Published:Updated:

தனியார் மருத்துவமனையில் அரசு மருத்துவக் கல்லூரி டீன் அனுமதி... காரணம் என்ன?

திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் சாரதா
திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் சாரதா

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட சம்பவம் வைரலாகி உள்ளது.

“ஹார்ட் அட்டாக், பக்கவாதம், பாம்பு கடித்தல் உள்ளிட்ட ஆறு முக்கிய நோய்களுக்குள்ளானவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களை முழுமையாகக் குணப்படுத்தலாம்!” - கடந்த சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாரதா கூறிய வார்த்தைகள்தான் இவை. ஆனால் அவரே, உடல்நலக்குறைவால் திருச்சி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துக்கொண்டது சர்ச்சையாகி உள்ளது.

திருச்சி மருத்துவமனை
திருச்சி மருத்துவமனை

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக இருப்பவர் சாரதா. இவர், கடந்த 29-ம் தேதி காலை மருத்துவமனையில் பணியில் இருந்தபோது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, உடனிருந்த மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தனர். அப்போது அவர், தன்னை உடனடியாக திருச்சி காவேரி மருத்துவமனையில் சேர்க்கும்படி அறிவுறுத்தவே, அங்கு அனுமதிக்கப்பட்டநிலையில், அவருக்குச் சிறுநீரகக் கல் பாதிப்பும், உடலில் சர்க்கரை அளவு அதிகமாகி இருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது. அதற்காக இரண்டு நாள்கள் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், அடுத்து பணிக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் இதயநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிய, அந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குள் வலம் வந்தோம்.

இதயநோய் சிகிச்சை பிரிவு முன்பு காத்துக்கிடக்கும் நோயாளிகள்
இதயநோய் சிகிச்சை பிரிவு முன்பு காத்துக்கிடக்கும் நோயாளிகள்

“ஐந்துமாடிக் கட்டடத்தில் நவீன மருத்துவ உபகரணங்கள், ஸ்கேன் செய்யும் கருவிகள் மற்றும் அறுவைச்சிகிச்சைக்கான அரங்குகள் எனப் பல வசதிகள் இருந்தும், பல அறைகள் பூட்டியே கிடந்தன. 5 மாடிக் கட்டட மருத்துவமனை நுழைவாயில் அருகே உள்ள லிப்ஃட் மட்டுமே பெரும்பாலும் இயங்கிவருகிறது. நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அதை அடிக்கடி பயன்படுத்துவதால், அங்கு கூட்டம் வரிசைகட்டி நிற்கிறது. மாடிப்படி வழியாக, இதயநோய் சிகிச்சை பிரிவு உள்ள முதல் மாடிக்குச் சென்றோம். அங்கேயும் பல அறைகள் பூட்டிக் கிடந்தன.

சிலவற்றில் வெள்ளிக்கிழமை மட்டும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் அதே தளத்தில் உள்ள எக்கோ அரங்கின் முன்பு, இதய நோயாளிகள் காத்துக்கிடந்தனர். அதில் இதய நோயாளிகள் பலர், கீழே அமர முடியாமல் நின்றபடியே இருந்தனர். உள்ளே, மூன்று நாற்காலிகள் மட்டுமே உள்ளதால் இவ்வளவு சிரமம் எனப் பணியாளர்கள் கூறினர். அவர்களிடம், மருத்துவரைச் சந்தித்து விவரம் கேட்க வேண்டும் என நாம் சொல்லவே, முதல்வர் அலுவலகத்தில் அனுமதிபெற்றால்தான், மருத்துவரைச் சந்திக்கவே முடியும் எனக் கறார் காட்டினார்கள்.

பூட்டிக் கிடக்கும் அறைகள்
பூட்டிக் கிடக்கும் அறைகள்

இதேபோல், ஸ்கேன் எடுக்கும் அறை, உள்நோயாளிகளுக்காக மருந்து மற்றும் உணவுச் சீட்டு வழங்கும் கவுன்டர்களில் கூட்டம் வரிசைகட்டி நின்றது. வலியில் துடித்த பூபதி என்பவருக்கு மருத்துவர் அல்ட்ரா ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் அங்குள்ள ஊழியர்கள், 'அடுத்த மாதம் வாங்க' என தேதி குறித்து கொடுக்கவே, வலியில் துடித்த பூபதி, தலையில் அடித்துக்கொண்டு நடையைக் கட்டினார்.

அதைவிட சி.டி. ஸ்கேன் எடுக்கும் அறையில் இருந்த பணியாளர் ஒருவர், நோயாளிகளை மிகமோசமாகச் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். அனைத்தையும் நாம் புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பியபோது... நம்மிடம் பேசிய பணியாளர் ஒருவர், "இங்கு ஆஞ்சியோ மற்றும் ஸ்டெந்த் வைக்கும் வசதிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஆஞ்சியோ மட்டும் பார்க்கிறார்கள். இதய நோய் என்றால் ஊசி மூலம் ரத்தத்தைக் கரைக்கிற பழைய முறையில்தான் சிகிச்சை வழங்குகிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஹார்ட் அட்டாக் வந்தால் முதல்கட்டமாக எடுக்கப்படும் ஆஞ்சியோகிராம் சோதனை தவிர மற்ற வசதிகள் இல்லாததால், ஆஞ்சியோ பிளாஸ்ட் உள்ளிட்ட அடுத்தகட்ட சிகிச்சைகள் இங்கில்லை.

திருச்சி அரசு
மருத்துவமனை
திருச்சி அரசு மருத்துவமனை

இதனால் வெளிமருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் இப்போதும் உள்ளது. கருவிகள் இருந்தாலும் அதைப் பயன்படுத்த போதுமான ஆள்கள் இல்லை. அதனால்தான் வழியில்லாமல் ஏழைகள் இங்கே சிகிச்சைக்குக் காத்துக்கிடக்கிறார்கள். மருத்துவமனை முதல்வர் அந்த நிலையில் இல்லை. அதனால் அவர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்போல. இதையெல்லாம் சரி செய்து, ஏழை எளிய மக்களுக்குரிய மருத்துவம் கிடைக்க வழி செய்ய வேண்டும்” என்றார்.

தொடர்ந்து நாம் புகைப்படங்கள் எடுப்பதைப் பார்த்த பணியாளர்கள், மருத்துவமனை இருக்கை மருத்துவ அதிகாரி வசந்தராமனிடம் தகவல் சொல்ல, நம்மைச் சந்தித்த அவர், "முறையான அனுமதியில்லாமல் மருத்துவமனையில் புகைப்படம் எடுப்பது சட்டப்படி குற்றம். உங்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம்!” என மிரட்டும் தொனியில் பேசினார்.

திருச்சி அரசு
மருத்துவமனை
திருச்சி அரசு மருத்துவமனை

பதிலுக்கு நாம், "மருத்துவமனை நிலவரத்தைப் பதிவுசெய்யவும், அதனை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவும் புகைப்படம் எடுத்தோம்" என்பதை விளக்கியதுடன், 'இதயநோய் சிகிச்சைப்பிரிவில் உள்ள வசதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், முதல்வர் சாரதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டது' குறித்தும் அவரிடம் கேட்டோம்.

அதற்கு அவர், “அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை மருத்துவர்களிடம்தான் கேட்கவேண்டும். இதயநோய்ச் சிகிச்சைப் பிரிவு மிகச்சிறப்பாக இயங்கிவருகிறது. டீன், சிகிச்சை எடுத்துக்கொண்டது குறித்து அமைச்சரே விளக்கிவிட்டார். பொதுவாக, அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு தனியார் மருத்துவமனைகளிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பளத்திலிருந்து பிரீமியம் கட்டும் நாங்கள், தனியார் மருத்துவமனையில் காட்டவேண்டிய நிலை. உடல்நிலை பாதிக்கப்பட்ட டீன், இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், ஏராளமான சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும். அவற்றைத் தவிர்ப்பதற்காகவே, வேறு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க டீன் முடிவு செய்திருக்கலாம். மற்றபடி திருச்சி அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை மிக உயர் தரமானது” என்றார்.

"ஒருவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது என்பது அவரவர் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. அப்படித்தான் மருத்துவமனை முதல்வர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதுகுறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே விளக்கம் அளித்துள்ளார்!"
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசுப் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்கவேண்டும் என்றும், அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுக்க வேண்டும் என்கிற முழக்கம் முன்வைக்கப்படுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு