Published:Updated:

பிரசவம் பார்த்த செவிலியர்; வயிற்றில் வைத்துத் தைக்கப்பட்ட ஊசி!-ராமநாதபுரம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

இரண்டு நாள்களுக்குப் பின், கடந்த 19 -ம் தேதி ரம்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அங்கு மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர்களான சக்திபாமா, அன்பு ஆகியோர் பிரசவம் பார்த்துள்ளனர்.

இளம்பெண்ணின் வயிற்றில் ஊசி
இளம்பெண்ணின் வயிற்றில் ஊசி

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மையத்தில், பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றினுள் கவனக்குறைவாக ஊசியை வைத்துத் தையல்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம் நடந்த ஆரம்ப சுகாதார நிலையம்
போராட்டம் நடந்த ஆரம்ப சுகாதார நிலையம்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது, மரவெட்டி வலசை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கார்த்தி. இவரின் மனைவி ரம்யா (21), பிரசவத்துக்காகக் கடந்த 17-ம் தேதி, உச்சிப்புளியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இரண்டு நாள்களுக்குப் பின், கடந்த 19 -ம் தேதி ரம்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அங்கு மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர்களான சக்திபாமா, அன்பக செல்வி ஆகியோர் பிரசவம் பார்த்துள்ளனர்.

ரம்யா
ரம்யா

இந்தப் பிரசவத்தில், அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரு தினங்களாக ரம்யாவுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டதுடன், ரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரம்யாவை உச்சிப்புளி ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, ரம்யாவின் வயிற்றினுள் மருந்து செலுத்தும் ஊசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ரம்யா வயிற்றினுள் ஊசி இருப்பதை காட்டும் படம்
ரம்யா வயிற்றினுள் ஊசி இருப்பதை காட்டும் படம்

இதையறிந்த ரம்யாவின் உறவினர்கள், வயிற்றினுள் ஊசியை வைத்து தைத்து, கவனக்குறைவாகச் செயல்பட்டவர்கள் மீதும், பிரசவ நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த உச்சிப்புளி காவல்நிலைய போலீஸார், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.

முற்றுகைப் போராட்டம் நடத்தும் உறவினர்கள்
முற்றுகைப் போராட்டம் நடத்தும் உறவினர்கள்

கவனக்குறைவாகச் செயல்பட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ரம்யாவின் உறவினர்கள் கூறிச் சென்றதால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பணியின்போது அலட்சியமாகச் செயல்பட்ட காரணத்துக்காக செவிலியர் அன்பக செல்வி மற்றும் மருத்துவர் முகமது ஜாகிர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.