அரசியல்
Published:Updated:

ஒரு முன்கள வீரனை இழந்தோம்!

தா.பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
தா.பாண்டியன்

நல்லகண்ணு - (மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

நான் வீட்டில் செய்தித்தாள்களை வாசித்துக்கொண்டிருந்தபோதுதான், ‘தோழர் தா.பா மறைந்துவிட்டார்’ என்ற செய்தி என்னை வந்து சேர்ந்தது. உடனடியாக அவர் வீட்டுக்குக் கிளம்பத் தயாரானேன். 2 மணிக்கு பாலன் இல்லத்துக்கு அவர் உடல் கொண்டுவரப் படுவதாகத் தோழர்கள் தகவல் தந்தார்கள். மதியம் வீட்டிலிருந்து கிளம்பும்வரை அவர் குறித்த பழைய நினைவுகளைத்தான் மனம் அசைபோட்டுக்கொண்டிருந்தது. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் பேச்சற்றுக் கிடந்தார். தோழர் தா.பா என்றாலே எனக்கு மட்டுமல்ல, யாருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது அவரின் கம்பீரமான பேச்சுதான். அது இல்லாமல் போக, அந்த நொடியில் மனம் சற்று கனத்துத்தான் போனது.

நான் திருநெல்வேலி சதி வழக்கில் ஏழாண்டுச் சிறைவாசத்துக்குப் பிறகு, 1956-ல் விடுதலையாகியிருந்த நேரம். கேரளாவின் இடுக்கி தொகுதி இடைத்தேர்தல் அப்போதுதான் நடந்தது. அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி எப்படியாவது வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. மதுரை பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர். அதன் காரணமாக தமிழகத்திலிருந்து பல தோழர்கள் பிரசாரத்துக்குச் சென்றிருந்தோம். கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சிதான் என்றாலும், கம்பெனிகளின் கெடுபிடியால் கம்பெனிக் குடியிருப்புகள் இருக்கும் பகுதிக்குள் பிரசாரம் செய்ய முடியாது. சாலையின் இந்தப் பக்கம் மைக்கை வைத்துப் பேச வேண்டும். இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் இசைக் கச்சேரி எல்லாம் நடந்தது. அந்தக் கூட்டத்தில், ஓர் இளைஞனின் பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்திழுத்தது. அவர்தான் தோழர் தா.பாண்டியன்!

ஒரு முன்கள வீரனை இழந்தோம்!

எனக்கும் அவருக்குமான அறிமுகம் அங்குதான் தொடங்கியது. சிலர் நல்ல பேச்சாளர்களாக இருப்பார்கள்... எழுத்து வராது. சிலர் நன்றாக எழுதுவார்கள்... பேச வராது. இலக்கியம் தெரிந்தவர்களுக்குப் பொருளாதாரம் குறித்த பரிச்சயம் இருக்காது. பொருளாதாரத்தில் கரைகண்டவர்கள், இலக்கியத்தைவிட்டுப் பத்தடி விலகியே இருப்பார்கள். ஆனால், இவையனைத்திலும் ஆழம்கண்ட பன்முகத் திறமையாளனாக, தோழர் தா.பா இருந்தார். உள்ளூர் வரலாற்றில் தொடங்கி, உலக வரலாறு வரை தனக்கே உரிய பாணியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாடக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்தார்.

அவர் மரணமடைவதற்கு முன்பு, இரண்டு கூட்டங்களில் அவருடன் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒன்று, மதுரையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் அரசியல் எழுச்சி மாநாடு. ‘மதுரையில் இவ்வளவு கூட்டம் வந்திருப்பது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது தோழர்’ எனத் தன் மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்துகொண்டார். அவர் உடல்நலம் நாளுக்கு நாள் குன்றிவருவது குறித்த கவலை அவருக்கில்லை. கட்சி மாநாட்டுக்குக் கூட்டம் கூடுவதே அவருக்கு ஆனந்தமாக இருந்தது. அடுத்ததாக, பிப்ரவரி 21-ம் தேதி, தொழிற்சங்க மாநிலச் செயலாளர் மூர்த்தி இல்லத் திருமணவிழாவில் இருவரும் கலந்து கொண்டோம். முதன்முறை கேட்டபோது, அவரின் பேச்சுவளம் எப்படி இருந்ததோ அதே கணீர் பேச்சு அன்றைக்கும்!

உடல்நலக் கோளாறு என்றால் நம் கவனம் முழுவதும் உடலின் மீதுதான் இருக்கும். ஆனால், வாரத்துக்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்தபோதும் பேச்சை, எழுத்தை, சிந்தனையை அவர் நிறுத்தவே இல்லை. எப்போதும்போல அதே ஆற்றலோடும் வேகத்தோடும் அவர் செயல்பட்டதுதான் ஆச்சர்யம். இந்த கொரோனா நெருக்கடியிலும்கூட, தற்காலச் சூழலை மனதில்வைத்து, ‘இந்தியாவில் மதங்கள்’ எனும் நூலை எழுதி வெளியிட்டார் தோழர். வகுப்புவாத, மதவாத நெருக்கடியை முறியடிக்க, களத்தில் முன்கள வீரனாகச் செயல்பட்டார்.

உடல்நிலை ஒத்துழைக்காதபோதும், பாலன் இல்லத்துச் சென்று, தோழர் தா.பா-வுக்கு வணக்கத்தைச் செலுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். ஒருபக்கம் தலைவர்களின் வருகை, மறுபுறம் அவர் குறித்த சிந்தனைகள். இடையிடையே, ‘தோழர் தா.பா-வுக்கு வீரவணக்கம், தோழர் தா.பா-வுக்கு செவ்வணக்கம்’ எனத் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து தொழிற்சங்கத் தோழர்கள் அவருக்கு இறுதி அஞ்சலியைச் செலுத்திக்கொண்டிருந்தனர். அவர் மிகச்சிறந்த தொழிற்சங்கவாதி என்பதற்கான சான்று, அந்த முழக்கங்கள்தான்.

ஒருமுறை கியூபாவின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அவரிடம், ‘ஃபிடல் காஸ்ட்ரோ’ குறித்து தோழர் தா.பா எழுதிய நூல் வழங்கப்பட்டது. அந்த நூல் காஸ்ட்ரோவின் கைகளுக்குச் சென்ற செய்தி அறிந்ததும், ‘எனக்கு நோபல் பரிசு கிடைத்திருந் தாலும் நான் இவ்வளவு மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டேன்’ என அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. நோய்வாய்ப்பட்டபோதும் கொள்கைப் பிடிப்போடு பல்வேறு வழிகளில் கட்சிக்காக உழைத்துக்கொண்டேயிருந்தார். அவர் மட்டுமல்ல, அவர் குடும்பத்தினருமே ‘சமூகம் சமத்துவத்தோடு வாழ வேண்டும்’ என நினைத்தார்கள். அவர் குடும்பத்திலிருந்து கட்சிக்கு வேலை செய்ய ஆட்கள் வந்து கொண்டேயிருந்தனர்.

ஒரு முன்கள வீரனை இழந்தோம்!

அவர் மனைவியின் இறுதிச்சடங்கில் நான் கலந்துகொண்டேன். உசிலம்பட்டியில் நடந்த தோழர் தா.பா-வின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதில் வருத்தம்தான். என் உடல்நிலை அப்படி.

இரண்டு கம்யூனிச இயக்கங்களும் இணைய வேண்டும் என்பது அவரின் பெருவிருப்பமாக இருந்தது. எனக்கும் அதில் உடன்பாடு உண்டு. கட்சிக்கு இளைஞர்கள் பலர் வருவதற்குக் காரணமாக இருந்தவர் அவர். அவரிடம் இளம் கம்யூ னிஸ்ட்டுகள், தமிழக இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது, அவரின் இடைவிடாத உழைப்புதான். தோழர் தா.பா-வின் வாழ்க்கை குறித்து மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டு மென்றால், ‘சமூகநீதிக்காகப் போராடிய அறிவுசார் போராளி’!

அவருக்கு இந்தத் தோழனின் செவ்வணக்கம்!