Published:Updated:

கொரோனா வைரஸ்... சீனாவில் மூடப்பட்ட தொழிற்சாலைகள்... இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு ஏற்படுமா?

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா எதிரொலி... இந்தியாவில் 12 மருந்துகளின் ஏற்றுமதிக்குத் தடை... உண்மை நிலவரம் என்ன?

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றின் விளைவு, நோய்வாய்ப்படுதலையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திவருகிறது. மற்றொரு பரிமாணத்தில் பார்த்தால் அந்நாட்டின் பொருளாதாரத்தையும் இது கடுமையாகப் பாதித்திருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கான போக்குவரத்து, சுற்றுலா அனைத்தும் தடைபட்டுள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் வேறு வகையான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உலக அளவில் மருந்து உற்பத்தியில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதாவது, உலக மக்கள் உட்கொள்ளும் மாத்திரைகளில் மூன்றில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. 220 உலக நாடுகளுக்கு மருந்துகளையும், 175 நாடுகளுக்கு தடுப்பூசிகளையும் தயாரித்து ஏற்றுமதி செய்துவருகிறது. ஹெச்.ஐ.வி, புற்றுநோய், ஹெபடைட்டிஸ் பி, சி, காசநோய், மலேரியா உள்ளிட்ட பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களுக்கான மருந்துகளையும் அதிக அளவில் உற்பத்தி செய்துவருகிறது. அடிப்படை மருந்துகளில் தொடங்கி, உயிர்காக்கும் மருந்துகள் வரை அனைத்தின் உற்பத்தியிலும் இந்தியா கோலோச்சி வருகிறது.

இரண்டு மாகாணங்களிலிருந்து வரும் மூலக்கூறுகளால் தயாரிக்கப்படும் 12 மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளோம்.
மருத்துவக் குழுவினர்

மருந்து உற்பத்தி, ஏற்றுமதியில் முன்னிலை பெற்றுவந்தாலும், உள்நாட்டின் பயன்பாட்டுக்கான மருந்துகள் தயாரிப்புக்கான மூலக்கூறுகளை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்து வருகிறோம். இந்திய நாட்டு மக்களின் தேவைக்காகத் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான 80 சதவிகித மூலக்கூறுகள், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. குறைவான உற்பத்திச் செலவு, தடையில்லா மின்சாரம், குறைவான வட்டி விகிதம் ஆகிய காரணங்களால் சீனாவில் குறைந்த விலையில் மூலக்கூறுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மருந்து
மருந்து
`கொரோனா வைரஸால் உலகப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்!'- எச்சரிக்கும் ஐ.எம்.எஃப்

தற்போது, சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவுக்கு வழக்கம்போல் மூலக்கூறுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் உள்நாட்டுத் தேவைக்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அத்தியாவசிய மருந்துகளான ஆன்டிபயாடிக், வைட்டமின் பி1, பி2, பி6, கர்ப்ப காலத்திலும் மாதவிடாய் பிரச்னைகளுக்காகவும் பரிந்துரைக்கப்படும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் மாத்திரைகள் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

எனவே, மருந்துகளின் இருப்பு குறித்த உண்மை நிலையை ஆராய மத்திய அரசின் சார்பில் 8 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 12 மாத்திரைகளின் ஏற்றுமதிக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

மருந்து
மருந்து

மேலும், அனைத்து மாநிலங்களில் இருக்கும் மருந்து மாத்திரைகளின் இருப்பு குறித்த உண்மை நிலையை மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சூழலைப் பயன்படுத்தி, மருந்து வர்த்தகர்கள் விலையை அதிகரிக்காமல் தடுக்க வேண்டும் எனவும் அந்தக் குழு மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது.

ஆர்டர் செய்த மருந்துகள் கிடைக்கும் பட்சத்தில், ஜூன் மாதத்துக்குப் பிறகு, மேலும் சில மாதங்களுக்குக்கூட தட்டுப்பாடு ஏற்படாது.
மருந்து உற்பத்தியாளர்கள்

"சீனாவின் ஹூபே மற்றும் ஷான்டாங் ஆகிய மாகாணங்களிலி ருந்து 25 சதவிகிதம் மூலப்பொருள்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. கொரோனா வைரஸ் மற்றும் சீனப் புத்தாண்டு காலம் என்பதால், இன்னும் 15 நாள்களுக்கு மூலக்கூறுகள் அங்கிருந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதன் காரணமாக, இந்த இரண்டு மாகாணங்களிலிருந்து வரும் மூலக்கூறுகளால் தயாரிக்கப்படும் 12 மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளோம்" என்று குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
`விரைவில் குணமடைவீர்கள், டேக் கேர்!' - கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்

மத்திய அரசின் நிபுணர் குழு கணித்துள்ளதுபோல் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் என்ன விளைவுகள் ஏற்படும், அதனை எவ்வாறு நிவர்த்திசெய்வது என்று மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் தலைவரும், குழந்தைகள் நல மருத்துவருமான ரெக்ஸ் சற்குணத்திடம் கேட்டோம்.

"முதலில் மருந்துகள் தயாரிப்பு என்பதே சுகாதாரத் துறையின் கீழ் இல்லை. ரசாயனம் மற்றும் உரத் துறையின் கீழ்தான் வருகிறது. சுகாதாரத் துறையின் கீழ் அதனைக் கொண்டு வரும்போதுதான், மருந்து உற்பத்தி தொடர்பான கூடுதல் தெளிவு கிடைக்கும். அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டால், பொதுமக்களுக்குத் தேவையான மருந்துகள் கிடைக்காது. தொற்றுநோய்கள் பரவும் காலத்தில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், அந்த நோய்களைக் குணப்படுத்துவது என்பது சவாலாகிவிடும்.

மருத்துவர் ரெக்ஸ் சற்குணம்
மருத்துவர் ரெக்ஸ் சற்குணம்
Shivani Sekar
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் தொற்றுநோய்களால் அவதிப்படும் நிலை ஏற்படும்.

தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், மருந்து உற்பத்தியாளர்கள் மருந்துகளின் விலையை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இடைத்தரர்கள், மருந்துகளைப் பதுக்கிவைத்து கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும்.

இதுபோன்று, அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில், தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கான வரிகளைக் குறைத்தல், மானியம் வழங்குதல் போன்ற சலுகைகளை வழங்கி, மருந்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மருந்து உற்பத்தியைக் கண்காணிக்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்" என்றார்.

கொரோனா
கொரோனா

தமிழகத்தின் நிலை என்ன?

தமிழகத்தைப் பொறுத்தவரை அத்தியாவசிய மருந்துகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் ஏற்படாது என்றும், போதிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, கடந்த ஆண்டும் இதே காலகட்டத்தில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்தே போதுமான மருந்துகள் இருப்பு வைப்பதை உறுதிசெய்தது தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம்.

"ஜூன் மாதம் வரை தமிழகத்துக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் மருந்துகளுக்கு ஆர்டர் செய்துள்ளோம். அவையும் சில நாள்களில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்டர் செய்த மருந்துகள் கிடைக்கும் பட்சத்தில், ஜூன் மாதத்துக்குப் பிறகு மேலும் சில மாதங்களுக்குக்கூட தட்டுப்பாடு ஏற்படாது" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்... சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் எடுக்கத் தவறிய நடவடிக்கைகள்! #CoronaVirus

மூலப்பொருள்களின் தட்டுப்பாடு காரணமாக சில மருந்துப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும், பாராசிட்டமால் மாத்திரைகளின் விலை 40 சதவிகிதமும், அஸித்ரோமைசின் (Azithromycin) என்ற ஆன்டிபயாட்டிக் மருந்தின் விலை 70 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. சீனாவிலுள்ள மூலப்பொருள்கள் உற்பத்தித் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கியதும் விலை குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் மாத்திரைகளின் விலை இயல்புக்கு வந்துவிடும் என்று மருந்து உற்பத்தியாளர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு