Published:Updated:

`விபத்தில் காயமடைந்தவருக்குத் தையல் போடும் துப்புரவுப் பணியாளர்!’- அறந்தாங்கி அரசு மருத்துவமனை அவலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தையல் போடும் துப்புரவுப் பணியாளர்
தையல் போடும் துப்புரவுப் பணியாளர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில், விபத்தில் காயமடைந்த நோயாளி ஒருவருக்கு மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர் தையல் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையைச் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். அறந்தாங்கி அரசு மருத்துவமனை மாவட்டத்தில் உள்ள முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்று. தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 50க்கும் மேற்பட்டோர் விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த நிலையில்தான், சில தினங்களுக்கு முன்பு அறந்தாங்கி அருகே பெரியாளூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தீபன்(38) என்பவர் வாகன விபத்தில் சிக்கி காயங்களுடன் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்

தையல் போடும் துப்புரவுப் பணியாளர்
தையல் போடும் துப்புரவுப் பணியாளர்

தாடைப்பகுதியில் தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, அங்கு பணியில் மருத்துவர் இல்லை என்று கூறப்படுகிறது. வழக்கமாக, காயமடைபவர்களுக்குத் தையல் போடும், ஆண் செவிலியர் பணி முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், அங்கு பணியில் இருந்த துப்புரவுப் பணியாளர் கோவிந்தராஜ், காயமடைந்த கார்த்தீபனுக்குத் தாடைப்பகுதியில் தையல் போட்டார். இதை கார்த்தீபனின் உறவினர் வீடியோவாக எடுத்து, வெளியிட சமூக வலைதளங்களில் இந்தத் தகவல் வேகமாகப் பரவியது.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக, மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் கோவிந்தராஜ், ஆள் இல்லாத போது தையல் போடுவார் என்றும் கூறப்படுகிறது. அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து நிலவுகிறது. தற்போது, பணியாற்றும் ஆண் செவிலியர் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது. காலையில் பணிக்கு வந்துவிட்டு, மாலை வீட்டிற்குச் சென்றுவிடுகிறார். அதன்பின்பு தையல் போடுவதற்கு ஆள் இல்லை.

தையல் போடும் துப்புரவுப் பணியாளர்
தையல் போடும் துப்புரவுப் பணியாளர்

அதன்பிறகு யார் வந்தாலும், இதுபோன்ற துப்பரவு பணியாளர்கள்தான் தையல் போடுகின்றனர். இதனால், ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று நோயாளிகள் புலம்பித் தவித்து வருகின்றனர். இதுபற்றி மருத்துவமனை தலைமை மருத்துவர் ரவி கூறும்போது, ``ஆள் பற்றாக்குறை உள்ளது என்பது உண்மைதான். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. இதுபற்றி விசாரித்து, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் தகவலைக் கொண்டு சென்றிருக்கிறோம். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் துப்பரவு பணியாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு