
பாரதி பாஸ்கர் - ஓவியம்: கணேசமூர்த்தி
நற்றமிழ் நாயகர், வையம் போற்றும் பத்மஸ்ரீ, முனைவர் ஔவை நடராசன் மறைந்த செய்தியை, ‘எந்தையும் இலமே’ என்ற குறுஞ்செய்தியாய் அவரின் மகன்கள் கண்ணன், அருள், பரதன் ஆகிய மூவரும் சென்ற 21-ம் தேதி இரவு அனுப்பினார்கள். நானும் நண்பர் ராஜாவும் எங்கள் நடுவர் திரு. பாப்பையாவும் வெளிநாட்டில் இருந்தோம். ஔவையின் முகத்தைப் பார்க்கவும் முடியாத ஒரு விடைபெறல். அவரின் அண்ணா நகர் வீட்டில் நின்று நான் கதறியிருக்க வேண்டும். அவர் மகனும் என் சகோதரனுமான அருளின் கைபிடித்துக் கரைந்திருக்க வேண்டும். அது ஒன்றே என் துயரத்தைச் சற்று ஆற்றியிருக்கும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில், அன்றைய லண்டன் குளிர்சூழ் இரவு, மரணத்தின் இருண்டவெளியின் புயல் போல என்னைச் சூழ்ந்தது. ‘அப்பா' என்று நாங்கள் அன்புடன் அழைத்த எந்தை! எல்லையில்லாத அவரின் அன்புச் சாரல் இனி வீசாது என்ற நினைவு மட்டும் சுழன்று சுழன்று தாக்கிய அந்தக் கொடும் இரவு.
எங்களின் கல்லூரி நாள்களில் ஔவையின் வீடு இளைஞர்களுக்கான பெரிய சரணாலயம். ‘‘சார், உங்க காதல் கதையைச் சொல்லுங்க’’ என்று அவரைச் சீண்டுவோம். ஔவையின் மனைவி அமரர் டாக்டர் தாராவும் அருகில் இருந்தால் அவருக்கு குஷி பிறந்துவிடும். தான் அந்தக் காலத்தில் டாக்டரைப் பார்த்துப் பாடிய ‘தாரா தாரா வந்தாரா’ என்ற பழைய பாடலை கரகர குரலில் பாடுவார் ஔவை.

பாடல் முடியும்முன் டாக்டர் தாரா வந்து, ‘‘அவ என்ஜினீயரிங் காலேஜ்ல படிக்கிற பொண்ணு. நிறைய வேலை இருக்கும். உருப்படணுமா, வேண்டாமா?'' என்று கேட்பார். ‘‘காலேஜ் போயி எதுக்கு ராஜா நேரத்தை வேஸ்ட் பண்ணணும்?'' என்பது ஔவையின் கட்சி. சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்த காலங்களை நினைக்கிறேன். அவர் இருந்த உயரங்களுக்கு அருகே போகவே அனுமதி கிடைக்காது என நினைத்துத் தயங்கும் மாணவர்களை ‘என்ன ராஜா' என தானே போய்ப் பேசும் பெரு உள்ளம்.
மொத்த இளைஞர் கூட்டமும் அவரை ‘அப்பா’ என்றழைத்து உரிமை கொண்டாடும். அவர் கொட்டும் கவிதைச் சாரல்களில் நனைந்து மனம் கிறங்கும். இந்தக் கூட்டணியில் இருந்த தைரியத்தில் ஒரு நாள் அவரிடம் போய்ப் பேசினேன். அன்று நடந்து முடிந்திருந்த ஒரு திருக்குறள் போட்டியில் அவரும் நடுவர்களில் ஒருவர். அன்று எனக்குப் பரிசு கிடைக்கவில்லை. ‘‘என் பேச்சு ஏன் பரிசுக்குப் பரிசீலிக்கப்படவில்லை’ என்று கேட்டேன். ‘‘சௌந்தராம்மா (இலக்கிய அறிஞர் சௌந்தரா கைலாசம்) வீட்டுக்குப் போய்க்கிட்டிருக்கேன் ராஜா, நீயும் வா'’ என்றார். ‘அங்கே எனக்கு அழைப்பில்லையே...' என்று எனக்குத் திகைப்பு. வேறு வழியின்றிப் போனேன். சௌந்தராம்மா, ‘இது யார் உங்கள்கூட வந்திருப்பது' என்றுகூடக் கேட்கவில்லை. ஔவை எப்போதும் மாணவர்களோடுதான் வருவார் என அவர்களுக்குத் தெரியும் போலும். ‘நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்’ (வானம் மழை பொழியாவிட்டால் கடலும் வறண்டு போகும்) என்னும் குறள் பற்றி இருவரும் பேசிக் கொண்டனர். பேச்சுக்கிடையில் ஔவை, ‘‘வள்ளுவரின் தியரி அண்மைக்கால அறிவியலின் oceanography சார்பு தத்துவங்களுக்கு முன்னோடி’' என்றார். நான் அசந்தே போனேன். என் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. பேச்சாளனின் ஒரே வேலை, எதிலும் வித்தியாசமான கோணங்களை முன்வைப்பது. எத்தனையோ பேர் நடந்த அதே சிந்தனைப் பாதையில் நடப்பது அல்ல. அதுதான் அவரிடம் நான் கற்ற மாபெரும் பாடம். அதைச் சொல்லாமல் சொல்லும் வித்தைக்காரர் அவர்.
அவரின் தமிழ் எப்படி வண்ணமும் வடிவும் மிக்கதோ, அவரின் ஆங்கிலமும் அதே அளவு அருமையானது. தமிழை ஆங்கிலத்திற்கு அவர் மொழிபெயர்க்கும்போது, அது வெறும் மொழிபெயர்ப்பாக நில்லாமல் இன்னமும் ஒளி வீசும் வைரமாக மாறிவிடும். காசிப்பட்டின் மென்மையும் கார்கால மின்னலின் தகத்தகாயமும் கொண்டவை அவரின் சொற்கள்.
பேராசிரியர் திரு. இராசகோபாலன் ஔவையின் மொழிபெயர்ப்புத் திறத்திற்கு ஓர் உதாரணம் சொல்வார். ஒரு விழாவில் மறைந்த முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பாராட்டு செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் ஒருவர், ‘It is another feather on his cap’ என்று சொல்லிப் பாராட்டுகிறார். இது ஆங்கிலத்தில் வழக்கமாகச் சொல்லப்படும் சொற்றொடர். வேறு யார் மொழிபெயர்த்திருந்தாலும் ‘அவரின் தொப்பியில் இன்னும் ஒரு சிறகு’ என்றுதான் சொல்லியிருப்பார்கள். எம்.ஜி.ஆருக்கு அப்படிச் சொல்வது வேடிக்கையாகிவிடும். அன்று அந்த மொழிபெயர்ப்பைச் செய்த ஔவை எப்படி அந்த சாதாரண வாசகத்தைப் பொன் போல மிளிரச் செய்தார் பாருங்கள், ‘இது மன்னாதி மன்னனின் மகுடத்தில் மற்றும் ஒரு மாணிக்கக்கல்.’ இவர் இப்படி மொழிபெயர்த்ததும், அரங்கமே அதிர்ந்துவிட்டது.
பட்டிமன்ற உலகின் தூண்களில் ஔவையும் ஒருவர். ஆங்கிலப் பட்டிமன்றம் ஒன்றுகூட அவரின் தலைமையில் நடந்த வரலாறு உண்டு. பட்டிமன்றங்களில் இரு அணியினரும் காரசார மோதல்களில் ஈடுபட்டபின், தன் பஞ்சு போன்ற சொற்களால் தீர்ப்புச் சொல்லத் தொடங்குவார். போகப் போக, தன் அருவி போன்ற சொற்களின் பெருக்கால் உரைவாளின் உரசலை உணரும் சிலிர்ப்புக்கு நம்மை ஆளாக்கிவிடும் வித்தகர் அவர்.
கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி ஔவையின் மனைவி டாக்டர் தாரா இரு ஆண்டுகளுக்கு முன் காலமானார். கண்கள் கலங்கி சிறுபிள்ளை போலக் கதறிய ஔவையைத் தேற்ற இயலாமல்தான் திரும்பினேன். டாக்டர் தாரா காலமானபோதே, ஔவையின் ஒரு பாதி மறைந்துவிட்டது. காலத்தின் மிரட்டல்களினால் காயப்பட்டாலும், மேன்மேலும் ஒளி ஏறிச் செல்லும் எல்லையற்ற காதல் உள்ளம் அவருடையது. தனக்கு முன்னே புறப்பட்டுவிட்ட இணைப் பறவையைத் தேடி இந்தத் தமிழ்ப் பறவையும் பறந்துவிட்டது.