Published:Updated:

`முதல்வர் நேரில்வந்து பார்க்கட்டும்.. பின்வாங்க போவதில்லை'- தொடரும் மருத்துவர்கள் போரட்டம்!

சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே நடைபெற்று வரும் மருத்துவர்களின் போராட்ட களத்திற்கு சில நோயாளிகளின் உறவினர்களை அழைத்து வந்து அவர்களுக்குக் கிடைக்கும் மருத்துவ சிகிச்சைகளை பற்றிப் பேச வைத்தார்கள்

போராட்டம்
போராட்டம் ( எம். விஜயகுமார் )

மருத்துவர்களின் காலவரையற்ற போராட்டம் ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் 'மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். உங்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்' என்று வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்தார்.

மருத்துவர் சம்பத்குமார்
மருத்துவர் சம்பத்குமார்
எம். விஜயகுமார்

ஆனால் மருத்துவர்கள் 'கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கை விட முடையாது. நோயாளிகள் பாதிக்காதவாறு தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் குழுக்கள் நியமிக்கப்பட்டுச் சிறந்த முறையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கி வருகிறோம். முதல்வர் உண்மையில் எங்களைக் கடவுளாக பார்த்தார் என்றால் எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என்கிறார்கள்.

இதற்கிடையே சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே நடைபெற்று வரும் மருத்துவர்களின் போராட்ட களத்திற்கு சில நோயாளிகளின் உறவினர்களை அழைத்து வந்து அவர்களுக்குக் கிடைக்கும் மருத்துவ சிகிச்சைகளை பற்றிப் பேச வைத்தார்கள்.

இதுபற்றி நோயாளியின் உறவினர் பாலமுரளி, '' என்னோட சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. என்னுடைய ஒரே மகன் கீர்த்திவாசன். அவனுக்குக் கடந்த 25ம் தேதி காய்ச்சல் வந்தது. உடனே திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரத்த பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. உடனே சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போகச் சொன்னார்கள்.

மருத்துவர்கள் ஸ்டிரைக் என்பதால் பல யோசனையில் இங்கு வந்து சேர்த்தேன். ஆனால் மருத்துவர்கள் இரவு பகலாக 24 மணி நேரமும் மருத்துவமனைக்கு வந்து என் குழந்தைக்கு சிகிச்சை கொடுத்து குணமாக்கினார்கள். இது என் வாழ்நாளில் மறக்க முடியாது. என் குழந்தை குணமாகி இன்று வீட்டுக்குச் செல்ல இருக்கிறோம். மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்'' என்றார்.

பாலமுரளி
பாலமுரளி
எம். விஜயகுமார்

இதுபற்றி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகியும் மருத்துவருமான சம்பத்குமார், ''தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 18,000 அரசு மருத்துவர்கள் இருக்கிறோம். இதில் 15,000 மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் வெறும் 5 % மருத்துவர்களே போராடுகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறி 15,000 மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் தமிழகத்தில் 90% மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

சேலத்தில் மொத்தம் 1,000ம் மருத்துவர்கள் இருக்கிறோம். இதில் 950 பேர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், செயலாளர் நேரில் வந்து பார்க்கட்டும். எங்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம். ஆனால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளைக் கவனித்து கொள்வதற்காகக் குழுக்கள் அமைத்து அவர்களுக்குக் சிறந்த மருத்துவ சேவை செய்துவருகிறோம்'' என்றார்.