக்கவே கொரோனா பரவித்தான் கிடக்கிறது. சென்னையிலிருந்து வந்தவர்களால் அந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கலாமே தவிர, அவர்கள் வந்து பரப்பித்தான் இது அதிகரித்தது என்று கூறுவது தவறு. இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள்கூட இருக்கலாம்’’ என்று சொல்லும் வெளி மாவட்ட மருத்துவர்கள் சிலர் தங்களின் அனுபவத்தை எடுத்துவைத்தனர்.

விழுப்புரத்தில் தனியாக கிளினிக் நடத்திவரும் ஒரு மருத்துவர், ‘‘கொரோனாவை டெஸ்ட் வைத்து மட்டும்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில்லை. எங்களுடைய அனுபவத்திலேயே நாங்கள் கண்டறிந்து விடுவோம். உறுதிப்படுத்த நினைத்தால்தான் டெஸ்ட் தேவை. தினந்தோறும் நூறு பேர் எங்களிடம் வருகிறார்களென்றால், அவர்களில் 20, 25 பேர் கொரோனா அறிகுறி களுடன்தான் வருகிறார்கள். அவர்களை நாங்களே பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ஏசிம்ப்டமேட்டிக் (Asymptomatic) என்று தோன்றுபவர்களுக்குச் சாதாரண காய்ச்சல்போலப் பார்க்காமல், கொரோனாவுக்காக அரசு மருத்துவமனைகளில் தரப்படும் வைட்டமின் உட்பட அனைத்து மருந்து, மாத்திரைகளையும் பரிந்துரைத்து, `வீட்டிலேயே தனியாக இருங்கள். கொரோனா வாகக்கூட இருக்கலாம்’ என்று எச்சரித்தே அனுப்புகிறோம். தீவிரமாக சிகிச்சை தேவைப்படுபவர்களை மட்டும்தான் அரசு மருத்துவமனைகளுக்குப் போகச் சொல்லி அனுப்பிவருகிறோம். இதை நாங்கள் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்தே செய்துவருகிறோம். தற்போதுதான் அரசாங்கம் இதைக் கடைப்பிடிக்கிறது.

அதேபோல தமிழகம் முழுக்க ஆரம்பத்திலிருந்தே பரிசோதனைகளைச் சரிவர நடத்தாமலிருந்துவிட்டு, தற்போதுதான் தீவிரமாகச் செய்ய ஆரம்பித் துள்ளனர். அதுவும் சென்னையிலிருந்து வருபவர்களை மட்டும்தான் பரிசோதிக்கிறார்கள். அதுவே பாசிட்டிவ் கேஸ்களை அதிகமாகக் காட்டுகிறது. ஊர்களுக்குள் ஏற்கெனவே இருப்பவர்களையும் பரிசோதிக்க ஆரம்பித்தால்தான் உண்மை தெரியும்’’ என்று சொன்னார்.

இதே கருத்தைத்தான் தஞ்சாவூர், கரூர் என்று பல பகுதிகளிலுள்ள தனியார் கிளினிக் மருத்துவர் களும் உறுதிப்படுத்துகிறார்கள். அரசாங்கத்தின் பார்வை தீவிரமாக இருக்கும் சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளிலிருக்கும் தனியார் கிளினிக் மருத்துவர்களும்கூட ‘‘இதுதான் உண்மைநிலை’’ என்கிறார்கள்.

முள்வேலி வளையத்தில் தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை!

வெளி மாவட்ட கிராம மக்களிடமும் பீதி அதிகரித்துவிட்டது. புதுக்கோட்டை மாவட்ட எல்லை கிராமமான கருவூர் கிராமத்தில் வர்த்தகர்கள் ஐந்து நாள்கள் கடையடைப்பு நடத்தினர். ‘‘சென்னையிலிருந்து சுற்றுவட்டாரத் தில் நிறைய பேர் வந்துவிட்டார்கள். அவர்கள் மூலம் கொரோனா பரவிவிடக் கூடாது என்பதற்காகக் கடைகளை அடைத்துவிட்டோம். முழு ஊரடங்கில் எங்கள் கிராமம் இருக்கிறது” என்றார்கள் அவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கிராமங்களில் சென்னைவாசிகளை ஊருக்குள் அனுமதிக்க மறுத்து ஊர் எல்லையில் முள்வேலி போட்டிருக் கிறார்கள். பொன்னமராவதி அருகே கட்டையாண்டிபட்டி கிராமத்தில், ஜூன் 17-ம் தேதியிலிருந்து ஜூன் 30-ம் தேதி வரை கிராம மக்களே ஊரடங்கை அறிவித்திருக்கிறார்கள். கிராம மக்கள் கிராமத்தைவிட்டு வெளியே செல்வதில்லை; வெளி நபர்களுக்கும் அனுமதி இல்லை. தேவகோட்டைப் பகுதியில் அண்டக்குடி, நாரண மங்களம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையில் தொழிலாளர்களாக வேலை பார்த்துவருகிறார்கள். அங்கிருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், இனி சென்னையில் வசிக்கும் தங்கள் கிராமத்தினர் மற்றும் அந்நியர்கள் ஊருக்குள் வரக் கூடாது என்று முள்ளை வெட்டிப்போட்டு பாதையை நான்கு நாள்கள் அடைத்துவைத்துள்ளனர்.

கைகழுவிய பழனிசாமி... காக்கப்போவது எந்தச்‘சாமி’?

தஞ்சை மாவட்டம், கொ-வல்லுண்டாம்பட்டு ஊராட்சியில் வாலிபர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர், சென்னைக்குச் சென்று வந்ததுதான் தொற்றுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்த கிராமத்தினர், ‘எங்கள் ஊருக்கு யாரும் வர வேண்டாம்’ என்று அறிவித்து, ஊர் நுழைவு வாயிலில் முள்வேலி அமைத்துள்ளனர். அருகிலுள்ள வடக்குப்பட்டு கிராமத்திலும் முள்வேலி போடப்பட்டுள்ளது. மருங்குளம் நான்கு ரோடு சந்திப்பிலுள்ள நூற்றுக்கணக்கான கடை உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து 15 நாள்களுக்குக் கடைகளை அடைத்துள்ளனர்.

நிரம்பிவழியும் படுக்கைகள்... வேலூருக்கு சீல்!

வேலூர் மாவட்டத்திலும் தொற்று தீவிரமாகப் பரவிவருகிறது. தினமும் குறைந்தது 50 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்படுகிறது. இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிவருகிறது. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சி.எம்.சி மருத்துவமனை ஆகியவற்றின் கொரோனா வார்டுகளில் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள். படுக்கைகள் நிறைந்துவிட்டன. இதனால், புதிதாகத் தொற்று கண்டறியப்படும் நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப் படுகிறார்கள். சென்னையிலிருந்து வந்திருப்பவர்கள் குறித்துத் தகவல் சொல்ல கிராமம்தோறும் தண்டோரா மற்றும் மைக்செட் மூலமாக மாவட்ட நிர்வாகத்தினர் அறிவித்துவருகிறார்கள்.

தூத்துக்குடி... 24 மணி நேரக் கண்காணிப்பு

தூத்துக்குடியில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மாவட்ட எல்லைகளில் சோதனைகள் இறுக்கமாகியிருக்கின்றன. திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன் பட்டணம், அமலிநகர், ஆலந்தலை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் ஊர் கமிட்டி சார்பில் எல்லைகளில் செக்போஸ்ட் அமைத்திருக்கிறார்கள். உள்ளூர் இளைஞர்களே 24 மணி நேரமும் ஷிஃப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநபர்களுக்கு ஊருக்குள் வர அனுமதியில்லை.

மரணங்கள் மறைக்கப்படும் சேலம்!

சேலம் மாவட்டம் முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால், ஆரம்பத்திலிருந்தே நோயாளிகளின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. கொரோனா அறிகுறிகளுடன் இறந்தாலும், வேறு காரணங்களே பதிவுசெய்யப்படுகின்றன.

சூரமங்கலம் தர்மநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். அவர் திடீரென இறந்தநிலையில் `சர்க்கரை நோயால்தான் இறந்தார்’ என்று சொல்லப்பட்டது. சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த டிரைவர், வெளி மாநிலங்களுக்குச் சென்று வந்தது கண்டறியப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவரும் இறந்துவிட `அதிக அளவு மது குடித்ததால்தான் இறந்தார்’ என்று சொல்லப்பட்டது. பொன்னம்மா பேட்டையைச் சேர்ந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளரின் மனைவி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது பெயரும் இதுவரை அரசுப் பட்டியலில் இல்லை.

மதுரை... இ-பாஸ் இம்சை!

மதுரையில் சமீபகாலமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து இ-பாஸ் பெற்றும் பெறாமலும் கணிசமானோர் வந்துவிட்டார்கள். ‘இப்படி வருபவர்களுக்குப் பரிசோதனை செய்ய வேண்டும்’ என தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தின. பிறகே சோதனை அதிகரிக்கப்பட்டது. இதில் கணிசமான பேருக்கு நோய்த் தொற்றும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

பரவை காய்கறி மார்க்கெட்டில் சமூக இடைவெளி இல்லாமல் மக்களும் வியாபாரிகளும் கூடியதால் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அங்கு வந்து சென்றவர்களைக் கண்டறிந்து சோதனை செய்வது மாவட்ட நிர்வாகத்துக்குப் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் ஜூன் 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மதுரையிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோபத்தில் கோவை மக்கள்!

சில வாரங்களுக்கு முன்னர் கோவை பச்சை மண்டலத்தில் இருப்பதாக அரசுத் தரப்பில் அறிவித்தார்கள். அப்போது, ‘பரிசோதனைகளைக் குறைத்து, நோயாளிகளின் விவரங்களை வெளியிடாமல் இருக்கிறார்கள்’ என்ற புகார் எழுந்தது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் கோவைக்கு வந்து தங்கியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் சுற்றுவதால் தற்போது கோவை மாவட்ட மக்களின் கோபப் பார்வை இவர்கள்மீது திரும்பியுள்ளது. சின்னியம் பாளையம், ஆர்.ஜி.புதூர் பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததற்கும், 35-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டதற்கும் சென்னை தொடர்புதான் காரணம் என்றும் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இவையெல்லாம் தமிழகத்தில் ஆங்காங்கே நடக்கும் சிறு உதாரணங்களே. இதைவிட அதிகமான துயரங்களை எதிர்கொள்கிறார்கள் மக்கள். கொரோனா நவீன தீண்டாமையாக மாறி, மக்களிடையே பீதியூட்டுகிறது. இன்னொரு பக்கம் மரணங்களின் எண்ணிக்கை மக்களின் மன உறுதியைக் குலைக்கிறது.

சில நாள்களுக்கு முன்னர் ஊரடங்கைத் தளர்த்தியபோது ‘கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்’ என்கிற நிலை ஏற்பட்டது. இப்போது முதல்வர் பழனிசாமி கடவுளைக் கைகாட்டி, மக்கள் பாதுகாப்பை கைகழுவியிருக் கிறார். இது, ‘கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்’ என்பதற்கு மாறாக ‘கொரோனா வுடன் சாகப் பழகிக்கொள்ளுங்கள்’ என்று சொல் லாமல் சொல்வதைப்போலத்தான் இருக்கிறது!