ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

குழந்தைகளும் வள்ளியப்பாவும்!

வள்ளியப்பா
பிரீமியம் ஸ்டோரி
News
வள்ளியப்பா

- சுகன்யா

ஞாயிற்றுக்கிழமை காலை நேரம். அந்தப் பகுதிக்குப் புதிதாகக் குடிவந்த பெண், ``வாசல்ல விளை யாடிகிட்டிருந்த என் மகனைக் காணலையே” எனப் பதறிப்போய் அக்கம்பக்கத்தில் கேட்க, இன்னொரு பெண்மணி, ``கவலைப்படாதம்மா. அதோ அசோக மரம் நிற்கிற வீட்டிலே போய்ப் பாரு. உன் மகன் இருப்பான்’’ என்றதும் அந்தப் பெண் ஓட்டமும் நடையுமாகச் சென்றார். அங்கு அவர் மகனுடன் 10, 15 குழந்தைகள் கதை கேட்டுக்கொண்டிருந்தார்கள். கதை சொல்லிக் கொண்டிருந்தவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா. தன் குருவான கவிமணி பெயரில் சங்கம் ஒன்றைத் தோற்றுவித்து, வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தை களுக்குக் கதையும் பாட்டும் சொல்வார் வள்ளி யப்பா. குழந்தைகளையும் சொல்ல வைப்பார்.

``குழந்தைகளின் இன்பமே எனது இன்பம். அவர்களுக்குத் தொண்டு செய்வதே எனது குறிக்கோள்’’ என வாழ்நாளில் பெரும்பகுதியைக் குழந்தை இலக்கியத்துக்கு அர்ப்பணித்த அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டு தொடக்கத்தில் இருக்கிறோம். புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தில் பிறந்த குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டு நவம்பர் 7-ம் தேதி தொடங்குகிறது.

குழந்தைகளும் வள்ளியப்பாவும்!

தமிழ்நாட்டில் குழந்தை இலக்கியத்தைத் தனித்துறையாக வளர்த்தவர் வள்ளியப்பா. குழந்தை இலக்கியம் வளரவும், குழந்தை எழுத்தாளர்கள் பெருகவும் 1950-ல் `குழந்தை எழுத்தாளர் சங்க’த்தை நிறுவினார். இந்தியாவில் குழந்தை எழுத்தாளர்களுக்கென தொடங்கப்பட்ட முதல் சங்கம் இதுவே. தமிழிலும், மற்ற தென்னிந்திய மொழிகளிலும் குழந்தைகளுக்கான தரமான நூல்கள் வெளிவர முக்கிய காரணமாக இருந்தவர். குழந்தைகளுக்காக 60-க்கும் அதிகமான நூல்களையும், 1,000-க்கும் அதிகமான பாடல் களையும் எழுதியிருக்கிறார் அவர்.

குழந்தைகளை எளிதில் கவரும் அணில், பூனை, நாய், குதிரை, கிளி உள்ளிட்ட உயிரினங்களை அதிகம் பாடி யிருக்கிறார் வள்ளியப்பா. பெருந்தலைவர்களையும், சுற்றுலாத் தலங்களையும் எளிய நடையில், சந்த நயத்துடன் குழந்தை களுக்கு அறிமுகப்படுத்தியவர் வள்ளியப்பா. மழை அதிகம் தேவைப்படும் தமிழ்நாட்டில், `ரெயின் ரெயின் கோ அவே’ என்ற ஆங்கிலப் பாடல் பிரபலமாக இருந்த காலகட்டத்தில், மழையின் அவசியத்தைக் குழந்தைகளுக்கு உணர்த்த `வா மழையே வா’ என்று பாடினார்.

குழந்தைகளுக்கு வேடிக்கையான நகைச்சுவைப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர் வள்ளியப்பா. `தென்னை மரத்தில் ஏறலாம்... தேங்காயைப் பறிக்கலாம், மா மரத்தில் ஏறலாம்... மாங்காயைப் பறிக்கலாம்’ என்று ஒவ்வொரு மரமாக எழுதியவர், இறுதியில் `வாழை மரத்தில் ஏறினால்... வழுக்கி வழுக்கி விழுகலாம்’ என்று முடித்திருப்பார்.

அழ.வள்ளியப்பாவின் மகள் தேவி நாச்சியப்பனிடம் பேசினோம், ``அப்பா மறைந்த 1989-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அவரது பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதியை `குழந்தை இலக்கிய தின’மாகக் கொண்டாடி வருகிறோம். இந்த நிகழ்வில், குழந்தைகள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வள்ளியப்பாவின் படைப்புகளைக் கலை நிகழ்ச்சிகளாக வழங்குவார்கள். இந்த ஆண்டு அப்பாவின் நூற்றாண்டு விழாவைக் குழந்தைகளோடு சிறப்பாகக் கொண்டாடத் திட்ட மிட்டிருக்கிறோம். அப்பா மறைவுக்கு முன்னர் பேசிய கடைசி மேடைப் பேச்சில், `இலக்கியத்துறை பட்டப் படிப்புகளில், குழந்தை இலக்கியமும் ஒரு பாடமாகச் சேர்க்கப்பட வேண்டும்’ என்றார்.

14.11.1956 அன்று டில்லியில் சாகித்ய அகாடமி ஏற்பாடு செய்த புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் பகுதிப் பொறுப்பாளராகப் பணியாற்றினார் வள்ளியப்பா. நேரு, அவர் பிறந்த நாளில் புத்தகக் காட்சியைப் பார்வையிட வந்தபோது குழந்தை நூல்கள் பற்றிய அவரின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார்.
14.11.1956 அன்று டில்லியில் சாகித்ய அகாடமி ஏற்பாடு செய்த புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் பகுதிப் பொறுப்பாளராகப் பணியாற்றினார் வள்ளியப்பா. நேரு, அவர் பிறந்த நாளில் புத்தகக் காட்சியைப் பார்வையிட வந்தபோது குழந்தை நூல்கள் பற்றிய அவரின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார்.

பல்வேறு துறைகளில் பட்டப்படிப்புகள் துளிர்த்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், பல்கலைக் கழக அளவில் குழந்தை இலக்கியத்தைப் பட்டப்படிப்பாக இடம்பெறச் செய்தால் குழந்தை இலக்கியம் தொய்வின்றி தொடர்ந்து வளரும். குழந்தைக் கவிஞரின் கனவும் நிறைவேறும்’’ என்றார்.

``தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்க, எளிய நடையிலிருக்கும் வள்ளியப்பா வின் பாடல்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது முக்கியம்’’ என்கிறார்கள் இக்காலத்துக் குழந்தை எழுத்தாளர்கள். அதுவும் குழந்தைகள், தொலைக்காட்சியே கதி எனக் கிடக்கும் இன்றைய காலகட்டத்தில் வள்ளியப்பாவை நினைவுகூர்வது அவசியம்.