
‘தீரன்’ படத்தில் வரும் பவாரியாக்களின் அனிமேஷன் காட்சியிலும், ‘சதுரங்கவேட்டை’யில் வரும் ஃபிளாஷ்பேக் சிறுவனின் காட்சியிலும் அனிமேஷன் என்னும் கலையைத் தாண்டி அதிலிருக்கும் ஓவியங்கள் நம்மை வியப்பூட்டும்.
தற்போது அப்படி ஆச்சர்யப்படுத்திய ஒன்று சிரஞ்சீவி நடித்த ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் ஆரம்பக் காட்சிகள். இந்திய சுதந்திரப் போராட்டம் ஓவியங்களாகத் திரையில் விரியும். இந்தக் கைவண்ணம், கலைவண்ணம் ஓவியர் செந்திலுடையது.
வடபழனியில் இருக்கும் ஓராயிரம் புறாக்கூடுகளில் ஒன்றுதான் இவர் அலுவலகமும். அதற்குள் இருந்துதான் இத்தகைய பிரமாண்டங்கள் வருகின்றன என்பதே ஆச்சர்யமாய் இருக்கிறது. அதே ஆச்சர்யத்துடன் செந்திலிடம் பேசத்தொடங்கினேன்.

“எல்லா ஸ்டார்ட் அப்களைப் போலவும்தான் எங்கள் கதையும். 2001-ம் ஆண்டு கல்லூரி முடித்து, சில ஆண்டுக்காலம் IT துறையில் வேலை. பின்னர் கல்லூரி நண்பர்கள் பாலா, ஜெய் போன்றோருடன் இணைந்து அனிமேஷனுக்காக சில நிறுவனங்களுக்கு வேலை பார்த்தோம். அதன்பின்னர் நாங்களே நிறுவனம் ஆரம்பித்து ‘மூடர்கூடம்’, ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன்’ எனப் படங்களுக்கு வேலை பார்த்துவருகிறோம்.”
ஓவியங்கள் டு அனிமேஷன், கோலிவுட் இயக்குநர்கள் தரும் நேரம் இதற்குப் போதுமானதா?
“ ‘தீரன்’ படத்தில் வரும் பவாரியாக்களுக்கு மட்டும் 4,000 ஓவியங்கள் வரைந்தோம். அதற்கென எட்டு மாத உழைப்பு தேவைப்பட்டது. இயக்குநர் ஹெச்.வினோத்துக்கு இதற்குரிய புரிந்துணர்வு இருந்ததால்தான் இது சாத்தியப்பட்டது. ஒரு படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் சமயங்களிலேயே இதற்கான வேலைகளைத் தொடங்க வேண்டும். படம் முடித்தபின்னர் சில காட்சிகளை அனிமேஷனாக மாற்றலாம் எனத் தீர்மானித்தால் அது பண விரயத்தில்தான் முடியும். தீரனில் ஓவியங்களாக வரைந்ததை, சிரஞ்சீவியின் சைராவில் 3டி பெயின்ட்டாக முயற்சி செய்துபார்த்தோம். கொல்கத்தாவில் இருந்த உண்மையான புகைப்படங்களைக்கொண்டு இதில் 3டி செய்திருந்தோம். அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.”

ஃபிளாஷ்பேக் தவிர்த்து எங்கெல்லாம் அனிமேஷன் இன்னும் இங்கு கால் பதிக்க வேண்டியிருக்கிறது?
“ஸ்டோரிபோர்டு முதல் எல்லாவற்றையும் அனிமேஷனில் செய்ய முடியும். ஒரு படத்துக்கு ஆகும் செலவு, ஒரு பாடலின் கான்செப்ட் வீடியோ போன்றவற்றையும் அனிமேஷனில் செய்துபார்க்க முடியும். சமீபத்தில் வெளியான ‘சாஹோ’ படத்துக்கு ஒரு பாடலுக்கான கான்செப்ட்டை அனிமேஷனில் செய்துகொடுத்தோம். சில படங்களுக்கான சண்டைக்காட்சிகளைக்கூட முன்னரே திட்டமிட்டு அனிமேஷனில் எடுத்துப் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். ‘பாகுபலி’ படத்தைப் பார்த்திருப்போம். பிரபாஸும் ராணாவும் சிறுவயதில் எப்படி இருப்பார்கள் என்பதை, அதே பிரமாண்டத்துடன் படமாக்க முடியுமா? ஆனால் அதையே அனிமேஷனில் ‘பாகுபலி - தி லாஸ்ட் லெஜென்ட்ஸ்’ என்ற பெயரில் உருவாக்கினார்கள். அதை அனிமேஷன் சாத்தியப்படுத்தியிருக்கிறது. இது அமேசான் தளத்தில் மூன்று சீசனாக வெளியாகியிருக்கிறது. தற்போதைய இளம் இயக்குநர்களுக்கு அனிமேஷன் பற்றிய புரிந்துணர்வு சிறப்பாகவே இருக்கிறது.”

அனிமேஷன், லைவ் ஆக் ஷன் எப்படியெல்லாம் சினிமாவில் மாறுபடுகின்றன?
“லைவ் ஆக் ஷனுக்கு இன்னும் நாம் அவ்வளவு பழகவில்லை. கோச்சடையானிலிருந்தே இங்கு முழு அனிமேஷனுக்கான சூழல் இருந்துவருகிறது. ஆனால், அந்தக் காலகட்டத்தைவிடவும் தற்போது அனிமேஷன் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. அனிமேஷன் என்பது பொம்மைப்படம் என்னும் புரிந்துணர்விலிருந்து முதலில் வெளியே வர வேண்டும். முதல் முதலாக 3டி அனிமேஷன் செய்ய வேண்டும் என ஹாலிவுட்டில் முடிவு செய்தபோது, அவர்கள் ‘டாய் ஸ்டோரி’தான் தேர்வு செய்தார்கள். அது முழுக்க முழுக்க பொம்மைகளுக்கான கதை. ஆனால், இங்கு மனிதர்களை வைத்து கோச்சடையான் என சோதனை முயற்சி செய்திருக்கிறோம். நமது பௌண்டரியைத் தேர்வு செய்துவிட்டு அதில் விளையாட வேண்டும். பட்ஜெட்டைப் பற்றிய தெளிவில்லாமல், நாம் செய்யும் சில பரிசோதனை முயற்சிகள் நம்மைப் பின்னோக்கி அழைத்துச் சென்றுவிடும்.”

அனிமேஷனில் நாம் செல்ல வேண்டிய தூரம்..?
“அனிமேஷன் குறும்படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். திரைப்பட விழாக்களுக்கு அனிமேஷன் படங்களை அனுப்ப வேண்டும். ஆஸ்கரிலேயே அனிமேஷனுக்கெனத் தனி விருது ஒதுக்குகிறார்கள். ஒரு படத்தில் வரும் அனிமேஷன் அச்சூழலுக்கான வீரியத்தை அதிகப்படுத்துமே தவிர குறைக்காது என்பதில் இயக்குநர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். சென்னையில் அனிமேஷனில் கைதேர்ந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். தற்போது நாங்கள் செய்த அனிமேஷன் புகைப்படங்களை வைத்து ஒரு ஓவியக் கண்காட்சி நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அடுத்ததாக அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகளில் வேலைசெய்துவருகிறோம்.”