
சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்றதும், பிரணாபின் ஆலோசனைகளைக் கேட்க ஆரம்பித்தார். மாமியாரைப் போலவே மருமகளையும் தலைவியாக ஏற்றார் பிரணாப்.
பிரதமர் நாற்காலி தவிர அநேகமாக இந்திய அரசின் உயர் பதவிகள் அனைத்தையும் அடைந்த ஓர் அரசியல்வாதி, எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் நண்பராக இருப்பது ஆச்சர்யம். மூன்று தலைமுறை காங்கிரஸ்காரராக இருந்தும், தயக்கமின்றி ஆர்.எஸ்.எஸ் மாநாட்டுக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்று பங்கேற்றதும் ஆச்சர்யம். காங்கிரஸ் கட்சியின் சாய்ஸாக குடியரசுத் தலைவர் ஆன அவரை, ‘‘தந்தைபோல இருந்து என்னை வழிநடத்தினார்’’ என பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்ததும் ஆச்சர்யம். இந்தியாவின் மிக உயரிய கௌரவமான ‘பாரத ரத்னா’ விருதை பி.ஜே.பி அரசு அவருக்கு அளித்தது மேலும் ஓர் ஆச்சர்யம்.
இத்தனை ஆச்சர்யங்களுக்குச் சொந்தக்காரரான பிரணாப் முகர்ஜி, 84 வயதில் இப்போது மறைந்திருக்கிறார். ‘இந்தியாவின் முதல் குடிமகன்’ என்ற அடையாளத்துடன் ஜனாதிபதி மாளிகையில் ஐந்து ஆண்டுகள் குடியிருந்துவிட்டால், அது நிறைவான அரசியல் வாழ்வு. ஆனால், இரண்டு முறை பிரதமர் நாற்காலி வரை நெருங்கிச் சென்று, அது கைகூடாத நிராசையுடன் விடைபெற்றிருக்கிறார் அவர்.
மேற்கு வங்காள அரசியலில் இருந்த பிரணாபை அடையாளம்கண்டு டெல்லிக்கு அழைத்தவர் இந்திரா காந்தி. 1969-ம் ஆண்டில் ராஜ்ய சபா எம்.பி-யாகி டெல்லி வந்தவர், நான்கே ஆண்டுகளில் இந்திராவின் அமைச்சரவையில் இடம்பிடித்தார். பல சீனியர்களைத் தாண்டி இந்திராவின் நம்பிக்கைக் குரிய தளபதியாக மாறினார்.
காங்கிரஸில் பல கிளர்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருந்த அந்தக் காலத்தில், இந்திராவுக்கு நம்பிக்கையான சமாதானத் தூதர்கள் தேவைப்பட்டனர். இந்தியா முழுக்க எதிர்க்குரல் எழுப்பும் மூத்த தலைவர்களிடம் ஓடிப்போய், இந்திராவின் சார்பில் சமாதானம் பேசும் நம்பிக்கை மனிதராக பிரணாப் இருந்தார்.
இந்திரா காந்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்தபோது பிரணாப் தர்மசங்கடத்தில் தவித்தார். அவருக்குள் இருந்த ஜனநாயகவாதி, ‘இந்திரா செய்வது தவறு. இதை எதிர்த்துக் குரல் கொடு’ என எச்சரித்தான். ஆனால், பிரணாபின் தந்தை அவரைக் கண்டித்தார். ‘‘எல்லோரையும் போல நீயும் இந்திராவை எதிர்க்காதே! இந்த நெருக்கடியான தருணத்தில் அவருக்கு விசுவாசமாக இரு’’ என்று தந்தை சொன்னதை மதித்தார் பிரணாப். அவசரநிலைக் காலத்தின் அழியாத கறை, காங்கிரஸ் கட்சியின்மீது நிரந்தரமாகப் படிந்ததுபோலவே, பிரணாபின் அரசியல் வாழ்விலும் படிந்தது.

ஆனால், அந்த விசுவாசம்தான் இந்திரா அவரை முழுமையாக நம்புவதற்குக் காரணமாக அமைந்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, பிரணாபைக் கேட்காமல் அவர் எதையும் செய்ததில்லை. அமைச்சரவையில் அவர் ‘நம்பர் 2’ இடத்தில் இருந்தார். இந்திரா வெளிநாடு செல்லும் நேரங்களில், பிரதமரின் இடத்திலிருந்து மற்ற அமைச்சர்களை வழிநடத்தியது பிரணாப் முகர்ஜிதான்.
அதுவேதான் பிரணாபின் அரசியல் வாழ்வுக்குச் சறுக்கலாகவும் அமைந்தது. 1984, அக்டோபர் 31 அன்று இந்திரா சுடப்பட்டபோது பிரணாப் கல்கத்தாவில் இருந்தார். ராஜீவ் காந்தியும் தற்செயலாக கல்கத்தா போயிருந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் இந்திரா உயிருக்குப் போராடிக்கொண்டிருக்க, ராஜீவையும் பிரணாபையும் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வந்தார்கள். விமானம் நடுவழியில் இருந்தபோதே, இந்திராவின் மரணச் செய்தி வந்தது. கூடவே, கலவரச் செய்திகளும் வந்தன.
பிரதமர் இல்லாத சூழலில், நம்பர் 2 இடத்தில் இருப்பவர் தானே நாட்டை வழிநடத்த வேண்டும்! எனவே, விமானத்தில் வரும்போதே விமானி மூலம் டெல்லிக்குத் தகவல் சொல்லி, முப்படைத் தளபதிகள், முக்கிய அதிகாரிகளை விமான நிலையத்துக்கு வரச் சொன்னார். விமானத்திலிருந்து இறங்கியதும், அவர் களுக்குக் கட்டளைகள் பிறப்பித்தார். அதே விமானத்தில் வந்த ராஜீவ் காந்திக்கு ஆறுதல் சொல்லக் காத்திருந்த சில தலைவர்கள் இதைத் தவறாகப் புரிந்துகொண்டனர். ‘இந்திரா இல்லாத சூழ்நிலையில் பிரதமர் நாற்காலியை பிரணாப் கைப்பற்ற நினைக்கிறார்’ என ராஜீவிடம் போட்டுக் கொடுத்தனர்.
தான் உயிராக நேசித்து விசுவாசம் காட்டிய தலைவியின் மரணத் துயரில் இருந்த பிரணாப் முகர்ஜிக்கு அடுத்தடுத்து துயரச் செய்திகளே வந்தன. ராஜீவ் காந்தி பிரதமராகி அமைத்த முதல் அமைச்சரவையில் அவர் இடம்பெறவில்லை. கட்சிப் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். தன்மானத்துக்கு விடப்பட்ட சவாலாக இதைக் கருதிய பிரணாப், 1986-ம் ஆண்டு ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார். பல மாநிலங்களில் ஓரங்கட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர்களை இணைத்துக் கொண்டு பலம் காட்ட ஆரம்பித்தார்.
ஆட்சியை இழந்த பிறகு ராஜீவ் காந்தி இவரைப் புரிந்துகொண்டார். ‘பிரணாப் போன்ற ஓர் அறிவுஜீவி காங்கிரஸுக்கு வேண்டும்’ என்று சமாதானம் பேசினார். பிரணாப் தன் கட்சியைக் கலைத்துவிட்டு, மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். 1991 தேர்தல் பிரசார நேரத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட, மீண்டும் ஒருமுறை காங்கிரஸ் தலைமையில் வெற்றிடம் ஏற்பட்டது.
‘சீனியர் தலைவர்’ என்ற முறையில் பிரதமர் பதவிக்குத் தன்னைத் தகுதியான நபராகக் கருதினார் பிரணாப். அதற்காக ஆதரவும் திரட்ட ஆரம்பித்தார். ஆனால், ‘முன்கோபக்காரர்’ என்ற இமேஜும், இடையில் பிரிந்துபோய் தனிக்கட்சி நடத்தியதும் அவருக்கு எதிரான விஷயங்களாக ஆகின. ‘பிரணாப் நமக்கு இணக்கமாக இருக்க மாட்டார்’ என நினைத்து, கிட்டத்தட்ட அரசியல் துறவறம் போயிருந்த நரசிம்ம ராவை இழுத்துவந்து பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்தார்கள் மற்ற தலைவர்கள். முதல் வாய்ப்பு பறிபோனது.
1982-84 காலகட்டத்தில் பிரணாப் நிதியமைச்சர். ‘வெளிநாடுகளில் போய் படித்த பொருளாதார நிபுணர்’ என அவரிடம் யாரோ மன்மோகன் சிங்கை அறிமுகம் செய்து வைத்தார்கள். உடனே மன்மோகனை ரிசர்வ் வங்கி கவர்னர் ஆக்கினார் அவர். பிற்காலத்தில் நரசிம்ம ராவ் அந்த மன்மோகனை நிதியமைச்சர் ஆக்குவார் என்பதை பிரணாப் எதிர்பார்க்கவில்லை.
சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்றதும், பிரணாபின் ஆலோசனைகளைக் கேட்க ஆரம்பித்தார். மாமியாரைப் போலவே மருமகளையும் தலைவியாக ஏற்றார் பிரணாப். அந்த மருமகள் தன்னை ஒதுக்கிவிட்டு, மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கிய திருப்பத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. ரிசர்வ் வங்கியின் கவர்னராகத் தனக்குக் கீழே இருந்தவர் பிரதமராகிவிட, அவருக்குக் கீழே அமைச்சராகப் பணிபுரியும் சூழலைச் சலனமின்றி ஏற்றுக்கொண்டார் பிரணாப். மன்மோகனும் அவரை கண்ணியத்துடன் நடத்தினார்.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து, காங்கிரஸ் கூட்டணி அரசுக்கான ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக்கொண்டனர். ‘2009 தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க இடதுசாரிகள் தயவு தேவைப்படும். அப்போது பிரதமர் பதவிக்குத் தன்னை இடதுசாரிகள் பரிந்துரைப்பார்கள்’ என பிரணாப் கருதினார். அந்தத் தேர்தலில் அப்படி ஒரு சூழலே வராமல் போய்விட்டது. சோர்ந்து போயிருந்த பிரணாப், ஜனாதிபதி பதவியை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார்.
ஒவ்வோர் ஆண்டும் துர்கா பூஜைக்கு மேற்கு வங்காளம் சென்று, தான் பிறந்த மிரதி கிராமத்தில் பூஜையைக் கொண்டாடுவார் பிரணாப். ஜனாதிபதியாக இருந்தபோதும், தன் ஊர் மக்களுடன் கொண்டாடும் இந்த வழக்கத்தை மாற்றியதில்லை. ‘இந்தியாவின் முதல் குடிமகன்’ என்பதைப்போலவே ‘மிரதி கிராமத்தின் தலைமகன்’ என்ற அடையாளத்தையும் முக்கியமாகக் கருதினார் அவர்.
அடுத்த மாதம் மிரதி மக்கள், தங்கள் தலைமகன் இல்லாத துர்கா பூஜையை எதிர்கொள்வார்கள்.