
- சுபா
ஒளிக்கலைஞன் - கே.வி.ஆனந்த் இப்போது இல்லை. தமிழ்த்திரை கண்ட மாஸ் இயக்குநர்களில் ஒருவர். கொரோனாவின் பிடியில் இறந்தது இழப்பின் வலி உணர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய துக்கம்! துயரத்தின் மடியில் இருந்தார்கள் கதாசிரியர்கள் சுபா. துயரத்தின் உச்சம் மௌனம்... கண்ணீரையும் கடந்துவிட்ட மௌனம்... மன்னிக்கவும் தண்டிக்கவும் முடியாத மாயப்பிசாசாக மரணத்தின் துயரம் படியும் மனதிலிருந்து ஆனந்தின் நினைவுகளுக்குப் பயணித்தார்கள் அந்த இரட்டையர்கள்.
‘‘கல்கி பத்திரிகைக்காக மாவட்டம்தோறும் போய் அங்கிருக்கிற பிரச்னைகளை எழுதிட்டிருந்தோம். வழக்கமாக வந்துட்டுப் போற போட்டோகிராபர் அன்றைக்கு வரலை. கல்கி ராஜேந்திரன் ஒரு பையனை அனுப்புறேன்னு சொன்னார். நாங்க புறப்படும்போது கே.வி.ஆனந்த் வந்து சேர்ந்தார். 20 வயதுதான். அவ்வளவு உற்சாகம். செய்கிற வேலையைப் பத்தியே சதா நினைவு. ஒரு தடவை விருதுநகர் மாவட்டத்திற்குப் பயணம் போனபோது அங்கே ஒரு கிராமத்தில் குழந்தைகள் போலியோ அட்டாக்கில் பாதிக்கப்பட்டிருந்தாங்க. பெரியவங்க முடக்கு வாதத்தில் சிக்கியிருந்தாங்க. என்னன்னு தீவிரமாக இறங்கி விசாரித்தால், அங்கே இருக்கிற கௌசிக நதியில் தோல் தொழிற்சாலையின் கழிவுகள் கலக்குது. அதைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளானதால் அவங்களுக்கு அப்படி ஆகியிருக்கு. அதைக் காணச் சகியாத ஆனந்த், அந்தப் பிள்ளைகளைக் கூட்டிவச்சு ரத்தமும் சதையுமா உணர்வுகள் வர்ற மாதிரி ஒரு புகைப்படத்தை எடுத்து அது அட்டைப்படமா கல்கில வந்துச்சி. அப்போதிருந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பார்வைக்குப் போய், சுப்ரீம் கோர்ட்டில ஒருவர் மனுப் போட்டு, நீதிபதிகள் தலையிட்டு நிலைமை சீராகியது. ஆறு பக்கக் கட்டுரை பேசாததை ஆனந்தின் ஒரு புகைப்படம் உரக்கச் சொன்னது.
இந்த உலகத்தை அவ்வளவு கருணையாகப் பார்த்தவர் ஆனந்த். நாங்க அவர்கிட்டே செலுத்தின அன்பைவிட அவர் எங்களுக்குக் கொடுத்திட்டுப் போன அன்பு ரொம்ப அதிகம். பிரியத்தைத் தவிர எதுவும் தராத ஒருத்தர் சட்டுனு இல்லாமல் போயிட்டால் நாங்க என்ன ஆவோம்! நினைவுகளைத் தவிர எங்ககிட்ட இப்ப என்ன இருக்கு? எங்க ஒவ்வொருத்தர் நல்லதுகெட்டதிலும் முழுமையாகப் பங்கு பெற்றவர். இறுதிப்பயணத்தில்கூட இருந்து அனுப்ப முடியலை. எங்க வாழ்நாள் முழுவதும் ஒரு குற்ற உணர்வோடு காலத்தைக் கழிக்கணும்னு இருக்கு. ‘ஏண்டா இவ்வளவு அவசரம்’னு சட்டையைப் பிடிச்சுக் கேட்கணும்போல இருக்கு. கூட வேலை பார்த்த ஒவ்வொருத்தரும் போன் பண்ணி ‘சார் எவ்வளவு நல்லா பழகினார். எவ்வளவு சொல்லிக் கொடுத்தார். எப்படிப் பேசுவார். எவ்வளவு நல்லவர் தெரியுமா’ன்னு சொல்லச் சொல்ல... எங்க கண்ணீர் பெருகி ஓடுச்சி.

அவருக்கு பிரஸ் போட்டோகிராபர் வேலைங்கிறது நிறைவேறாத பெருங்கனவு. சினிமாவுல அவர் காசு பணம் பார்த்திருக்கலாம். ஆனா அப்படி ஒரு கனவு நிறைவேறலைன்னு நினைப்பு மனதிலிருந்தது. போட்டோகிராபருக்கும், நிருபருக்கும் இருக்கிற தொடர்பு, நெருக்கடி, அதுக்குள்ளே இருக்கிற அவசரம், போட்டி, அதிவேகமா கொண்டு போய்ச் சேர்க்கிற செய்தி என அவ்வளவா வெளியே வராத கதைக்களத்தை ‘கோ’ வில் கொண்டு வந்தார். படம் கொண்டாடப்பட்டது. ஒளிப்பதிவாளரான முதல் படமான ‘தேன்மாவின் கொம்பத்து’லேயே தேசிய விருது ஆனந்துக்குக் கிடைத்தது. முதல்நாள் ஷூட்டிங்கில் ஷோபனா ஹெவி மேக்கப்போடு வந்திருக்கிறார். ‘முகம் அலம்பிட்டு வந்திடுங்க, ஆரம்பிச்சிடலாம்னு’ சொல்லியிருக்கார் ஆனந்த். ‘என்னடா, சின்னப்பையன் இப்படிச் சொல்றான்’னு ஷோபனா தயங்கி, டைரக்டர் பிரியதர்ஷன்கிட்டே போயிருக்காங்க. அவர் பாத்துட்டு, ‘ஆனந்த் சொல்றது சரியாக இருக்கும்’னு சொல்லிட்டுப் போயிட்டார். ஷோபனா அவங்களைத் திரையில் பார்த்திட்டு சிலிர்ப்பா உணர்ந்த தருணம் அதுதான்.
அவருக்குக் காய்ச்சல், தலைவலின்னு வந்து பார்த்ததே இல்லை. துறுதுறுன்னு இருக்கிற அவர்கூட பத்து வயசு கூட இருக்கிற நாங்கதான் நடக்கச் சிரமப்படுவோம். அவர்கூட ஓடினால்தான் நாங்க நடக்கிற மாதிரி இருக்கும். மூணு நாளைக்கு முன்னாடி பேசினார். ‘ஆக்சிஜன் லெவல் கூடிட்டே வருது. வந்திடுறேன்’னு சமீபத்தில்கூட உற்சாகமாகப் பேசினார். அவர் கடைசிக் கட்டமா யார் உதவியையும் எதிர்பார்க்காமல் போயிட்டாரு. நாங்க என்னவோ ‘ஆனந்த் ஷூட்டிங் போயிருக்கார். பெரிய ஷெட்யூல்... முடிச்சிட்டு வந்துடுவார்’னு நம்பிட்டே இருக்கோம். அப்படி நம்பினால் மட்டுமே கொஞ்சம் கண்ணீரையாவது அடக்க முடியுது. ‘இப்படி சொல்லிக்காமப் போலாமா ஆனந்த்’னு கேட்டுக்கிட்டே இருக்கோம்.
அவர் வீட்டின் வாசலில் இரண்டு நிமிடம் வண்டி நிக்கும். அப்புறம் பெசன்ட் நகர் மின்மயானம்தான்னு சொன்னாங்க. நாங்கள் போகவில்லை... எங்களால் தாங்க இயலாது. எங்கள் தோளில் தட்டி உரக்கச் சிரிக்கிற சந்தோஷமான ஆனந்தின் முகமே கடைசியாக எங்கள் மனதில் இருக்க விரும்பினோம்.