Published:Updated:

ரெம்டெசிவிர் தட்டுப்பாடு எப்போது தீரும்? அரசின் திட்டம் என்ன?

ஆக்சிஜன் தட்டுப்பாடு போலவே ரெம்டெசிவிர் தட்டுப்பாடும் பூதாகரமாக ஆனபிறகே மத்திய அரசு களத்தில் இறங்கியது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தும் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. நீதிமன்றங்களும் அரசைக் கண்டித்தன.

"எங்களுக்கு தினமும் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்து தேவை. ஆனால், மத்திய அரசு 7 ஆயிரம் மட்டுமே தருகிறது. மீதியை எப்போது தருவார்கள் என்பதையும் சொல்லமாட்டேன் என்கிறார்கள்" என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு புகார் செய்துள்ளது. கர்நாடக மாநிலத்துக்கு இரண்டு நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்து தரும் பொறுப்பை ஏற்றுள்ளன. மத்திய அரசு சொன்ன அளவில் அவை மருந்து சப்ளை செய்யவில்லை என்பதால், அந்த நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசுகள் நிலையே இதுதான் என்றால், தனிமனிதர்கள் அவதியைச் செல்ல வேண்டுமா? உயிர்ப் போராட்டத்தில் தவிக்கும் உறவுகளுக்காக இதை வாங்க, வரிசையில் பல மணி நேரம் நிற்கிறார்கள் மக்கள். அவர்களின் தேவை அதிகம், தமிழக அரசிடம் இருப்பதோ கொஞ்சம். பிளாக் மார்க்கெட்டில் பல மடங்கு விலைக்கு அவை விற்கப்படுகின்றன. ஆன்லைனில் போலி மாத்திரைகளை விற்று பணம் பறிக்கும் இரக்கமற்றவர்கள் பெருகிவிட்டார்கள்.

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர்
படம்: விகடன் / வி.ஸ்ரீனிவாசுலு

"இவ்வளவு பணமும் நேரமும் செலவழித்து இதை வாங்க வேண்டாம். இது அப்படி ஒன்றும் உயிர்காக்கும் மருந்து இல்லை" என அரசு மருத்துவ அமைப்புகள் சொல்கின்றன. சில நிபுணர்களும் சொல்கிறார்கள். ஆனால், தீவிர நோயாளிகள் உடலில் கொரோனா வைரஸ் பெருகுவதை அது கட்டுப்படுத்துகிறது என டாக்டர்கள் ரெம்டெசிவிரைப் பரிந்துரைக்கிறார்கள்.

ஏன் இந்த மருந்துக்குத் தட்டுப்பாடு? இந்தத் தட்டுப்பாடு எப்போது தீரும்?

அமெரிக்காவின் ஜிலீட் சயின்சஸ் என்ற நிறுவனத்தின் உருவாக்கமே இந்த மருந்து. அந்த நிறுவனத்திடம் லைசென்ஸ் பெற்று இந்தியாவில் மருந்து நிறுவனங்கள் இதைத் தயாரிக்கின்றன. கொரோனா முதல் அலையின்போது அவசரமாக அமெரிக்காவிலிருந்து வரவழைத்தும், உள்நாட்டில் தயாரித்தும் சமாளிக்க முடிந்தது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் குப்பிகள் தயாரிக்க முடிகிற அளவு வசதி அப்போது இருந்தது. அதுவே நமக்குப் போதுமானதாக இருந்தது.

ஒருகட்டத்தில் கொரோனா தொற்று குறைந்தபோது, இதை வாங்க ஆளில்லாமல் போனது. மத்திய அரசும் தயாரிப்பை நிறுத்தச் சொல்லிவிட்டது.

ஆனால், மார்ச் மாத இறுதியிலிருந்து கொரோனா இரண்டாவது அலையில் இந்தியா தடுமாறத் தொடங்கியது. எதையும் திட்டமிடாதது போலவே, இதையும் மத்திய அரசு திட்டமிடாமல் போனது. இடைப்பட்ட நேரத்தில் பலரும் இதைப் பதுக்கத் தொடங்கினார்கள். பல மடங்கு விலை வைத்து விற்றனர்.

ரெம்டெசிவிர் வாங்க காத்திருக்கும் மக்கள்
ரெம்டெசிவிர் வாங்க காத்திருக்கும் மக்கள்
படம்: விகடன் / வி.ஸ்ரீனிவாசுலு

ஆக்சிஜன் தட்டுப்பாடு போலவே ரெம்டெசிவிர் தட்டுப்பாடும் பூதாகரமாக ஆனபிறகே களத்தில் இறங்கியது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தும் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. நீதிமன்றங்களும் அரசைக் கண்டித்தன.

இப்போது மத்திய அரசு மருந்து நிறுவனங்களுடன் பேசியிருக்கிறது. 'எந்தெந்த மருந்து தொழிற்சாலைகளுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி இருக்கிறதோ, யாரிடமெல்லாம் மூலப்பொருள்கள் இருக்கிறதோ, அவர்களெல்லாம் ரெம்டெசிவிர் தயாரிக்கலாம்' என கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது. அமெரிக்காவின் ஜிலீட் சயின்சஸ் நிறுவனத்திடம் இதற்காக மத்திய அரசு அதிகாரிகள் பேசினர்.

ரெம்டெசிவிர் தயாரிப்புக்கான முக்கியமான மூலப்பொருளான பீட்டா சைக்ளோடெக்ஸ்ட்ரின் அமெரிக்காவிலிருந்து வர வேண்டும். அதற்கும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேசி ஏற்பாடு செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது ரெம்டெசிவிர் தயாரிப்பு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே இந்தியா முழுக்க 20 இடங்களில் மட்டுமே இதைத் தயாரித்தனர். இப்போது 58 இடங்களில் தயாரிக்கப்படுகிறது. முன்பு தினமும் வெறும் 10 ஆயிரம் குப்பிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இப்போது தினமும் இந்தியாவில் மூன்றே கால் லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் தயாரிக்கப்படுகின்றன.

"இவை விரைவில் எல்லா மாநிலங்களுக்கும் தேவைக்கு ஏற்றபடி பகிர்ந்து அளிக்கப்படும். அதன்பின் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு இருக்காது" என்கிறது மத்திய சுகாதார அமைச்சகம்.

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர்
படம்: விகடன் / வி.ஸ்ரீனிவாசுலு

தட்டுப்பாடு இருக்கும் இந்த நேரத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்கு விலைக் கட்டுப்பாடு விதிக்கவும் மத்திய அரசு யோசிக்கிறது. எனவே, விலையைக் குறைக்குமாறு மருந்து நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டது. ஏற்கெனவே 6,000 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை இதன் விலை இருந்தது. இப்போது மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அதிகபட்சமாக 3,500 ரூபாய் விலை உச்சவரம்பு வைப்பதாக மருந்து நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. எனவே, இனி தனியார் மருத்துவமனைகளுக்கும் குறைவான விலைக்கு ரெம்டெசிவிர் கிடைக்கும்.

மருந்து நிறுவனங்களுக்கு இப்போது ஒரு கவலை இருக்கிறது. இப்படி அதிகமாக ரெம்டெசிவிர் தயாரித்துக்கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் தேவை குறைந்து தங்களிடம் மருந்து தேங்கிவிடும் என்பதுதான் அந்தக் கவலை. இப்படி ஒருவேளை தேங்கினால், 50 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை வாங்கிக்கொள்வதாக மத்திய அரசு உறுதி கொடுத்துள்ளது. கொரோனா மூன்றாவது அலைக்காக அது பயன்படும் என மத்திய அரசு கருதுகிறது.

ரெம்டெசிவிர் அதிக அளவில் கிடைக்க ஆரம்பிக்கும்போது, அதை யாரும் பதுக்கிவிடாமலும், தேவையின்றிப் பயன்படுத்தாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசுகளின் பொறுப்பு.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு