Published:Updated:

கல்லீரல் செயலிழந்த மகன்... கலங்கி நின்ற அப்பா... கைகொடுத்த அமைச்சர்!

முகேஷ்
News
முகேஷ்

`என் மகன், வீட்ல இப்படி படுக்குறதுக்கு, ஸ்கூல்ல போய் கடைசி பெஞ்சுலயாச்சும் படித்து படிக்கிறேன்ப்பா’னு சொல்லும்போது பெத்தவன் மனசு சுக்குநூறாகிப் போகுது. அஞ்சாவது படிக்கிற குழந்தைகிட்ட, அவனுக்கு என்ன பிரச்னைனு எப்படி சொல்றது? அவனுக்கு டாக்டர் கெடு கொடுத்திருக்கிறதை எப்படி சொல்றது?’

கல்லீரல் செயலிழந்த மகன்... கலங்கி நின்ற அப்பா... கைகொடுத்த அமைச்சர்!

`என் மகன், வீட்ல இப்படி படுக்குறதுக்கு, ஸ்கூல்ல போய் கடைசி பெஞ்சுலயாச்சும் படித்து படிக்கிறேன்ப்பா’னு சொல்லும்போது பெத்தவன் மனசு சுக்குநூறாகிப் போகுது. அஞ்சாவது படிக்கிற குழந்தைகிட்ட, அவனுக்கு என்ன பிரச்னைனு எப்படி சொல்றது? அவனுக்கு டாக்டர் கெடு கொடுத்திருக்கிறதை எப்படி சொல்றது?’

Published:Updated:
முகேஷ்
News
முகேஷ்

பிள்ளைகளின் ஆரோக்கியமும் ஆயுளும்தான் எல்லா பெற்றோரின் முதல் பிரார்த்தனையாக இருக்கும். ஆனால், `ஆபரேஷன் செஞ்சாதான் உங்க மகனை பிழைக்க வைக்க முடியும்’ என்று மருத்துவர்கள் கூறிய வார்த்தைகளால் தினம் தினம் உயிர் கரைந்து வருகிறார் மாரிமுத்து.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், முகேஷ், ஹரிஷ் என்ற மகன்களும் உள்ளனர். மாரிமுத்து, கஸ்தூரி இருவரும் தோட்டத்துக் கூலி வேலை செய்து வருகின்றனர். எஸ்.பாறைப்பட்டி அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் முகேஷ் 5-ம் வகுப்பும், ஹரிஷ் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 

வீட்டில் முகேஷ்
வீட்டில் முகேஷ்

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன் எஸ்.பாறைப்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில், உறவினர் வீட்டு காதுகுத்து நிகழ்ச்சிக்கு மாரிமுத்து குடும்பத்துடன் சென்றிருக்கிறார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த முகேஷ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற மாரிமுத்துவுக்கு, பல கட்ட மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகளுக்குப் பின்னர் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

`உங்க மகனுக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க வைக்க முடியும்’ என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆடு, மாடுகள், விவசாய நிலம் என அனைத்தையும் விற்று, தன் மகனுக்கு சிகிச்சை அளித்து, தன்னுடைய வரம்புக்கு மீறி ஏற்கெனவே 10 லட்ச ரூபாய் வரை செலவு செய்துவிட்ட மாரிமுத்து, இப்போது அறுவைசிகிச்சைக்கு வழியின்றி, `என் உயிரையாச்சும் எடுத்துக்கோங்க, என் பையனை காப்பாத்துங்க’ என்று கதறி வருகிறார்.

மாரிமுத்துவிடம் பேசினோம். ``உறவினர் வீட்டு விசேஷத்துல மயக்கமடைந்த மகனை, செம்பட்டியில உள்ள தனியார் கிளினிக்குக்கு கூட்டிட்டுப் போனோம். முதலுதவி கொடுத்ததும் முகேஷ் எழுந்துட்டான். ஆனாலும், ஏன் மயங்கி விழுந்தான்னு தெரியல. பழநி அரசு மருத்துவமனைக்குப் போனோம். அங்க என் மகனின் தலையில ஸ்கேன் செய்து பார்த்துட்டு, எந்தப் பிரச்னையும் இல்லைனு சொல்லிட்டாங்க. ஆனாலும், என் மகன் உடல்நிலை சுணங்கிக்கிட்டே வந்தது தெரிஞ்சது. சிறுநீர் கழிக்கும்போது சிரமப்பட்டான். ஆனா, அரசு மருத்துவமனையில, பிரச்னை எதுவும் இல்லைனே சொன்னாங்க’’ - மகனுக்கு என்னதான் பிரச்னை என்பதை அறியவே தான் தவித்துப்போனது பற்றி தொடர்ந்து பகிர்ந்தார் அந்தக் கிராமத்து தந்தை.  

பள்ளி மாணவர்கள் (மாதிரி படம்)
பள்ளி மாணவர்கள் (மாதிரி படம்)

``நான் பத்தாம் வகுப்பும், மனைவி எட்டாம் வகுப்பும்தான் படிச்சிருக்கோம். எங்களுக்கு மேற்கொண்டு என்ன செய்றதுனே தெரியல. `இனி அரசு மருத்துவமனை வேண்டாம், தனியாருக்குப் போங்க’னு சிலர் சொன்னாங்க. பழநியில இருக்குற ஒரு தனியார் மருத்துவனைக்குப் போனோம். அங்க எல்லா பரிசோதனையும் செஞ்சுட்டு, மஞ்சள் காமாலைனு சொன்னாங்க. அதுக்கான சிகிச்சை எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. 

அப்புறம், மதுரையில உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குப் போனோம். மொதல்ல இருந்து எல்லா பரிசோதனைகளையும் செய்யச் சொன்ன டாக்டர், நிறைய சிகிச்சையும் கொடுத்தாங்க. ஆனா, பையனுக்கு என்ன பிரச்னைனு மட்டும் சரியா கண்டுபிடிக்க முடியல. எட்டு லட்சம் ரூபாய் செலவு பண்ணினோம். கடைசியா, என் பையனின் கல்லீரல் செயல் இழந்துடுச்சுனு ஒருவழியா அவங்க கண்டுபிடிச்சு சொன்னப்போ, எங்க குடும்பமே உடைஞ்சு போனோம். கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை செஞ்சாதான் பிழைக்க வைக்க முடியும், அதுவும் சென்னையில உள்ள மருத்துவமனையிலதான் அந்த அறுவைச் சிகிச்சையை செய்ய முடியும், அதுக்கு 40 லட்சம் செலவாகும்னு சொன்னாங்க.

மருத்துவம்
மருத்துவம்

என்கிட்ட இருந்த எல்லா காசு, சொத்தையும் ஏற்கெனவே என் பையனுக்காக செலவு செஞ்சுட்டேன். எனக்கு யாரும் கடனும் கொடுக்கமாட்டேங்கிறாங்க. `என் கல்லீரலை வேணும்னாலும் எடுத்துக்கோங்க, என் மகனை எப்படியாவது காப்பாத்துங்க’னு கதறிப் பார்த்துட்டேன். இது பெரிய சிகிச்சை என்பதால, தனியார் மருத்துவமனையிலதான் பண்ண முடியும்னு சொல்றாங்க’’ என்றவர், தன் மகன் பற்றி பேசும்போது இன்னும் உடைகிறார்.

``என் மகன், `ஏன்ப்பா என்னை ஸ்கூலுக்கு அனுப்பமாட்ற? வீட்ல இப்படி படுக்குறதுக்கு, ஸ்கூல்ல போய் கடைசி பெஞ்சுலயாச்சும் படுத்து படிக்கிறேன்ப்பா’னு சொல்லும்போது, பெத்தவன் மனசு சுக்குநூறாகிப் போகுது. அஞ்சாவது படிக்கிற என் குழந்தைகிட்ட, அவனுக்கு என்ன பிரச்னைனு எப்படி சொல்றது? அவனுக்கு டாக்டர் கெடு கொடுத்திருக்கிறதை எப்படி சொல்றது? ஸ்கூல்ல எப்பவும் முதல் மார்க் வாங்குற பையன், டீச்சர்களுக்கு எல்லாம் பிடிச்ச மாணவன். அவங்க எல்லாம் வீட்டுக்கு வந்து இவனை பார்த்துட்டு போனாங்க’’ என்று கண்களை துடைத்துக் கொள்பவரது வீட்டில், இன்னும் சொல்ல இருக்கிறது துயரம்.

``எங்க அப்பா சின்னக்கருப்பையா, அம்மா தவமணி ரெண்டு பேரும் என்கூடதான் இருக்காங்க. அம்மாவுக்கு மார்பகப் புற்றுநோய். ஒரு பக்கம் மார்பை அறுவைசிகிச்சை மூலமா நீக்கிட்டு சிகிச்சை கொடுத்துட்டு இருக்கோம். பணக்கொடுமை, நோய்க்கொடுமைனு தாங்கிக்க முடியாம குடும்பத்தோட தற்கொலை செய்யக்கூட முடிவு எடுத்தோம். எங்க இளைய மகனை நினைச்சுதான் அந்த முடிவை விட்டோம்’’ என்றவரை அழுகை அதற்கு மேல் பேசவிடவில்லை.  

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை
மாதிரிப் புகைப்படம்

இந்நிலையில், ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியின் உதவியால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக முகேஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாரிமுத்து, ``ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்திச்சு என் மகனை பத்தி கூறினோம். அவர் சுகாதாரத்துறை அமைச்சர்கிட்ட பேசியதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்ரமணியன் என்கிட்ட போன்ல பேசினாரு. சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில உடனடியா மகனை சேர்க்கும்படியும், மருத்துவர் குழு அமைத்து சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்றதாவும் சொன்னார். இப்போ என் மகனுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில சிகிச்சை அளிக்கப்பட்டு வருது'' என்றார்.

மகனை நோயிடமிருந்து மீட்கப் போராடும் இக்குடும்பத்துக்கு தமிழக அரசு உதவ முன்வந்திருப்பது ஆறுதல் அளித்துள்ளது.