ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து மருத்துவ மாணவர்கள் ஹிப்போகிரட்டீஸ் எழுதிய உறுதிமொழியை விடுத்து மகரிஷி சரக் எழுதியதை சத்திய பிரமாணமாக எடுக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
மருத்துவ மாணவர்கள் தங்கள் பட்டமளிப்பு விழாவின்போது வரலாற்றில் மிகப் பழைமையான ஆவணங்களில் ஒன்றான ஹிப்போகிரட்டீஸ் எனும் கிரேக்க தத்துவஞானி எழுதிய சத்தியத்தை உறுதிமொழியாகப் படிப்பர். இது மருத்துவர்களால் இன்றளவும் புனிதமாகக் கருதப்படுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், பழங்கால இந்திய மருத்துவத்தில் சிறந்த பங்காற்றிய ஆயுர்வேதத்தின் தந்தை மகரிஷி சரக் என்பவரின் சரக ஷபத் அல்லது சரக பிரமாணம் என்னும் ஆயுர்வேத சம்ஸ்கிருத நூலான சரக சம்ஹிதாவில் உள்ள குறிப்பிட்ட ஒரு பகுதியை இனிமேல் புதிய பிரமாணமாக மருத்துவ மாணவர்கள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது, தேசிய மருத்துவ ஆணையம்.
அதுமட்டுமல்லாமல், ஜூன் 12-ம் தேதி தொடங்கி சர்வதேச யோகா தினமான ஜூன் 21-ம் தேதி வரை 10 நாள்கள் யோகா படிப்பும் மருத்துவ மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மருத்துவ சத்தியப் பிரமாணத்தை மாற்றுவது குறித்து பிரச்னைகள் இருந்த நிலையில், ஹிப்போகிரட்டீஸ் சத்தியப்பிரமாணத்தை சரக் ஷபத் மூலம் மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பார்தி பிரவின் பவார் ராஜ்யசபாவில் கூறினார். அவர் இதைக் கூறிய சில நாள்களுக்குப் பிறகே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.