
திருமதி. சரோஜா பாலசுப்ரமணியன் (20.10.1938 – 06.11.2022)
பறவைகள் என்றால் அவருக்கு அவ்வளவு பிரியம். ‘சரோஜா... சரோஜா...' என்று உற்சாகமாகி அழைக்கும் ஆஸ்திரேலியா கொண்டைக்கிளி எப்போதும் அவரின் அன்பின் வருடலுக்காகக் காத்திருக்கும். எல்லோரும் அஞ்சி ஒதுங்கும் ஈமு கோழிகளும் கஸோவாரிகளும் அவரைப் பார்த்தால் ஓடிவந்து உரசிக்கொண்டு நிற்கும். மனிதர்களைப் போலவே எல்லா உயிர்களையும் நேசித்து, மகிழ்ச்சியை மட்டுமே பரப்பிக்கொண்டிருந்தவர். கனிவும் கருணையும் பொறுமையும் அவரின் அடையாளங்கள். எதிர்மறை வார்த்தைகளையே உச்சரிக்காத அவரது உதடுகளில் எல்லாத் தருணங்களிலும் புன்னகை ததும்பும். உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோதுகூட, ‘எல்லோரும் நல்லா இருக்கணும்' என்பதே அவரின் பிரார்த்தனையாக இருந்தது. அனைவரும் மதிக்கும், நேசிக்கும் அன்பின் அடையாளமாகத் திகழ்ந்தவர் திருமதி. சரோஜா பாலசுப்ரமணியன்.
ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரும், ஜூனியர் விகடன் இதழின் நிறுவனருமான அமரர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவி திருமதி. சரோஜா பாலசுப்ரமணியன் (84), கடந்த 06.11.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் இயற்கையில் கலந்துவிட்டார்.

பத்திரிகையாளர், எழுத்தாளர், இயக்குநர், பிரமாண்ட சினிமாத் தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட பேராளுமை எஸ்.எஸ்.வாசனின் மருமகளாக வந்தபோது அவர் வெளியுலகம் அறியாத பெண், கூச்ச சுபாவம் கொண்டவர். வெகு சீக்கிரமே, தந்தையைப் போலவே பன்முகத்திறன் கொண்ட ஆளுமை எஸ்.பாலசுப்ரமணியனின் அன்பு மனைவியாக குடும்பத்தில் இயல்பாகப் பொருந்திப்போனார்.
உபசரிப்பதிலும் பரிசளிப்பதிலும் அவருக்கு நிகர் கிடையாது. அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், சினிமா நட்சத்திரங்கள், இசைக் கலைஞர்கள் என பலரும் வீட்டுக்கு வருவார்கள். அவர்களுக்குத் தருகிற அன்பையும் மதிப்பையும் துளியும் குறைவில்லாமல் எளியவர்களுக்கும் தருகிற அற்புதக் குணம் அவருக்கு. ஒருமுறை அந்த வீட்டுக்கு வந்துபோனவர்களுக்குக்கூட என்ன பிடிக்கும் என்று நினைவுபடுத்தி, பார்த்துப் பார்த்துச் செய்யும் நெகிழ்ச்சியான மனுஷி அவர். பெரியவர்களோ, குழந்தைகளோ, வீட்டுக்கு வந்து திரும்பும் எவரும் வாழ்நாள் முழுவதும் மறக்கவியலா பரிசால் மகிழ வைக்கும் அன்னை மனம் அவருக்கு.
எளிமையாக இருந்தாலும் வலிமையான மன உறுதி கொண்டிருந்தவர். ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவர், ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் ஒரு கருத்துப்படத்தை வெளியிட்டதற்காகச் சிறை செல்ல நேர்ந்தது. அந்தத் தருணத்திலும் மனம் கலங்காமல், ‘கருத்துச் சுதந்திரத்துக்காகவே அவர் சிறை சென்றார். சட்டப்படி அவர் போராடி மீண்டு வருவார்' என்று துணிச்சலோடு சொன்னார்.
ஒருமுறை அவரிடம் பேசியவர்கள், எக்காலமும் அவரை மறக்க மாட்டார்கள். அபார நினைவாற்றல் அவருக்கும். எவரிடம் பேசினாலும் குடும்பத்தின் அத்தனை அங்கத்தினர்களையும்... ஏன், அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணி வரை எல்லோரையும் பெயர் சொல்லி நலம் விசாரிப்பது அவரின் தனித்தன்மை.
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைத்த அன்னையின் மறைவு, விகடன் குழுமத்துக்குப் பேரிழப்பு. அன்பும் புன்னகையுமாய் இயற்கையில் கலந்துவிட்ட அவருக்கு, விகடன் குழுமத்தின் ஒவ்வொரு ஊழியரின் இதயபூர்வமான அஞ்சலி!