Published:Updated:

ஆக்ஸிஜன்: `ஸ்டெர்லைட்டுக்கு தரும் ஒத்துழைப்பை ஏன்`பெல்' நிறுவனத்திற்கு தரவில்லை' - நீதிமன்றம் கேள்வி

உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை
உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை

பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி சம்பந்தமாக மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் சரமாரிக் கேள்வி.

ரித்து கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிவரும் சூழலில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்க்க ஏற்பட்டு வரும் நிலையில், பல்வேறு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

வெரோணிக்கா மேரி
வெரோணிக்கா மேரி

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த விரோனிகா மேரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் ``திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்கக் கூடிய 3 பிளான்ட்கள் செயல்பட்டு வந்தன. இவை ஒரு மணிநேரத்திற்கு 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாரிக்கக்கூடிய திறன் கொண்டவை. ஆனால் 2003-ம் ஆண்டு முதல் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டு செயல்பாடு இல்லாமல் உள்ளது.

`ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது ஏன்? பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்கலாமே?'-எழுப்பப்படும் சந்தேகம்!

இதேபோல் செங்கல்பட்டு பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான எச்.எல்.எல் பயோடெக் நிறுவனம் 2012-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, பல வகையான தடுப்பூசிகள் தயாரித்து வருகின்றது.

ஆக்ஸிஜன் சிலிண்டர்
ஆக்ஸிஜன் சிலிண்டர்
மாதிரிப் படம்

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த திருச்சி பெல் நிறுவனத்தில் செயல்படாமல் இருக்கும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செங்கல்பட்டில் இயங்கிவரும் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி எளிதாக சென்றடையும்" என மனுவில் கூறியிருந்தார். அவருக்காக மூத்த வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார்.

வழக்கறிஞர் அழகுமணி
வழக்கறிஞர் அழகுமணி

மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி அமர்வு, ``திருச்சி பெல் நிறுவனத்தில் உள்ள 3 கலன்களில் 140 மெட்ரிக் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியுமா..? பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்கக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவா எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது..?

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் சூழலில், திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்க முன் வராதது ஏன்..?

மத்திய அரசுக்கு சொந்தமாக எத்தனை தடுப்பு ஊசி தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன அதன் தற்போதைய நிலை என்ன..?

உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை
உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை

கோவாக்ஸின் மருந்தை ஐ.சி.எம்.ஆர் உதவியுடன் தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும்போது, மத்திய அரசு தடுப்பூசி தயாரிக்கும் பணி என்ன நிலையில் உள்ளது? தடுப்பூசி தயாரிக்கும் பணிக்கு கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தொகை எவ்வளவு..?

மத்திய அரசு தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு பெரும் தொகை ஒதுக்கீடு செய்யக் கூடிய சூழலில், அரசே தடுப்பூசிகள் தயாரிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?..." என கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து வருகின்ற 19-ம் தேதி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு