சினிமா
Published:Updated:

எப்போதும் கேட்கும் இடிமுழக்கம்!

சாரு மஜூம்தார்
பிரீமியம் ஸ்டோரி
News
சாரு மஜூம்தார்

கட்சித்தலைமைக்கும் நக்சல்பாரி குழுவுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டால் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கொல்லப்பட்டனர்

சாரு மஜூம்தார் இறந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம், நக்சல்பாரிகள் ஆகியவற்றை அறிந்தவர்களுக்கு சாரு மஜூம்தார் பரிச்சயமான பெயர். `நக்சல்பாரி' என்பது ஒரு கிராமத்தின் பெயர் என்றே அறியாதவர்கள், நக்சலைட்டுகள் என்றால் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், நோக்கமற்ற வன்முறையாளர்கள் என்ற பிம்பங்களை உள்வாங்கியவர்கள் சாரு மஜூம்தாரை அறிந்திருக்க மாட்டார்கள். உங்களுக்கு சாரு மஜூம்தாரைத் தெரியவில்லை என்றால் நீங்கள் இந்திய அரசியல் வரலாற்றை முழுமையாக அறியவில்லை என்று அர்த்தம்.

1919-ம் ஆண்டு வாரணாசியில் பிறந்தவர் சாரு மஜூம்தார். பொதுவுடைமைத் தத்துவத்தில் ஆர்வம் கொண்ட சாரு, 1939-ல் வாரணாசி அருகில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டபோது அதில் இணைந்து கட்சியின் முழுநேர ஊழியர் ஆனார். 1943-ம் ஆண்டு பஞ்சத்தின்போது, சாருவின் வழிகாட்டுதலின்படி ஏழைமக்கள் நிலப்பிரபுக்களின் களஞ்சியங்களில் இருந்த நெல்மணிகளைக் கைப்பற்றி அனைவருக்கும் விநியோகித்தனர். தொடர்ச்சியாகக் கட்சி நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் ஈடுபட்ட அவர், 1948-ல் கைது செய்யப்பட்டு 1951 வரை சிறையிலிருந்தார். 1952-ல் சாரு மஜூம்தார் திருமணம் செய்த லீலா சென்குப்தாவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர்தான். இப்படித் தனிவாழ்க்கைக்கும் அரசியல் வாழ்க்கைக்கும் இடையில் எந்த எல்லைக் கோடுகளுமற்று வாழ்ந்தார்.

மக்களைத் திரட்டிப் புரட்சி செய்ய வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பாதையில் தேங்கிவிட்டது என்ற அதிருப்திக்குரல்கள் உள்ளிருந்தே எழுந்தன. 1962-ல் இந்திய - சீனப்போர் நடந்தபோது இந்த முரண்பாடுகள் உச்சத்திற்குச் சென்று, 1964-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது, சாரு மஜூம்தார் அதில் இணைந்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே `இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே சி.பி.எம்மும் மக்கள் ஜனநாயகப் புரட்சியில் கவனம் செலுத்தாமல் பாராளுமன்றவாதத்தில் மூழ்கிவிட்டது' என்ற அதிருப்திக்குரல்கள் மீண்டும் எழுந்தன. இந்த முரண்பாடுகள் முற்றி வெடித்தது நக்சல்பாரி விவசாயிகள் எழுச்சியில்.

நக்சல்பாரி, மேற்குவங்கம் டார்ஜிலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக இருந்த நக்சல்பாரியில் குத்தகை விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் கட்சி செயற்பட்டது. பிகுல் குஷன் என்ற குத்தகை விவசாயி ஒரு நிலப்பிரபுவால் வெளியேற்றப்பட்டார். நீதிமன்ற உத்தரவு பிகுல் குஷனுக்கு ஆதரவாக வந்தபோதும் நிலப்பிரபுக்களின் அடியாட்கள் அவரை அடித்து விரட்டினர். குத்தகை விவசாயிகளை வெளியேற்றுவதற்கு எதிராகவும் நில உச்சவரம்புச் சட்டத்தை ஏமாற்றி நிலப்பிரபுக்கள் நிலங்களைத் தன்வசம் குவித்திருப்பதற்கு எதிராகவும் 1967-ல் விவசாயிகள் ஆயுதப்போராட்டத்தை நடத்தினார்கள். பட்டாக்களும் கடன் பத்திரங்களும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்கள் கொல்லப்பட்டார்கள். நிலங்கள் கைப்பற்றப்பட்டன. அப்போது மேற்குவங்கத்தில் ஆட்சியில் இருந்ததோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். அஜய் முகர்ஜி முதல்வர், ஜோதிபாசு காவல்துறை அமைச்சர். ஆனால் அரசால் அந்த எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

எப்போதும் கேட்கும் இடிமுழக்கம்!

கட்சித்தலைமைக்கும் நக்சல்பாரி குழுவுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டால் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கொல்லப்பட்டனர். சாரு மஜூம்தார், கனு சன்யால், சுசிதல் ராய் சௌத்ரி போன்றவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். 1969-ல் லெனின் பிறந்தநாளான ஏப்ரல் 22-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) உருவானது. இதுவே நக்சல்பாரி இயக்கம் என்று அழைக்கப்பட்டது.

சி.பி.ஐ, சி,பி.எம் போல அல்லாமல் தேர்தல் பாதையை முற்றிலும் புறக்கணித்து ஆயுதப்புரட்சியை நடத்துவது என்று எம்.எல் இயக்கம் தீர்மானித்தது. அமெரிக்காவைப் போல் சோவியத் யூனியன் பாதையையும் ‘சமூக ஏகாதிபத்தியம்' என்று வர்ணித்து நிராகரித்த நக்சல்பாரிகள், மாவோவைத் தலைவராகவும் சீனப்பாதையை வழிமுறையாகவும் ஏற்றுக்கொண்டனர். ‘ஆயுதப்புரட்சியின் மூலம் கம்யூனிச அரசை நிறுவ அழித்தொழிப்பே சரியான வழி' என்றார் நக்சல்பாரி இயக்கத்தின் பொதுச்செயலாளர் சாரு மஜூம்தார். மாணவர்களும் இளைஞர்களும் படிப்பையும் வேலையையும் துறந்து, ‘மக்களிடம் செல்லுங்கள்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்' என்று மாவோ சொன்னதைப்போல் கிராமங்களுக்குச் சென்று கட்சி கட்ட வேண்டும். அந்த ஊரில் மக்களை வாட்டிவதைக்கும் நிலப்பிரபுக்கள், கந்துவட்டிக்காரர்கள் போன்றவர்களைக் கொன்று வர்க்க எதிரியின் ரத்தத்தில் கை நனைக்க வேண்டும். இத்தகைய ‘அழித்தொழிப்பின்' மூலம் அரசை அச்சுறுத்தலாம்; மக்களுக்கு இயக்கத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என்பது சாரு மஜூம்தாரின் முடிவு. செந்தளப் பகுதியை (Red Corridor) அமைத்து, பகுதிவாரியாக விடுவித்து, பின் ஒட்டுமொத்தமாக இந்தியாவைக் கைப்பற்றி கம்யூனிச அரசை நிறுவுவதே சாரு மஜூம்தாரின், நக்சல்பாரிகளின் செயல்திட்டம்.

சாரு மஜூம்தாரின் அறைகூவலை ஏற்று இந்தியாவெங்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தனர். அழித்தொழிப்புகள் நடைபெற்றன. அப்படித் தமிழகத்தில் தன் படிப்பைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து அழித்தொழிப்பைச் செய்த முதல் இளைஞர் தியாகு. அவர் முதல் தமிழரசன் வரை பலரும் அழித்தொழிப்பில் ஈடுபட்டனர்.

நிலப்பிரபுக்கள் நக்சல்பாரி இயக்கத்தைக் கண்டு நடுங்கினார்கள் என்றாலும், அழித்தொழிப்பின் எதிர்விளைவுகள் கொடூரமானவை. இந்தியா முழுவதும் எல்லா மாநில அரசுகளும் காவல்துறை, துணை ராணுவப்படைகள் மூலம் நக்சல்பாரிகளை வேட்டையாடின. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது தேவாரம் தலைமையிலான காவல் படை, தர்மபுரி, அரியலூர் என்று நக்சல்பாரிகள் வலுவாக இருந்த இடங்களில் எல்லாம் வேட்டையைத் தொடர்ந்தது. தமிழகத் தலைவரான அப்பு காவல்துறையால் சட்டவிரோதமாகப் பிடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல். இன்றுவரை அப்பு என்ன ஆனார் என்று தெரியாது. பாலன், சீராளன், கோவிந்தன், கண்ணாமணி போன்றோர் என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர். ஏ.எம்.கோதண்டராமன், புலவர் கலியபெருமாள் எனப் பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அழித்தொழிப்பில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்ட தியாகு போன்றவர்கள் மரணதண்டனைக் கைதியானார்கள். ‘பூர்ஷ்வா நீதிமன்றத்தைப் புறக்கணிக்கிறோம்' என்று அவர்கள் நீதிமன்றங்களில் வழக்காட மறுத்தார்கள். ஆயிரக்கணக்கான நக்சல்பாரிகள் இந்தியாவெங்கும் சிறைகளில் அடைக்கப்பட, நாடு முழுவதும் என்கவுண்டர்களில் கொல்லப்பட்டவர்களும் அதிகம்.

காவல்துறை நடவடிக்கைகளின் உச்சம், சாரு மஜூம்தார் மரணம், 1972 ஜூலை 16-ல் சாரு கைது செய்யப்பட்டார். ஆஸ்துமா, இதய நோயால் அவதிப்பட்ட அவர், 11 நாள்கள் சிறைத்துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, 1972 ஜூலை 28-ல் மரணமடைந்தார்.

சாரு மஜூம்தார் இறந்தபோதும் நக்சல்பாரி இயக்கம் அழித்தொழிப்பைக் கைவிடாமல் 1970களின் இறுதிவரை தொடர்ந்தது. அழித்தொழிப்பைக் கைவிடுவது என்று கட்சி முடிவு செய்தபிறகு தமிழகத்தில் 1980-ல் நடந்த கடைசி அழித்தொழிப்பில் கொல்லப்பட்டவர், கீழ்வெண்மணியில் 44 பேர் படுகொலைகளுக்குக் காரணமான நிலப்பிரபு கோபாலகிருஷ்ண நாயுடு.

இயக்கத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிகளும் பின்னடைவுகளும் ஏராளமான கேள்விகளை எழுப்பின. ஆயுதபலம் மிக்க காவல்துறையையும் துணைராணுவப்படைகளையும் நக்சல்பாரிகளால் எதிர்கொள்ள முடியவில்லை. `இது புரட்சிக்கான வழியில்லை; சாகசவாதமே' என்ற குரல்கள் கட்சிக்குள்ளிருந்தே எழுந்தன. மிக முக்கியமான இரு விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அழித்தொழிப்பு, ஆயுதப்புரட்சி ஆகியவற்றில் மக்களின் பங்கு என்ன? எங்கிருந்தோ வரும் நக்சல்பாரிகள் ஒரு கிராமத்தில் அழித்தொழிப்பை நிகழ்த்துகிறார்கள். அதில் உள்ளூர் மக்கள் சிலர் பங்குபெற்றாலும் அது முழுமையான மக்கள் பங்கேற்பில்லை. நக்சல்பாரிகளை மீட்பர்களாக, நாயகர்களாகப் பார்த்த மக்கள், ‘புரட்சியை அவர்களே நடத்திக்கொள்வார்கள்' என்று நினைத்துவிடுகிறார்கள். இன்னொருபுறம் காவல்துறையால் நக்சல்பாரிகள் எவ்வளவு வன்முறையைச் சந்தித்தார்களோ அதே அளவு வன்முறையை அவர்களுக்கு உதவிய, உதவாத மக்களும் சந்தித்தார்கள். இந்தச் சித்திரவதைகள் தாங்க முடியாமல் சில இடங்களில் மக்களே நக்சல்பாரிகளைக் காட்டிக்கொடுத்தார்கள். இப்படியாக நக்சல்பாரிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போனது மிக முக்கிய விமர்சனமானது.

மேலும், பல்வேறு மொழிகள், தேசிய இனங்கள் கொண்ட இந்தியாவில் ஒரே அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட அகில இந்தியப் புரட்சி சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்தது. 1965-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும்போது சாரு மஜூம்தார் எழுதிய கட்டுரையிலேயே தமிழகத்தில் நடைபெற்ற மொழிப் போராட்டத்தைக் குறிப்பிட்டபோதும் ‘ஆளும் வர்க்க அரசுக்கு எதிரான அதிருப்தி, நாளைய போராட்டங்களுக்கான அடையாளம்' என்றே அவர் வரையறுத்தார். மொழி, பண்பாடு, தேசிய இனம் குறித்து நக்சல்பாரி இயக்கம் போதுமான கவனம் கொள்ளவில்லை என்ற விமர்சனத்துடன் பல தேசிய இன விடுதலை இயக்கங்கள் உருவாகின. அழித்தொழிப்பைக் கைவிடுவதற்கு முன்பே தமிழரசன் நக்சல் இயக்கத்திலிருந்து வெளியேறி தமிழ்நாடு விடுதலைப் படையை உருவாக்கியிருந்தார். அழித்தொழிப்பில் கைதாகிச் சிறையிலிருந்த தியாகு, அழித்தொழிப்பு தவறான பாதை என்று நக்சல்பாரி இயக்கத்திலிருந்து விலகி, சி.பி.எம் கட்சியில் இணைந்து, பிறகு அந்தக் கட்சி தேசிய இனப்பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி தமிழ்த்தேசியவாதியாக மாறினார்.

எப்போதும் கேட்கும் இடிமுழக்கம்!

ஒடுக்குமுறைகள், இழப்புகள், விவாதங்கள், கருத்துமுரண்களைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் நக்சல்பாரி இயக்கம் பல குழுக்களாகச் சிதறியது. தமிழகத்தில் சி.பி.ஐ (எம்.எல்) - லிபரேஷன், மக்கள் விடுதலை, செங்கொடி, மக்கள் கலை இலக்கியக்கழகம், மக்கள் அதிகாரம் போன்ற வெகுமக்கள் அமைப்புகளைக் கொண்ட மாநில அமைப்பை உருவாக்கி, தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி, மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சி என்று பல மா.லெ அமைப்புகள் இயங்குகின்றன. இன்னும் பிளவுகள் தொடர்கின்றன. ஆந்திராவில் வலுவாக இயங்கிய மக்கள் யுத்தக்குழு அமைப்பும் பீகார், ஜார்கண்ட் போன்ற பகுதிகளில் இயங்கிவந்த மாவோயிஸ்ட் கட்சியும் இணைந்து மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்பு மட்டுமே இப்போது ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பல மாநிலங்களில் வலுவாக இருந்த அந்த அமைப்பு, இப்போது சில மாவட்டங்களில் மட்டுமே இயங்கும் அமைப்பாகச் சுருங்கிப்போயிருக்கிறது.

மற்ற எல்லா நக்சல்பாரி அமைப்புகளும் ‘வெகுமக்கள் அமைப்புகளின் மூலம் மக்களைத் திரட்டி அரசியல் கற்பித்து, வர்க்க உணர்வை ஊட்டி ஆயுதப்புரட்சி நடத்துவது' என்ற முடிவுக்கு வந்துவிட்டன. சி.பி.ஐ - எம்.எல் (லிபரேஷன்) போன்ற சில அமைப்புகள் தேர்தல் பாதைக்கும் வந்துவிட்டன. பீகாரில் இப்போது ஆளும் கூட்டணியிலேயே சி.பி.ஐ - எம்.எல் கட்சி இணைந்திருக்கிறது. பாராளுமன்ற ஜனநாயகத்தைப் புறக்கணித்த ஓர் அமைப்பு, முழுச்சுற்று வந்து இப்போது தேர்தல் அரசியலில் பங்கெடுத்திருக்கிறது.

சாரு மஜூம்தாரின் புரட்சி குறித்த நம்பிக்கைகளும் கனவுகளும் பொய்த்திருக்கலாம். அவரது வழிமுறை குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அதிகாரத்துக்கு எதிராக இந்திய வரலாற்றில் அவ்வப்போது எழும் குரல்களின் குறியீடு சாரு மஜூம்தார். ‘வசந்தத்தின் இடிமுழக்கம்' என்று நக்சல்பாரி இயக்கத்தை அவர் வர்ணித்தார். இந்தியச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வும் சமத்துவமின்மையும் இருக்கும்வரை சாரு மஜூம்தார் எப்போதும் கேட்கும் இடிமுழக்கமாகவே நினைவுகூரப்படுவார்.