சினிமா
Published:Updated:

ஆன்மாவைத் தொட்ட குரல்!

லதா மங்கேஷ்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
லதா மங்கேஷ்கர்

- ஷாஜி

லதா மங்கேஷ்கரின் உடல்நலன் குறித்து அவ்வப்போது பல்வேறு செய்திகள் வந்துகொண்டே இருந்தாலும் அதிலிருந்து மீண்டு ஆறுதல் தந்தவர் இந்தத் தடவை நம்மை ஏமாற்றிவிட்டார். இதயத்துக்கு நெருக்கமான பாடகர், பாடகிகள் விடைபெறும்போது அவர்களுடைய பாடல்களை நெடுநேரம் ஒலிக்கவிட்டு அவர்களின் நினைவில் மூழ்கிப்போவது என் வழக்கம். ஆனால் இன்றைக்கு அதற்கும் முடியாமல் மனம் மிகவும் சோர்ந்துவிட்டது.

ஏழு வயதில் அவரது குரலை ரேடியோவில் கேட்டுப் பரிச்சயமான நாளிலிருந்து இன்றுவரை லதா மங்கேஷ்கர் மாதிரி ஒரு பாடகி யாருமே இல்லை என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஜனரஞ்சக இசையில் உலகத்திலேயே லதாவிற்கு இணையான பாடகி இன்னொருவர் இல்லை. பொய்மை கலக்காமல் கூடுதலாக எதையும் சேர்க்காமல் இயல்பாக, துல்லியமாக ஒலிப்பது அவரது குரலும் பாடும்முறையும். மெட்டின் உணர்வு, பாடல்களின் அர்த்தம் என ஆழ்ந்த புரிதலோடு பாடினார்.

நிகரற்ற பாடகி, ஒப்பற்ற பாடகி என்றெல்லாம் சொல்லிச் சொல்லி அது ஒரு தேய்வழக்காக மாறிவிட்டது. ஆனால் உண்மையில் ‘நிகரற்ற’ என்ற வார்த்தை லதாவிற்குத்தான் கச்சிதமாகப் பொருந்தும். 1940களின் இறுதியில்தான் பாட வந்தார். ஆரம்பிக்கும்போதே அருமையாகப் பாடினார். பாடிப்பாடி மெருகேறிய குரலோ பாடும்முறையோ அல்ல அவருடையது. தொடக்கத்திலேயே அது அசாத்தியமாகத்தான் இருந்தது. வயதாகும்போது குரலுக்கு வரும் சில மாற்றங்களைத் தவிர்த்து, கடைசி வரைக்கும் அதைப் பராமரித்துவந்தார்.

ஆன்மாவைத் தொட்ட குரல்!

வெயிலில் வாடி வதங்கி நிற்கும்போது அப்படியே ஒரு இளங்காற்று நம்மைத் தொட்டுச் சென்றால் எப்படியிருக்கும்? லதாவின் பாட்டு அப்படித்தான் தன்னியல்பாக நம் மனதைத் தொட்டது. ஆறுதலையும் குளிர்ச்சியையும் அளிப்பவை அவரின் பாடல்கள். பசுங்கிளிகள் கூட்டமாகச் சோளக்காட்டைக் கடப்பது மாதிரி ஒரு பறத்தல். பஞ்சு எப்படி தண்ணீரை உறிஞ்சியெடுத்துவிடுமோ அப்படி இசையை உள்வாங்கிப் பாடினார். மிகை என்பது அவரது பாட்டில் இருக்கவே இருக்காது.

எந்தவொரு இசையமைப்பாளர் இசையில் பாடினாலும் அந்த இசையின் தன்மையையும் ஒழுங்கையும் அவர் கைக்கொண்டார். இளையராஜா இசையில் அவர் பாடிய ‘வளையோசை’ பாடலை, தமிழ் தெரியாதவர்கள் பாடுவது மிகவும் சிரமம். லதா மொழி வல்லமை பெற்றவரும் அல்ல. மராட்டி, இந்தி இரண்டு மொழிகள் மட்டும்தாம் அவருக்குத் துல்லியமாக வரும். தமிழில் உச்சரிப்புப் பிரச்னைகள் இருந்தன. இருந்தும் உணர்வு வெளிப்பாட்டின் ஆழத்தினால் இன்றளவும் அப்பாடல் பிரபலமாக இருக்கிறது. தனக்குத் தெரியாத மொழிகளில் உச்சரிப்பைத் தாண்டி மெட்டின் ஆத்மாவைத் தொட்டுப் பாடினார்.

ஆன்மாவைத் தொட்ட குரல்!

எத்தனையோ வண்ணங்கள் அவரது பாட்டில்! காதல், துயரம், உற்சாகம், சாந்தம், மென்சோகம், அணைப்பிற்கான ஏக்கம் என அனைத்தையும் பாடித் தீர்த்தார். இணைப்பாட்டு பாடும்போது இணையுடன் தோய்ந்து கரைந்து போயிருப்பார் லதா. பேரழகிகளான அத்தனை நடிகைகளுக்கும் அதே அழகோடு பாடினார் லதா. பட்டுக்கூட்டிலிருந்து நூலை இழுப்பதுபோல் லாகவமாகவும் அதேசமயம் அதிர்வு நீட்சியோடும் பாடினார். அனைத்து ஸ்தாயிகளிலும் உயர்ந்து தாழ்ந்து பயணப்படும் குரல் அவருடையது.

திரைப்பாடல்களுக்கு வெளியே பஜன், அபங், கீத், ரபீந்திர சங்கீத் எல்லாம் பாடியிருக்கிறார். பல பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் பாடவே நேரம் போதாமல் இருந்ததனால், அதிகம் இசையமைக்க அவரால் முடியவில்லை. இல்லையேல் இசை அமைப்பதிலும் சாதனை செய்திருப்பார், இசையே உருவமாகப் பிறந்த லதா.

அத்தனை பாடகிகளுக்கும் அவர்தான் ஆதர்சம். ஜானகி, சுசீலா என யாரைக் கேட்டாலும் லதாவின் பெயரைத்தான் சொல்வார்கள். ஆனால் யாருமே லதா மங்கேஷ்கர் ஆக முடியவில்லை. லதா பாடிய எண்ணற்ற பாடல்களைப் புதுப்பாடகிகள் இன்று பாடுகிறார்கள். தனியாகக் கேட்கும்போது அவற்றில் பல நன்றாகவும் இருக்கின்றன. ஆனால் அப்பாடலின் அசலை லதா பாடியதைக் கேட்கும்போது அந்தப் புதுப்பாடகிகளால் லதாவை நெருங்க முடியவில்லை என்பது புரியவரும்.

குடும்பத்தின் வறுமையைக் கடக்க சிறுவயதில் நாடகத்தில் நடித்துப் பாடத்தொடங்கியவர். நாடகமும் பாட்டும் மட்டுமே தெரிந்த குடும்பப் பின்னணியிலிருந்து வந்த அவருக்கு எல்லாமே தானாகவே நடந்திருக்கின்றன. மாயாஜாலம் போன்றது அவரது கலை. அது உருவாக்கப்படுவதல்ல, தானாக நிகழ்வது.

லதாவுக்குக் கிடைத்த விருதுகள், பரிசுகள், அவர் புரிந்து கொள்ளப்பட்ட விதம் இதைப் பற்றியெல்லாம் அவருக்கும் வருத்தம் இருக்கவில்லை, நமக்கும் கிடையாது. பாரத ரத்னாகூட அவருக்குக் கொடுத்தார்கள். எல்லா மரியாதையும் கிடைத்திருக்கிறது. ஆனாலும் அவை எதுவுமே அவரது கலைக்கு நிகரானதல்ல என்றே சொல்வேன். லதா எங்கேயும் போகப் போவதில்லை. அவரது குரலும் அந்தப் பாடும்முறையின் மாயாஜாலமும் என்றைக்குமே நம்மை விட்டு மறையாதவை.