கட்டுரைகள்
Published:Updated:

“எங்கள் குரல்வளையிலிருந்து உங்களின் கால்களை எடுத்துவிடுங்கள்!”

கின்ஸ்பெர்க்
பிரீமியம் ஸ்டோரி
News
கின்ஸ்பெர்க்

அவர் சட்டம் படிக்க வந்தபோது அமெரிக்காவின் நீதித்துறையில் 3% தான் பெண்கள். தற்போது அது 50% ஆக உயர்ந்திருக்கிறது.

மெரிக்க நீதித்துறையில் பல புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்தவர் கின்ஸ்பெர்க். ஐந்தாம் முறையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கின்ஸ்பெர்க்கைக் காலம் 87 வயதில் வீழ்த்திவிட்டது. கடந்த வாரம் அமெரிக்காவே சோகத்தில் மூழ்கியது. வழக்கமாக நடிகர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்களின் முகங்கள் மட்டுமே அலங்கரிக்கும் காபி மக், குழந்தை புத்தகங்கள், டிஷர்ட் என எல்லாவற்றிலும் நீக்கமறக் கலந்திருக்கிறார் கின்ஸ்பெர்க்.

அவர் சட்டம் படிக்க வந்தபோது அமெரிக்காவின் நீதித்துறையில் 3% தான் பெண்கள். தற்போது அது 50% ஆக உயர்ந்திருக்கிறது. பெண்கள் அதிகாரத்துக்கு வரும்போதுதான் தடைகள் உடையுமென உறுதியாய் நம்பியவர் கின்ஸ்பெர்க். “பெண்களுக்காக நான் எந்தச் சலுகையும் கேட்கவில்லை. எங்கள் குரல்வளையிலிருந்து உங்களின் கால்களை எடுத்துவிடுங்கள் என்று மட்டும்தான் கேட்கிறேன்” என்றவர் கின்ஸ்பெர்க். பெண்களை அனுமதிக்காத விர்ஜினியா மிலிட்டரி வளாகத்தில் பெண்களுக்கான சம உரிமையைத் பெற்றுத் தந்தது; தன்பால் ஈர்ப்பாளர்களின் திருமணத்தைப் பல மாகாணங்கள் செல்லாது என அறிவிக்க, அவர்களுக்கு ஆதரவாக நின்று, அவற்றைச் சட்டமாக்கியது; என ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் தொடர்ச்சியாக நின்றவர் கின்ஸ்பெர்க். ‘கருத்தடை என்பது ஒரு பெண்ணின் உடல்நலன் சார்ந்த பிரச்னை. அதுகுறித்து கருத்து கூற அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என பகிரங்கமாக அறிவித்தவர்.

 “எங்கள் குரல்வளையிலிருந்து உங்களின் கால்களை எடுத்துவிடுங்கள்!”

நன்றாகப் படிப்பவர் என்றாலும் சகோதரனின் கல்லூரிப் படிப்புக்காக, பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தியவர் கின்ஸ்பெர்கின் தாய். “ஆண் குழந்தைகளுக்கு நிகராகப் பெண்குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட காலத்தில், என் தாய் வாழ்ந்திருந்தால், என்னைப்போலவே அவரும் சாதித்திருப்பார்” என்றார் கின்ஸ்பெர்க்.

பதவியில் இருக்கும்வரை பல முற்போக்கு நிலைப்பாடுகளை எடுத்தார் கின்ஸ்பெர்க். அமெரிக்காவைப் பொறுத்தவரை நீதிபதிகள் அரசால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் விரும்பும்வரை பதவியில் நீடிக்கலாம். வயதையும், உடல்நலனையும் காட்டி பலமுறை கின்ஸ்பெர்க்கை ஓய்வுபெறச் சொல்லியும் அவர் மறுத்திருக்கிறார். ஒருவேளை ஹிலாரி கிளிண்டன் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால், கின்ஸ்பெர்க் ஓய்வுபெற்றிருப்பார். ஏனெனில் தன்னுடைய இடத்துக்கு தன்னைப்போலவே முற்போக்கான ஒருவரை ஹிலாரி நீதிபதியாக நியமிப்பார் என நம்பினார் கின்ஸ்பெர்க். ஆனால் ட்ரம்ப் வென்றதால் ஓய்வுபெற மறுத்தார்.

“ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வில் எத்தனை பெண்கள் இருந்தால், நீங்கள் நிம்மதியடைவீர்கள் என என்னிடம் கேட்கிறார்கள். ஒன்பது பெண்கள் என்று நான் சொன்னால் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். ஆனால், பன்னெடுங்காலமாய் ஒன்பது ஆண்கள் அதை அலங்கரித்தபோது, யாருக்கும் எந்தச் சலனமும் ஏற்படவில்லை” என்று ஆணாதிக்க மனநிலையைக் கடுமையாக விமர்சித்தார்.

நீதி என்னும் சிறிய சொல் சில மகத்தான மனிதர்களால்தான் முழுமையான அர்த்தத்தைப் பெறுகிறது. அப்படியொரு மகத்தான மனிதி கின்ஸ்பெர்க்.

நீதித்துறையில் ஜனநாயகம் நீடிக்குமா?

மெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் என்பது அவர்களின் வாழ்நாள் முழுமைக்குமானது. தாமாக ஓய்வை அறிவிக்கும்போதோ, மரணத்தின்போதோ அல்லது அவர்கள் ஏதேனும் குற்றச்சாட்டில் சிக்கினாலோ மட்டும்தான் மாற்று நீதிபதியை அதிபர் பரிந்துரை செய்ய முடியும். அந்த நபர் வழக்கறிஞராக இருந்திருக்கவேண்டிய அவசியமுமில்லை. ஆனால், இந்தப் பரிந்துரை அரசியல் சாணக்கியத்தனம் சார்ந்தது.

பில் கிளிண்டன் 1993-ம் ஆண்டு, கின்ஸ்பெர்கிற்கு நீதிபதியாகும் வாய்ப்பை வழங்கினார். ஆகவேதான், முற்போக்குச் சிந்தனை கொண்ட, ஜனநாயகக் கட்சியின் அரசியல் பார்வை கொண்ட ஒருவர் தன் இடத்துக்கு நீதிபதியாக வர வேண்டும் என ஆசைப்பட்டார் கின்ஸ்பெர்க். அதே சமயம், தற்போதைய அதிபரான டொனால்டு ட்ரம்ப், குடியரசுக் கட்சியைச் சார்ந்த , அவரைப்போலவே வலதுசாரி சிந்தனை கொண்ட ஒரு நபரை நீதிபதியாகப் பரிந்துரை செய்ய விரும்புகிறார். 20 பேர் கொண்ட (11 குடியரசுக் கட்சி, 9 ஜனநாயகக் கட்சி) செனட் குழுவுக்கு முன்னர், நீதிபதிக்கான தன் பரிந்துரையை அதிபர் முன்மொழிவார். செனட்டில் பெரும்பான்மை உறுப்பினர்கள் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் விரும்பும் நபரை எளிதில் நீதிபதியாக்கிவிட முடியும் என்பது ட்ரம்பின் கணக்கு.

இப்போது கின்ஸ்பெர்க்கின் இடத்தில் ஒரு பெண்ணையே பரிந்துரைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் ட்ரம்ப். அதற்குக்காரணம் பாலின சமத்துவத்தின் மீதான அக்கறையில்லை. “எனக்கு ஆண்களைவிட பெண்களை அதிகம் பிடிக்கும். அதுவும் ஒரு காரணம்” என வழக்கம்போல அபத்தமாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் ட்ரம்ப்.

9 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு என்பது, அதன் நடுநிலைமை தவறாது அமைய வேண்டும். அதுதான் இத்தனை ஆண்டுக்கால அமெரிக்க வரலாற்றைக் கட்டமைத்திருக்கிறது. ட்ரம்ப் தன் ஆட்சிக்காலத்தில் ஏற்கெனவே இரண்டு நீதிபதிகளை தன் அரசியல் சார்புத்தன்மையோடு நியமித்துவிட்டார். தற்போது மூன்றாவது முறையாக இன்னொருவரை நியமிக்கவிருக்கிறார். இவ்வாறு நியமிப்பதன் மூலம், அடுத்த பல ஆண்டுகளுக்கு, தங்கள் கட்சி சார்பான நிலைப்பாடுகளை எடுக்க வசதியாக இருக்கும் என்பது குடியரசுக் கட்சியின் நிலைப்பாடு.

செனட்டுகளின் பதவிக்காலம், அடுத்தாண்டு ஜனவரி மூன்றாம் தேதியுடனும், ட்ரம்பின் பதவிக்காலம், ஜனவரி 20-ம் தேதியுடனும் முடியவிருக்கின்றன. அதற்குள் இந்தக் காய் நகர்த்தல்களின் மூலம், தங்களுக்குச் சார்பான நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துவிட வேண்டும் என்ற குடியரசுக்கட்சியின் திட்டத்தை ஜனநாயகக் கட்சி கடுமையாக எதிர்த்துவருகிறது.