அரசியல்
Published:Updated:

அதே உழைப்பு... அதே நேர்மை... அதே சிரிப்பு

வசந்தகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
வசந்தகுமார்

வசந்தகுமார் இறுதிச்சடங்கு... கலங்கிய அகஸ்தீஸ்வரம்

ஆகஸ்ட் 29-ம் தேதி, மதியம்...

கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் கிராமத்தில், குமரி அனந்தன் தெருவில் காங்கிரஸ் கட்சியினர் குழுமி நின்றார்கள். வசந்தகுமார் வருவதாக இருந்தால்தான் அந்தத் தெருவில் கட்சிக்காரர்கள் கூட்டம் குழுமும் என்பதை அறிந்த மூதாட்டி ஒருவர், “வசந்தகுமார் வந்திருக்கானா...” எனக் கேட்டார்.

‘‘இல்லை... ராத்திரி ஆவும்’’ என்றார் கட்சிக்காரர் ஒருவர் சோகத்துடன்.

‘‘வந்தான்னா செலவுக்கு அம்பது ரூவா தருவான்... அதான் வந்திருக்கானான்னு கேட்டேன்’’ என்ற மூதாட்டியின் முகத்தைப் பார்த்த காங்கிரஸ்காரர், ‘‘இல்லைம்மா, அவரு இறந்துட்டாரு’’ என்று கூறவும், மூதாட்டியின் சுருக்கம் விழுந்த கன்னம் வழியே கண்ணீர் பெருக்கெடுத்தது. ‘‘அய்யோ... ராசா... இனி எங்களுக்கு ஆரிருக்கா...’’ -கேவி அழுதபடியே நகர்ந்தார் அவர்.

கொரோனா தொற்று ஏற்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த வசந்தகுமார், நிமோனியா பாதித்து ஆகஸ்ட் 28-ம் தேதி இறந்தார். அவரது உடல் ஆகஸ்ட் 29-ம் தேதி, நள்ளிரவு 12 மணிக்கு அகஸ்தீஸ்வரம் வீட்டுக்கு ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டது. எப்போதும் சிரித்தபடியே இருக்கும் அவர் முகத்தை இறுக்கமாகப் பார்த்த மக்களின் ஓலக்குரல், அகஸ்தீஸ்வரத்தின் அனைத்துத் தெருக்களிலும் எதிரொலித்தது.

அதே உழைப்பு... அதே நேர்மை... அதே சிரிப்பு

‘‘சின்ன வயசுலருந்தே சிரிச்ச முகம்தான். ஒரு ஆளுகிட்டக்கூட சினந்து சண்டைபோட்டதை நான் பார்த்தது இல்லை. ‘மாவீரன் வாலி’னு ஒரு நாடகத்துக்குக் கதை எழுதி, அவரே வாலியா நடிச்சார். வாலி, கடைசியில தம்பி சுக்ரீவனுக்கு அரசப் பதவியை விட்டுக்கொடுக்குறது மாதிரி கதை முடிவை எழுதியிருந்தார். கதையிலகூட யாருக்கும் தீங்கு பண்ணக் கூடாதுனு நினைச்சவருக்கு கொரோனா தீங்கு பண்ணிட்டுதே...” என்று கலங்கினார் வசந்தகுமாரின் ஊரைச் சேர்ந்த ஏ.எம்.டி.செல்லத்துரை.

‘‘தர்மம் தலைகாக்கும்னு சொல்லுவீங்களே... தலை காக்கலியே... எல்லா சாமியும் கைவிட்டுட்டுதே...’’ என வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி கதறியழுத காட்சி அங்கிருந்த அனைவரின் கண்களையும் குளமாக்கியது. சடங்குகளுக்குப் பிறகு, 11:25 மணிக்கு வசந்தகுமாரின் உடல் இருந்த பெட்டி, குழிக்குள் இறக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

“எங்கப்பா `தெருவிளக்கு’னு ஒரு நாடகத்தை எழுதினார். அதுல ஒரு பாவப்பட்ட பையன் தெருவிளக்கு வெளிச்சத்துல படிச்சு ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணுவான். ஊர்ல அவனைக் கிண்டல் பண்ணினவங்க, பின்னால அவனை கலெக்டரா பார்க்கப்போகும்போது ஆச்சர்யப்படுவாங்க. அந்தப் பையனா நடிச்சவரு வசந்தகுமார்’’ என்று நம்மிடம் கலங்கினார் வசந்த் அண்ட் கோ கலைக்குழு வைத்திருக்கும் சீத்தாராமன்.

‘‘கொரோனா காலத்துல, சட்ட விதிகள் காரணமா நேர்ல வந்து அஞ்சலி செலுத்த முடியலை. தெலங்கானாவுல இருந்து எனது அஞ்சலியை செலுத்திக்கிட்டிருக்கேன்’’ என்று வருத்தத்துடன் நம்மிடம் பேசத் தொடங்கினார் தெலங்கானா ஆளுநரும், வசந்தகுமாரின் அண்ணன் மகளுமான தமிழிசை சௌந்தர்ராஜன். ‘‘வெளியே நல்ல வெயிலா இருக்கும், ஆனாலும் கோட்டு சூட்டுதான் போட்டுட்டுப் போவாரு. அவரோட ஷூவுக்கு பாலீஷ் போடுவாரு. அப்போ சின்னப் பொண்ணா இருந்த என்னைக் கூப்பிடுவாரு. ‘ஒம்மொகம் இதுல தெரியுதா’னு கேட்பாரு. கண்ணாடி மாதிரி இருக்கணுமாம் ஷூ. நான் சின்ன வயசுல பார்த்த சித்தப்பா கடைசிவரை மாறலை. அதே சுறுசுறுப்பு, அதே உழைப்பு, அதே நேர்மை, அதே சிரிப்பு’’ என்று சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

‘‘என்னைப் பார்க்கும்போதெல்லாம் ‘கொரோனாநோய் யாருகிட்ட இருக்கு, யாருக்கு வருதுனு யாருக்குமே தெரியாது. மக்கள் பிரதிநிதிங்கறதுனால எல்லா இடங்களுக்கும் போக வேண்டியது உங்க கடமை. ரொம்ப கவனமா, பாதுகாப்பா இருக்கணும்’னு அட்வைஸ் பண்ணுவாரு. நல்ல மக்கள் பணியாளரை இழந்துட்டோம்’’ என்று கலங்கினார் கன்னியாகுமரி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வான ஆஸ்டின்.

அதே உழைப்பு... அதே நேர்மை... அதே சிரிப்பு

‘‘கடுமையான உழைப்பாளி. காங்கிரஸ் கட்சியில் அடிமட்ட தொண்டனிலிருந்து பெயர் சொல்லும் அளவுக்கு உருவானவர். அவரது திடீர் மரணம் பெரிய அதிர்ச்சி’’ என்றார் பா.ஜ.க-வின் பொன்.ராதாகிருஷ்ணன்.

‘‘அகஸ்தீஸ்வரத்துக்கு அவரு வந்தாருன்னா நிறைய பேர் உதவி கேட்டு நிப்பாங்க. ஒருக்கா, ‘பையன் கவனிக்கறதில்லை’னு வயசான அப்பா, அம்மா வந்து நின்னாங்க. உடனே, ‘இந்த மாதிரி எத்தனை பேர் இருக்காங்களோ’னு யோசிச்சவரு, ஆதரவில்லாம கஷ்டப்படுற பெற்றோர்களுக்கு 500 ரூவா, மகளைக் கட்டிக்கொடுத்து தனியா இருக்குற பெற்றோருக்கு 750 ரூவா, குழந்தைகளே இல்லைன்னா 1,000 ரூவானு பென்ஷன் கொடுக்க ஆரம்பிச்சார். இந்த ஊர்ல இருக்குற முப்பது பேருக்கு இப்பவும் மாசம் பொறந்தா அவர்கிட்ட இருந்து மணியார்டர் வந்துடும். எங்க வறுமை புரிஞ்ச எங்க மனுஷன் ’’ என்று பகிர்ந்துகொண்டார் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர்.

உழைப்பு ஒருவரை எவ்வளவு உயர்த்தும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்துகாட்டியவரை இழந்து தவிக்கிற அகஸ்தீஸ்வரம் முழுக்கக் கண்ணீரின் உப்புக்கரிப்பு; வசந்தகுமாரின் வசந்தகாலக் கதைகள்!