Published:Updated:

முதல் குடிமகள் முர்முவுக்கு வாழ்த்துகள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

முதல் குடிமகள் முர்முவுக்கு வாழ்த்துகள்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

``ஏழைக் குடும்பத்தில் மகளாகப் பிறந்த நான் ஒரு சாதாரண கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிக் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்திருப்பதுதான் ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவம். இது கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவுகோல்'' - குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றதும் தனது முதல் உரையில் இப்படிப் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார் திரௌபதி முர்மு.

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடும் நேரத்தில் முதல்முறையாக பழங்குடி இனத்திலிருந்து ஒரு பெண்மணி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறுகிறார். சில மாதங்களுக்கு முன்புவரைகூட மின்சார வசதி பெற்றிருக்காத ஒடிசா மாநிலத்தின் ஒரு பழங்குடி கிராமத்தில் பிறந்த திரௌபதி முர்மு, இன்று நாட்டின் முதல் குடிமகள் ஆகியிருப்பது பெருமிதமான தருணம். நாட்டில் இருக்கும் சுமார் பத்துக் கோடி பழங்குடியின மக்களும் தங்கள் வீட்டுப் பெண்ணே குடியரசுத் தலைவர் ஆகியிருப்பதைப் போன்று பூரிப்படைந்திருக்கிறார்கள்.

திரௌபதி முர்மு இந்த உயரத்தைத் தொட்டிருப்பது, இந்தியா முழுக்க இருக்கும் பழங்குடிகளின் நிலைகுறித்த உரையாடலை மீண்டும் தொடக்கி வைத்திருக்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்காகவும், கனிம வளங்களை எடுக்க அமைக்கப்படும் சுரங்கங்களுக்காகவும் தங்கள் வாழ்விடங்களிலிருந்து அதிகம் வெளியேற்றப்படுவது பழங்குடிகள்தான். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் நாளுக்கு நாள் உயர்ந்துவருவதை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களும் உறுதிப்படுத்துகின்றன. `நாங்கள் உங்களோடு இருக்கிறோம். உங்களைக் கைவிட மாட்டோம்' என்று பழங்குடி இனத்தவருக்கு நம்பிக்கையை விதைக்க, முர்முவைக் குடியரசுத் தலைவர் ஆக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அரசின் இந்த முயற்சிக்கு நாடு முழுவதுமே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அதனால்தான் எதிர்க்கட்சி வரிசையிலிருந்தும் அவருக்கு ஏராளமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

``இயற்கை அன்னை பெரும் வேதனையில் இருக்கிறாள். காலநிலை மாற்றம் நம் எதிர்காலத்தையே அச்சுறுத்துகிறது. ஆகையால் நம் வேர்கள் கிராமங்களில்தான் இருக்கிறது என்பதை மறக்காமல் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும்'’ என்று, விடைபெற்றுச் செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறிய அறிவுரைக்கு நாடு செவிமடுக்க வேண்டும். இல்லையேல் திரௌபதி முர்முவிற்கு இந்தப் பதவியை அளித்ததே வெறும் அடையாள அரசியல் என்பதாக அர்த்தம் பெற்றுவிடும்.

குடியரசுத் தலைவர் பதவி என்பது ஓர் அலங்காரப் பதவியல்ல. குடியரசுத் தலைவரே நம் அரசியலமைப்புச் சட்டத்தின் காவலர். அமைச்சரவையின் ஆலோசனையின்படி நடக்க வேண்டியவர்தான் என்றாலும், மக்கள் நலனுக்கு எதிரான எந்த ஒரு முயற்சியையும் முறியடிக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திரௌபதி முர்மு கவர்னராக இருந்தபோது அங்கு அதிகாரத்தில் இருந்தது பா.ஜ.க அரசுதான். பழங்குடியினர் நில உரிமையைப் பறிக்கும்விதமாக அந்த அரசு சட்டத்திருத்தங்கள் கொண்டுவந்தது. பழங்குடியினர் நில உரிமைக்கு எதிரான இந்த இரண்டு சட்டங்களிலும் கையெழுத்திட மறுத்துத் திருப்பி அனுப்பினார் திரௌபதி முர்மு.

அந்த அனுபவமும் முதிர்ச்சியும் மக்கள் நலனும் குடியரசுத் தலைவராக நாட்டினை வழிநடத்த திரௌபதி முர்முவுக்குத் துணை நிற்கட்டும்.