
வனத்தைப் பாழாக்கும் தங்கும் விடுதிகள்... அடம்பிடிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள்...
வைகை ஆற்றின் பிறப்பிடம் தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை. தற்போது அங்கு தங்கும் விடுதிகள் கட்டி, வனத்தை அழிக்கும் வேலைகளில் பண முதலைகள் ஈடுபடுகிறார்கள் என்று சூழலியியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்த நிலையில், மேகமலையில் புதிதாகத் தங்கும் விடுதி கட்ட அனுமதி கோரி, உமாராணி என்பவர் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மேகமலையில் சட்டவிரோதமாகச் செயல்படும் விடுதிகளை அகற்ற உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இது குறித்து உமாராணியிடம் பேசினோம். “என் கணவர் ராணுவத்தில் சம்பாதித்த பணத்தை வைத்து மேகமலையில் இடம் வாங்கினோம். அப்போது, `வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனுமதி பெற்றால், விடுதி கட்டிக்கொள்ளலாம்’ என மேகமலை வனச்சரகர் முருகன் தெரிவித்தார். மேலும், அதற்கு 10 லட்ச ரூபாய் கமிஷன் கேட்டார். 2 லட்சம் ரூபாய் எங்களிடமிருந்து பெற்றார். மேற்கொண்டு அவர் பணம் கேட்டு நாங்கள் கொடுக்காததால், கட்டுமான அடித்தளப் பணி நடந்துகொண்டிருந்தபோது நாங்கள் 13 மரங்களை வெட்டியதாகக் கூறி பணிகளைத் தடுத்துவிட்டார். இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நான் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கினால் மேகமலையில் சட்டவிரோதமாக நடத்தப்படும் அனைத்து விடுதிகளையும் அகற்ற வனத்துறைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, எங்கள் மனுவைத் தள்ளுபடி செய்தது’’ என்றார்.
சூழலியல் ஆர்வலர் அன்வர் பாலசிங்கத்திடம் இது குறித்துப் பேசினோம். “தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட பதில்களில் தேனியைச் சேர்ந்த அய்யப்பன், மண்ணூத்தைச் சேர்ந்த தமிழன், குபேந்திரன், கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன், சின்னமனூரைச் சேர்ந்த ஆனந்தன் ஆகியோர் மேகமலையில் தங்கும் விடுதிகள் நடத்துவதாகத் தெரியவந்திருக்கிறது. இந்த விடுதிகள் ஏ.சி அறைகளுடன், ஆன்லைன் புக்கிங் மூலம் முன்பதிவு செய்யும் அளவுக்கு வணிக நோக்குடனேயே செயல்படுகின்றன. புலிகள் காப்பக எல்லைக்குள் இருக்கும் தனியார் தேயிலை எஸ்டேட்டுகள் மற்றும் தங்கும் விடுதி நடத்தும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றாவிட்டால் வைகை நதியைக் காப்பாற்ற முடியாது” என்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் ஆனந்தி, “மேகமலையில் விடுதி நடத்துவோர் யாரும் முறையாக அனுமதி பெறவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டோம். நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மாவட்ட கலெக்டரும் விடுதிகளை அகற்ற உத்தரவிட்டிருக்கிறார். இதை ஊராட்சி நிர்வாகம்தான் நிறைவேற்ற வேண்டும். இதில் வனத்துறை தலையிட முடியாது’’ என்றார்.
இதற்கிடையே மேகமலையில் தங்கும் விடுதிகளை அகற்றக் கோரிய உத்தரவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், வழக்கறிஞர் ஜானகி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் மேகமலையிலுள்ள விடுதிக் கட்டடங்களை ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. விரைவில் அறிக்கையை முன்வைத்து நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேகமலையாவது காப்பாற்றப்படுமா?!