Published:Updated:

‘‘பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்களைக் கேட்பது ஏன்?’’

சிறப்பு வார்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
சிறப்பு வார்டுகள்

விளக்கம் தரும் சுகாதாரத்துறை

‘‘பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்களைக் கேட்பது ஏன்?’’

விளக்கம் தரும் சுகாதாரத்துறை

Published:Updated:
சிறப்பு வார்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
சிறப்பு வார்டுகள்
கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில் சென்னை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மீண்டும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ் காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி நோயாளிகளை ஆம்புலன்ஸிலேயே வைத்திருக்கும் அளவுக்கு நிலை மோசமானது.

இந்தச் சூழலில், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு சிலருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ‘‘மருத்துவ முகாம்கள் அமைக்கத்தான் அதிகாரிகள் கேட்கின்றனர். ஆகஸ்டிலோ செப்டம்பரிலோ நிலைமை சீராகி பள்ளிகள் தொடங்கப்படலாம் என்ற சூழலில் பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் அமைப்பது மாணவர்களை பாதிக்கும்’’ என்ற குரல், பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுதொடர்பாக தமிழ்நாடு தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகள் அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ஸ்ரீதர் நம்மிடம் பேசினார். ‘‘கொரோனா தொற்றுக்கு எதிராக தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்க வகையில் இருக்கின்றன. மக்களும் அரசின் நோக்கத்தை உணர்ந்து பொறுப்பாக நடந்துகொள்கின்றனர். சமீப நாள்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இது எதிர்பாராத நெருக்கடி என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரம், பள்ளிகளை கொரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றும் நடவடிக்கை விபரீதமானது. அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ, அரசு இந்த முயற்சியை முற்றிலுமாக கைவிடவேண்டும்.

‘‘பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்களைக் கேட்பது ஏன்?’’

பள்ளிகளில் 3 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவர்கள் படிக்கிறார்கள். நோய்த்தொற்று சூழ்ந்த ஓரிடத்தில் இவர்களை வைத்திருப்பது எவ்வளவு ஆபத்து? விரைவில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடக்கும் என அரசு அறிவித்திருக்கிறது. ப்ளஸ் டூ விடைத்தாள்களைத் திருத்தும் பணியும் அடுத்தடுத்து தொடங்கப்படும். கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டால், மீண்டும் தேர்வு அறையாக மாற்றுவதோ... அங்கு விடைத்தாள்களைத் திருத்தும் பணியைச் செய்வதோ எளிதல்ல. மாணவர்கள் அமரும் இருக்கைகள், அடுத்த வருடத்துக்கான பாடநூல்கள் இவற்றையெல்லாம் எந்த அறைகளில் பத்திரப்படுத்துவது? இதுபோன்ற பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

ஒருவேளை அரசு கொரோனா வார்டுகளாக எங்கள் பள்ளிகளை மாற்றினால், வரும் கல்வியாண்டில் பெற்றோர்கள் மாணவர்களை சேர்ப்பதற்கு அச்சப்படுவர். அரசுப் பள்ளிகளுக்கும் அதுதான் நிலை. பள்ளிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஊருக்கு வெளியில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் பூட்டிவைக்கப்பட்டிருக்கும் பொறியியல் கல்லூரி விடுதிகளை கொரோனா வார்டு களாக மாற்றலாம். கல்லூரி திறப்பதற்கான காலம் இன்னும் அதிகமுள்ளது. ஏராளமான அரசுக் கட்டடங்கள் பயன் படுத்தப்படாமல் கிடக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம். ஏராளமான வீட்டு வசதி வாரிய வீடுகள் விற்பனையாகாமல் இருக்கின்றன. அவற்றையும்கூட இந்த அவசரக்காலத்தில் உபயோகிக்கலாம்.

இவற்றையெல்லாம் பயன்படுத்திய பிறகும் தேவை இருக்கும்பட்சத்தில் பள்ளிகளை கொரோனா வார்டுகளாக மாற்றும் முயற்சியைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமே தவிர, ஆரம்பத்திலேயே பள்ளிகளைக் கேட்பது முறையானதல்ல. அது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தும். இத்தனை நாள்கள் வீட்டுக்குள் அடைந்து கிடந்து மனரீதியாக மாணவர்கள் தளர்வாக இருப்பார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் மாணவர்களையும் பெற்றோர்களையும் மேலும் துயரத்துக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளாக்கும். எனவே, அரசு இந்த முயற்சியை கைவிடவேண்டும்’’ என்றார்.

‘‘பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்களைக் கேட்பது ஏன்?’’

இதுதொடர்பாக, தமிழக பொது சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர் வடிவேலிடம் பேசினோம். ‘‘பள்ளிக் கட்டடங்களையோ அறைகளையோ கொரோனா வார்டுகளாக மாற்றப் போவதில்லை. அறிகுறிகளற்ற நிலையில் தனிமைப்படுத்தப்படும் நபர்களை தங்கவைப்பதற்காக மட்டுமே பயன் படுத்தப்போகிறோம். நோயாளிகளை விட, இப்படியான அறிகுறிகளற்ற நபர்கள்தான் தமிழகத்தில் அதிகம் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்தி வைக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லாவிட்டால், பின்னாளில் சமூகப் பரவலுக்குள் சென்றுவிடும் அபாயம் உள்ளது.

`அதான் அறிகுறிகள் இருக்காதே... பிறகு எப்படிக் கண்டறிவீர்கள்?’ என்ற சந்தேகம் வரலாம். அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் உள்ள இவர்களை, ‘கான்டாக்ட் டிரேஸிங்’ அடிப்படையில், கண்டறிந்துவருகிறோம். ஒரு நோயாளிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டால், சராசரியாக அவருடன் தொடர்பில் இருந்த 24 பேரைக் கண்டறிகிறோம். அப்படிக் கண்டறியப்படும் எல்லோரை யும் முறையாகத் தனிமைப் படுத்தி அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் செய்கிறோம். ஒருவருக்கே 24 பேர் கண்டறியப்படுகின்றனர் என்றால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்போது எத்தனை பேர் வருவார்கள் என யோசித்துப் பாருங்கள். அத்தனை பேரையும், அரசுக் கட்டடங்களில் மட்டுமே தங்கவைப்பது எப்படிச் சாத்தியமாகும்?

இவ்வளவு தீவிரமாக அரசு இயங்கிவரும்போது, தனியார் நிறுவனங்கள் கட்டடங்கள் தரத் தயங்குவதோ பயந்து ஒதுங்குவதோ சரியான செயலாக இருக்காது. சூழல் அறிந்து, இந்த மாதிரி நேரத்தில் அரசுக்கு அனைவரும் உதவ வேண்டும். இதை நாங்கள் கோரிக்கையாகவே வைக்க விரும்புகிறோம்.

இந்த வைரஸ், கூடியவிரைவில் நம்மைவிட்டு அகலும். சூழல் சரியாகும்போது, அந்தந்தக் கட்டடங்களை அரசே கிருமி நீக்கம் செய்து, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும். பள்ளி, கல்லூரிகள் எனும்போது, எங்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. எங்களின் பொறுப்பை, தயவுசெய்து குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம். அனைத்து பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதிசெய்வோம் என்பதால், மக்கள் எதற்கும் பயப்பட வேண்டாம்’’ என்றார்.

களத்தில் அசத்தும் அதிகாரிகள்!

சென்னையில் கொரோனா வெகுவேகமாகப் பரவிவரும் நிலையில், மாநகர மக்களைக் காப்பாற்ற களமிறங்கிவிட்டார் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ஏற்கெனவே சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்தவர். பொதுவாகவே தமிழகத்தில் ஏதாவது பெரிய அளவில் பிரச்னை நடந்தால், ராதாகிருஷ்ணனை அங்கே போஸ்டிங் போடுவார்கள். இவரின் நடவடிக்கை வித்தியாசமாக இருக்கும். 2004-ம் ஆண்டில் தஞ்சை, நாகை மாவட்டங்களில் சுனாமி மீட்பு நடவடிக்கையில் இவர் இறங்கி உதவியதை, அந்தப் பகுதி மக்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கின்றனர்.

‘‘பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்களைக் கேட்பது ஏன்?’’

சில நாள்களுக்கு முன்பு, சென்னை மாநகர மக்களை கொரோனாவிலிருந்து மீட்கும் ஸ்பெஷல் ஆபீஸர் பொறுப்பில் தமிழக அரசு ராதாகிருஷ்ணனை நியமித்திருக்கிறது. ஏற்கெனவே சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த கார்த்திகேயன் உள்ளிட்ட சீனியர் ஐ.ஏ.எஸ்-களையும் தமிழக அரசு கூடுதலாக மாநகராட்சிப் பணியில் இறக்கிவிட்டிருக்கிறது. சென்னையில் உள்ள 15 மாநகராட்சி மண்டலங்களில் 11 இளம் ஐ.ஏ.எஸ்-கள் மற்றும் பிற துறைகளின் அதிகாரிகள் கொண்ட டீமை களமிறக்கியுள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, 100 கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரங்களை கமிஷனர் பிரகாஷ் ஸ்பெஷலாக வழங்கியுள்ளார்.

சென்னை மாநகர போலீஸார் தரப்பிலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஊரடங்கை மீறுகிறவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். தனிமைப்படுத்தப் பட்டிருக்கும் ஏரியாவில் உள்ளவர்கள் மீதான கண்காணிப்பையும் அதிகப்படுத்தியிருக்கிறார்.

சென்னை மாநகர (தெற்கு) கூடுதல் கமிஷனராக இருப்பவர் பிரேம் ஆனந்த் சின்ஹா. இவரின் ஐடியாவில்தான் ட்ரோன்களில் மைக் கட்டி விழிப்புணர்வுப் பிரசாரம் செய்யப்படுகிறது. அதேபோல், குறுகலான ஏரியாக்களில் ‘ரோபோட் காப்’ என்ற பெயரில் ரோபோட்டை ரோந்துப்பணியில் பயன்படுத்திவருகிறார் பிரேம் ஆனந்த். சென்னையில் யாராவது ஊரடங்கு உத்தரவை மீறுகிறார்களா, வாகன ஓட்டிகள் அடிக்கடி வெளியில் சுற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க, அவர்களின் ஆதர் கார்டை ஸ்கேன் செய்து ட்ராக் செய்யும் நவீன டெக்னாலஜியையும் பிரேம் ஆனந்த் சின்ஹா அமல்படுத்திவருகிறார்.