Published:Updated:

“லட்சுமி ரொம்ப அன்பான மனுஷி!”

லட்சுமி விஸ்வநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சுமி விஸ்வநாதன்

கடைசியாகப் பேசிய சித்ரா விஸ்வேஸ்வரன், ‘‘லட்சுமி ரொம்ப அன்பான மனுஷி. நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. அவருடைய பரதம் போலவே, அவர் உடைகள், வீடு என அனைத்திலுமே ஓர் அழகியல் இருக்கும்.

புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் லட்சுமி விஸ்வநாதன், ஜனவரி 19-ம் தேதி சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். ஏழு வயதில் தன் அரங்கேற்றத்தைச் செய்த இவரின் பாதங்கள், 79 வயதில் மரணமடையும் வரை பரதநாட்டியத்தை நிறுத்தவில்லை. தஞ்சாவூர் பாணி நடனக்கலையில் சிறந்து விளங்கியவர்.

லட்சுமி விஸ்வநாதனின் வீடு, அவர் வரைந்திருந்த பொங்கல் கோலத்துடன் என்னை வரவேற்றது. “இது அக்கா போபால் போய்ட்டு வந்ததும் அவசர அவசரமாக ரெண்டே நிமிஷத்துல வரைஞ்சது” என்றபடியே வந்தார் லட்சுமி விஸ்வநாதனின் தங்கை சாருமதி ராமச்சந்திரன். சாருமதியும் புகழ்பெற்ற கர்னாடக சங்கீதப் பாடகி ஆவார். வீடு முழுக்க பழைய படங்களாலும், விருதுகளாலும் நிறைந்திருக்கிறது. தொடர்ந்து பேசிய சாருமதி, ‘‘லட்சுமி என் மூத்த அக்கா. எனக்கும் அவங்களுக்கும் ஏழு வயசு வித்தியாசம். நான் பொறந்த ரெண்டு மாசத்துல லட்சுமி அக்காவும், சுஜயா அக்காவும் அரங்கேற்றம் பண்ணினாங்க. காஞ்சிவரம் எல்லப்பாகிட்டதான் தஞ்சாவூர் பாணி நடனத்தைக் கத்துக்கிட்டாங்க. அக்கா நடனத்துல பல ஆராய்ச்சி பண்ணி தன் கற்பனையையும் க்ரியேட்டிவிட்டியையும் புகுத்தி புதிய பாணியில ஆடுவாங்க. நடனத்தில் முக பாவனைகளுடன் பல உணர்ச்சிகளைக் கொண்டு வந்து, பார்வை யாளர்களோடு உரையாடுவாங்க. ‘Bharatanatyam - the Tamil Heritage', எம்.எஸ் அம்மா பத்தி ‘Kunjamma - Ode to a Nightingale போன்ற புத்தகங் களுடன் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியிருக்காங்க.

“லட்சுமி ரொம்ப அன்பான மனுஷி!”

நிறைய பயணங்கள் போவாங்க. உலகம் முழுக்க இருந்து பல மாணவர்கள் அக்காகிட்ட நடனம் கத்துக்க சென்னை வருவாங்க. கொரோனா சமயத்தில்கூட, வீடியோ காலில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்தாங்க. ஜனவரி 27 அன்னைக்கு அக்காவுக்கு 80 வயசு. எல்லோரும் இந்த வாரம் குருவாயூர் போகலாம்னு இருந்தோம். அக்கா இல்லாத வீடு களையிழந்து இருக்கு” என்று கண்ணீருடன் முடித்தார் சாருமதி.

லட்சுமி விஸ்வநாதனின் தோழிகளும், சக பரதநாட்டியக் கலைஞர்களுமான பத்மா சுப்ரமணியம், சித்ரா விஸ்வேஸ்வரன் மற்றும் சுதாராணி ரகுபதியிடம் பேசினேன். முதலில் பேசிய பத்மா சுப்ரமணியம், “லட்சுமி என் சித்தப்பா பொண்ணு. எனக்கு லட்சுமியோட சின்ன வயசு நினைவுகளும், அவளோட சிரிச்ச முகமும்தான் நினைவுல நிக்குது. எங்க ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசுதான். ஆரம்பத்துல ஒரே டீச்சர்கிட்டதான் நடனம் கத்துக்கிட்டோம். எங்க ரெண்டு பேர்ல, முதல்ல அரங்கேற்றம் பண்ணுனது லட்சுமிதான்.

என் அப்பா கே.சுப்ரமணியம், வெளிநாட்டுல இருந்து ஜப்பானிய உடைகள் வாங்கி வந்தார். லட்சுமிக்கு வெள்ளை நிறம், சுஜயாவுக்கு பிங்க், எனக்கு நீல நிறம். நாங்க ஜப்பானியர்கள் போல மேக்கப் போட்டு, புகைப்படம் எடுத்துக்கிட்டோம். அதேபோல, லட்சுமி ராதாவாகவும், நான் கிருஷ்ணனாகவும் வேஷம் போட்டுக்கிட்டோம். அந்தப் படங்கள் இப்போ என்கிட்ட இல்லைன்னாலும், அவளோட நினைவுகள் எப்பவுமே இருக்கும். லட்சுமியின் மறைவு, கலை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு. எனக்கு அவள் இறப்பு, மனதில் ஈடுசெய்யமுடியாத வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது” என்றார்.

அடுத்து பேசிய சுதாராணி ரகுபதி, “நானும் லட்சுமியும் ஐம்பது வருடங்களுக்கு மேல தோழிகள். லட்சுமி என் கணவரோட ஸ்கூல் மேட். அதனால எங்க குடும்பத்துல ஒருத்தரா இருந்தாங்க. சில நாள் முன்புகூட, நான் போட்டிருந்த ஆரம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க. ‘உனக்குப் புடிச்சிருக்கா?’ன்னு கேட்டேன். ‘புடிச்சிருக்கு’ன்னு சொன்னா. உடனே அவளுக்கு அந்த ஆரத்தை அனுப்பி வச்சேன். அதுக்கு பதிலா, எனக்கு ஒரு பர்ஃப்யூம் அனுப்பி, அவ கைப்பட ஒரு கடிதமும் எழுதி, ‘இன்னொரு கிஃப்ட் சீக்கிரம் அனுப்பறேன்’னு சொல்லி இருந்தா. ஆனா அதுக்குள்ள போய்ட்டா.

அந்தக் கடிதம் அவ இறந்த பிறகுதான் என் வீட்டுக்கு வந்துச்சு. இந்த 2022 டிசம்பர் மாத மார்கழி கலை நிகழ்ச்சிகள்ல நாங்க எல்லோரையும் ஒண்ணா சந்திச்சோம். அவங்க எல்லோரது மனசுலயும் லட்சுமி அழகான நினைவுகளை விதைச்சிட்டுப் போயிருக்கா” என்றார்.

லட்சுமி விஸ்வநாதன்
லட்சுமி விஸ்வநாதன்

கடைசியாகப் பேசிய சித்ரா விஸ்வேஸ்வரன், ‘‘லட்சுமி ரொம்ப அன்பான மனுஷி. நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. அவருடைய பரதம் போலவே, அவர் உடைகள், வீடு என அனைத்திலுமே ஓர் அழகியல் இருக்கும். பரதக் கலையில் நான் கடந்து வந்த பாதை பெரியது. பலர் தங்கள் நடனம் மூலம் என்னை மெய் சிலிர்க்க வைத்திருந்தாலும், மிகவும் குறைந்த கலைஞர்களே நமக்கு உத்வேகம் கொடுப்பார்கள். அந்த உத்வேகம் எனக்கு லட்சுமியின் நடனத்தில் பலமுறை கிடைத்திருக்கிறது.

கடந்த டிசம்பர் 25 அன்று அவருடன் நான், பத்மா சுப்ரமணியம் மற்றும் சுதாராணி ரகுபதி சேர்ந்து கலாஷேத்திராவில் நடனமாடினோம். அந்த அழகான காலைப் பொழுதை ஒரு பொக்கிஷமாக நினைவுகளில் வைத்திருப்பேன்.

அவர் வாழ்ந்த நாள்களில் தன்னைச் சுற்றி இருந்தவர்களுக்கு மகிழ்ச்சியையும், அன்பையும், ஊக்கத்தையும் அளித்தார். அப்படிப்பட்ட ஒரு அன்பான அழகான மனிதராக எல்லோர் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்’’ என்று நெகிழ்கிறார் சித்ரா விஸ்வேஸ்வரன்.