Published:Updated:

கொரோனா தடுப்பூசி... கொள்ளை லாபம் பார்க்கிறாரா பில் கேட்ஸ்?

பில் கேட்ஸ் - மோடி
பிரீமியம் ஸ்டோரி
பில் கேட்ஸ் - மோடி

இந்த கொரோனா காலத்தில் பில் கேட்ஸ் பற்றிப் பல தகவல்கள் பரப்பப்பட்டன.

கொரோனா தடுப்பூசி... கொள்ளை லாபம் பார்க்கிறாரா பில் கேட்ஸ்?

இந்த கொரோனா காலத்தில் பில் கேட்ஸ் பற்றிப் பல தகவல்கள் பரப்பப்பட்டன.

Published:Updated:
பில் கேட்ஸ் - மோடி
பிரீமியம் ஸ்டோரி
பில் கேட்ஸ் - மோடி
உலகெங்கும் பயன்பாட்டிலிருக்கும் தடுப்பூசிகளில் ஐம்பது சதவிகிதம் இந்தியாவில்தான் தயாராகின்றன. விரைவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ள இரண்டு கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்கும் பணியையும் ஓர் இந்திய நிறுவனம்தான் செய்துவருகிறது. அது, புனே நகரிலுள்ள `சீரம் இன்ஸ்டிட்யூட்.’ உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் அது. அந்த நிறுவனத்துக்கு பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 1,125 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து, 10 கோடி கொரோனா தடுப்பூசிகளைப் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, ‘கொரோனா தடுப்பூசியை மொத்தமாக வாங்கி, அதில் கொள்ளை லாபம் அடிக்கப் பார்க்கிறார் பில் கேட்ஸ்’ என்று சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகிறார்கள். இது உண்மையா?
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேட்ஸ் சுமக்கும் அவதூறுகள்!

இந்த கொரோனா காலத்தில் பில் கேட்ஸ் பற்றிப் பல தகவல்கள் பரப்பப்பட்டன.

* ‘கொரோனா வைரஸை உருவாக்கிய சீனாவின் வூஹான் நகரிலுள்ள உயிரியல் ஆய்வுக்கூடத்துக்கு 2015-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், பில் கேட்ஸின் மனைவி மெலிண்டா கேட்ஸ் சென்றிருந்தார். அந்த ஆய்வுக்கூடத்தின் வௌவால் தொடர்பான ஆராய்ச்சிக்கு 28 கோடி ரூபாயை கேட்ஸ் அறக்கட்டளை அளித்தது. கொரோனா வைரஸ் உருவானதில் இவர்களுக்கு மறைமுகமாகப் பங்கு இருக்கிறது’ என்று ஒரு பொய்த் தகவலைப் பரப்பினார்கள். அதற்கு ஆதாரமாகக் காட்டப்பட்ட புகைப்படம், உண்மையில் அமெரிக்காவின் மேரிலாண்டில் இருக்கும் ஆய்வுக்கூடத்துக்கு ஒபாமா சென்றபோது எடுத்த படம். அதில், அவர் அருகிலிருந்தவர் மெலிண்டா இல்லை. அவர் சாயலிலிருக்கும் வேறொரு பெண் அதிகாரி.

கொரோனா தடுப்பூசி... கொள்ளை லாபம் பார்க்கிறாரா பில் கேட்ஸ்?

* ‘இந்தியாவில் பில் கேட்ஸ் அறக்கட்டளை வழங்கிய போலியோ தடுப்பு மருந்தைக் கொடுத்ததால், 47,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் அவர்மீது வழக்கு போட்டுள்ளனர். இதன் காரணமாக 2011-ம் ஆண்டு பில் கேட்ஸ் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்’ என்று ஒரு தகவலை ஃபேஸ்புக்கில் பலரும் ஷேர் செய்கிறார்கள். அது உண்மை இல்லை. அந்த ஆண்டு அவர் இரண்டு முறை இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு வந்து சென்றுள்ளார். பல்வேறு முக்கியப் பிரமுகர்களை சந்தித்திருக்கிறார். சொல்லப்போனால், கொரோனா காலகட்டத்தில் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாடிய சில உலகப் பிரபலங்களில் பில் கேட்ஸும் ஒருவர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மே 14-ம் தேதி அவருடன் உரையாடிய மோடி, உலக அளவில் கொரோனாவை ஒழிக்க கேட்ஸ் அறக்கட்டளை செய்யும் பணிகளைப் பாராட்டினார்.

* ‘கொரோனா தடுப்பூசியில் ஒருவித மைக்ரோ சிப் பொருத்தச் சொல்லி பில் கேட்ஸ் உத்தரவு போட்டிருக்கிறார். அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் ஒவ்வொருவர் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காகவும் கண்காணிக்கவும் இந்த ஏற்பாட்டை அவரது அறக்கட்டளை செய்துள்ளது’ என்று சில நாள்களுக்கு முன்னர் ஒரு வதந்தி பரவியது. பில் கேட்ஸ் இதற்கு நேரடியாகவே மறுப்பு தெரிவித்தார்.

இவற்றின் தொடர்ச்சியாக இப்போது, ‘தடுப்பூசியில் லாபம் அடிக்கப் பார்க்கிறார்’ என்ற குற்றச்சாட்டு.

பில் கேட்ஸ் என்ற பணக்காரர்மீதான வன்மம் காரணமாக இப்படியான கட்டுக்கதைகள் கிளம்புகின்றனவா அல்லது இந்தக் கதைகள் பரவுவதன் பின்னணியில் மருந்து நிறுவனங்கள் இருக்கின்றனவா? அவருக்கே தெரியவில்லை.

தொழில் வேறு; அறக்கட்டளை வேறு!

உலகின் இரண்டாவது பெரிய பணக்காரரான பில் கேட்ஸ், அவர் நிறுவிய ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் அடையாளம் மூலமே உலகெங்கும் அறியப்படுகிறார். அந்த அடையாளத்தின்படி, அவர் அசுரத்தனமாக முன்னேறிய பணக்காரர். போட்டி நிறுவனங்களை இரக்கமே இல்லாமல் நசுக்கியவர். போட்டியற்ற வர்த்தகம் செய்து, கொள்ளை லாபம் பார்க்க முயன்றவர். தினசரிப் பயன்பாட்டில் தவிர்க்கவே முடியாத கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களின் லைசென்ஸ் தொகையாகவே பல்லாயிரம் கோடி ரூபாய் சம்பாதிப்பவர்.

இந்த அடையாளத்தின் வழியாகவே அவரது அறக்கட்டளையைப் பலரும் பார்ப்பதுதான் பிரச்னை. ஆனால், அங்கு இதே பில் கேட்ஸ் வேறு மனிதராக இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் இவரது அறக்கட்டளை சுமார் 3,00,000 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளைச் செய்துள்ளது. இதில் முக்கியமானது மருத்துவச் சேவை. ‘பணம் இல்லை என்பதால் ஏழைகளுக்குத் தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவச் சேவைகள் மறுக்கப்படக் கூடாது. இவை கிடைக்கவில்லை என்பதால் யாரும் சாகும் அவலம் நேரக் கூடாது’ என்பது பில் கேட்ஸ் அடிக்கடி சொல்லும் மந்திரம்.

கொரோனா தடுப்பூசி... கொள்ளை லாபம் பார்க்கிறாரா பில் கேட்ஸ்?

ஏழை நாடுகளின் மக்களுக்கு முக்கியமான தடுப்பூசிகளை இலவசமாகத் தருவதற்காக ‘கவி’ (GAVI-Global Alliance for Vaccine and Immunization) என்ற அமைப்பு உருவாக அவர் முக்கியக் காரணமாக இருந்தார். பல நாடுகளும், கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளும் இதற்கு நிதியுதவி செய்கின்றன. மருந்து நிறுவனங்களிடம் குறைந்த விலையில் தடுப்பூசிகளை வாங்கி, ஏழை மக்களுக்கு இலவசமாக அளிக்கிறது ‘கவி’ அமைப்பு. பல நாடுகளில் மருந்து நிறுவனங்கள் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 44 கோடி பேருக்குத் தடுப்பூசி அளித்துள்ளது. 60,00,000 மரணங்களைத் தவிர்த்துள்ளது.

‘உலகத்துக்கே கொரோனா பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்’ என்று பிப்ரவரி மாதமே கணித்த பில் கேட்ஸ், கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்காக அப்போதே 750 கோடி ரூபாய் நிதியுதவியை அளித்தார். உலகெங்கும் நடைபெறும் ஆய்வுகளை உன்னிப்பாகக் கவனித்தும்வருகிறார். அமெரிக்காவின் மாடெர்னா மற்றும் ஃபைஸர் நிறுவனங்களின் தடுப்பூசிகள் இறுதிக்கட்ட ஆராய்ச்சியில் இருக்கின்றன. ஆனால், அவை வைரஸின் மரபணு மாதிரியை வைத்து புது தொழில்நுட்பத்தில் உருவாவதால், விலை அதிகமாக இருக்கும். ‘‘ஏழை நாடுகளுக்கு இவை உதவாது’’ என பில் கேட்ஸ் விமர்சனம் செய்கிறார்.

இந்தநிலையில்தான் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட், பில் கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் ‘கவி’ அமைப்பு ஆகியவை இணைந்து ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன. பிரிட்டனின் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கியுள்ள ‘Covishield’ தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரிக்க உள்ளது. அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ‘NVX-CoV2373’ தடுப்பூசியும் இங்குதான் தயாராக உள்ளது. இவை இரண்டுமே விலை குறைவாக இருக்கக்கூடும்.

கொரோனா தடுப்பூசி... கொள்ளை லாபம் பார்க்கிறாரா பில் கேட்ஸ்?

கேட்ஸ் அளிக்கும் ரூ.1,125 கோடி!

பரிசோதனையில் இவை வெற்றி அடையும் போதே, பல கோடி டோஸ் தடுப்பூசிகளைத் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் ஒரே நேரத்தில் உலகெங்கும் இவை கிடைக்கும். இப்படிப் பெருமளவில் தடுப்பூசி தயாரிப்பதற்கான வசதிகளை சீரம் இன்ஸ்டிட்யூட் உருவாக்குவதற்கு கேட்ஸ் அறக்கட்டளை 1,125 கோடி ரூபாய் தருகிறது. இதற்கு பிரதிபலனாக, ஒரு தடுப்பூசி 224 ரூபாய் என்ற விலையில் 10 கோடி டோஸ் தடுப்பூசிகளை சீரம் இன்ஸ்டிட்யூட் கொடுக்கும். இதை இந்தியா உள்ளிட்ட 92 ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளிலுள்ள மக்களுக்கு ‘கவி’ அமைப்பு மூலம் பில் கேட்ஸ் அறக்கட்டளை வழங்கும்.

‘‘உன்னதமான அறிவியலைவிட, உணர்வு பூர்வமான மனிதாபிமானமே கொரோனாவை ஒழிக்கும். எந்த நாட்டில் வாழ்கிறார்கள், எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்காமல் எல்லோருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்ய வேண்டும்’’ என்கிறார் பில் கேட்ஸ்.

விரைவில் நமக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கக்கூடும். அதன் பின்னணியில் பில் கேட்ஸின் அக்கறையும் நிச்சயம் இருக்கும்!