என் பெயர் செளந்தர்ராஜன். ஆனா மீசை செளந்தர்ராஜன்னு சொன்னாதான் ஏரியால எல்லாருக்கும் தெரியும். கட்சிக்காரங்களும் என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையானதாகச் செய்திகள் வெளியானபோது ஆனந்தப்பரசவத்துடன் லட்டுகள் பரிமாறி, பிறகு ‘ஜெயலலிதாவுக்குச் சிறை’ என்று உறுதியான செய்தி வந்தபோது அழுதுபுலம்பி நவரசங்கள் காட்டியதில் பிரபலமானவர் சௌந்தர்ராஜன். பெரிய மீசை, ஜெயலலிதா உருவம் பொறித்த பென்னம்பெரிய மோதிரங்கள் - இவைதான் அவரின் அடையாளம். ஆனால் ரத்தக்கண்ணீர் வடித்த ரத்தத்தின் ரத்தமான சௌந்தர்ராஜன் இப்போது தளபதி புகழ்பாடும் உடன்பிறப்பாக மாறிவிட்டார். தகவல் கேள்விப்பட்ட உடனே அவரைத் தேடி அவர் குடியிருக்கும் கீழ்ப்பாக்கம் அப்பார்ட்மென்ட்டுக்குப் போனேன்.

“என் பெயர் செளந்தர்ராஜன். ஆனா மீசை செளந்தர்ராஜன்னு சொன்னாதான் ஏரியால எல்லாருக்கும் தெரியும். கட்சிக்காரங்களும் என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க. இந்த முரட்டு மீசையும், வெயிட்டு பாடியும்தான் இவ்ளோ நாளா என் அடையாளமா இருந்துட்டு வருது. நிறைய பேர் என் தோரணைய பார்த்துட்டு நான் மதுரைக்காரன்னு நினைச்சிக்கிறாங்க. ஆனா நான் பக்கா சென்னைக்காரன். வெளியே பார்க்க பயங்கரமா தெரிஞ்சாலும் என் மனசு ஒரு பச்சக்குழந்தை மாதிரி” என்று அறிமுகம் ஒன்றரை கிலோமீட்டருக்கு ஓவராகப் போய்க்கொண்டிருக்க, “சரிங்க ராக்கி பாய், மெயின் மேட்டருக்கு வாங்க. ஏன் திடீர்னு தி.மு.க பக்கம் கரை ஒதுங்கிட்டீங்க?” என்றேன்.

“திடீர்னு எல்லாம் நான் கட்சி மாறல, ஏழு மாசத்துக்கு முன்னாலேயே மாறிட்டேன். ஆனா, அதை நான் வெளியில காமிச்சிக்கல. சமீபத்துல சென்னை அண்ணா சாலையில் கலைஞர் சிலை திறந்தாங்கில்ல, அப்போ நான் கார்ல போய்க்கிட்டு இருந்தேன். கலைஞர் சிலையைப் பார்த்ததும் உடனே வண்டியை நிறுத்திக் கீழே இறங்கி சிலை முன்னால ஒரு செல்பி எடுத்தேன். நான் செல்பி எடுத்ததைப் பார்த்த ஒரு பத்திரிகை போட்டோக்காரத் தம்பி என்னைப் பார்த்து அப்டியே ஷாக்காகிட்டார். ‘என்ன அண்ணே, இந்தப்பக்கம். நீங்க அம்மாவுக்காக அப்படி அழுதவராச்சே’ன்னு ஆச்சரியமாகி விசாரிச்சார். ‘இப்போ இருக்குற ரெட்டைத் தலைமை எனக்குப் பிடிக்கல தம்பி, அதான் தி.மு.க-ல இணைஞ்சிட்டேன்’னு சொன்னேன். உடனே அவர் என்னை அஞ்சு விரலைக் காட்டச் சொல்லி போட்டோ எடுத்தார்.

நான் 18 வருசமா அ.தி.மு.க-ல இருந்தேன். ராத்திரி பகல்னு பாக்காம கட்சிக்கு உழைச்சிருக்கேன். கட்சி மீட்டிங்னா முதல் ஆளா அங்கே இருப்பேன். ஸ்வீட் கொடுக்கிறது, பட்டாசு வெடிக்கிறதுன்னு எல்லாச் செலவும் என்னோடதுதான். என்னை அம்மாவுக்கு நல்லாத் தெரியும். அம்மா கார்ல போகும்போது எனக்கு டாட்டா காட்டுவாங்க, அன்பா சிரிப்பாங்க. அப்படிப்பட்ட அம்மா திடீர்னு இறந்த உடனே என்னால தாங்கிக்க முடியல, கண்ணீர் விட்டுக் கதறிட்டேன். அநாதையாகிட்ட மாதிரி தோணுச்சு. அப்போதான் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் வந்தாங்க. இவங்க என்னதான் பண்றாங்கன்னு கொஞ்சநாள் வேடிக்கை பார்த்தேன். இ.பி.எஸ் ஒரு முடிவெடுத்தா ஓ.பி.எஸ் ஒரு முடிவெடுப்பாரு. சசிகலா, தினகரன் ஒரு பக்கம் தனியா நிப்பாங்க. இப்படி கட்சில ஒற்றுமையே இல்லாமப் போச்சு. அந்த நேரத்துலதான் ஸ்டாலின் முதல்வராகி சிறப்பா ஆட்சியைக் கொடுத்திட்டிருந்தாரு. அது எனக்குப் பிடிச்சிப் போக, அம்மாவே இல்லாத அ.தி.மு.க-ல இனி எதுக்கு இருக்கணும்னு முடிவெடுத்து தி.மு.க-ல வந்து சேர்ந்துட்டேன். என்னை மாதிரி நிறைய பேர் அ.தி.மு.க-ல இருந்து விலகி தி.மு.க பக்கம் வர ரெடியா இருக்காங்க” என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன். மீசையை வருடியபடியே பதிலளித்தார்.

``நீங்க கட்சி தாவினதுக்கு அ.தி.மு.க-வில் என்ன மாதிரியான ரியாக்ஷன்ஸ் வந்துச்சு?’’
‘‘சில முன்னாள் மந்திரிகள் போன் போட்டு ‘நீ ஏன்யா அங்க போன’ன்னு அதிகாரமா கேட்டாங்க. ‘இவ்ளோ நாளா அங்கதானே இருந்தேன், இதுவரைக்கும் நீங்க எனக்கு என்ன செஞ்சீங்க’ன்னு திருப்பிக் கேட்டேன். அவங்ககிட்ட பதில் எதுவும் இல்ல. அதே மாதிரி நெருங்கிய அ.தி.மு.க நண்பர்கள் சிலர் போன் பண்ணி ‘நல்ல முடிவு எடுத்திருக்க, நல்லா இரு மாமா’ன்னு வாழ்த்தினாங்க.”
``ரத்தத்தின் ரத்தமா இருந்துட்டு உடன்பிறப்பா மாற என்னென்ன பண்ணுனீங்க?’’
“நிறைய மாத்தியிருக்கேன். நான் வெச்சிருக்குற கார், வீடு, மோதிரம், செயின்னு எங்கெல்லாம் அம்மா போட்டோ இருந்துச்சோ அங்கெல்லாம் இப்போ ஸ்டாலின் ஐயா போட்டோ ஒட்டியிருக்கேன். அதே மாதிரி கையில குத்தியிருந்த அம்மா படம் போட்ட பச்சையை அழிச்சிட்டு அதே இடத்துல உதயசூரியன் சின்னத்தைப் பச்சை குத்தப்போறேன். இனி சாகுற வரைக்கும் தி.மு.க-தான்னு முடிவு பண்ணி வந்துட்டேன்” என்று உறுதியாகச் சொல்கிறார்.
பார்ப்போம்... பார்ப்போம்!