சினிமா
தொடர்கள்
Published:Updated:

கதைகளில் வாழ்வார் தாமிரா!

தாமிரா
பிரீமியம் ஸ்டோரி
News
தாமிரா

- சந்திரா

பத்திரிகைகளில் எழுதுவது, இலக்கியம், சினிமா என்று பல்வேறு துறைகளில் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த துடிப்பான இளைஞராக, என் கணவர் மூலம் எங்கள் குடும்ப நண்பராக அறிமுகமானவர் தாமிரா. சினிமா இயக்குவதற்கான முயற்சியில் இருந்தபோது, இரண்டு ஆண்டுகள் எங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தங்கியிருந்தார்.

அப்போது நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் அவர் முஸ்லிம் என்பதைத் தெரிந்துகொண்டு அவரை மட்டும் வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார். அவரை மட்டும் வெளியேற்ற மறுத்து எங்கள் குடும்பமே அந்த வீட்டைக் காலி செய்து வேறு வீட்டில் குடியேறினோம். அந்த நிகழ்வு அவரை மிக மோசமாக பாதித்தாலும் மனிதர்கள்மீதான அவரது அன்பும் நம்பிக்கையும் குறையவே இல்லை. மனிதர்களைத் தேடித் தேடி நட்பு கொள்ளும் தீவிர மனம் கடைசிவரை அவரிடமிருந்தது.

எல்லாத் துறைகளிலும் அவர்மீது அன்பு கொண்ட ஏகப்பட்ட நண்பர்கள் எப்போதும் சூழ்ந்திருந்தார்கள். கிராமத்திலிருந்து வந்த எனக்கு சினிமாக் கனவை தூபம் போட்டவர் அவர்தான். என்னுடைய ஒரு சிறுகதையை சினிமாவாக்கலாம் என்று சொல்லி என்னைக் கதை டிஸ்கஷனில் கலந்துகொள்ளச் செய்து, சினிமாமீதான என் அச்சத்தைப் போக்கினார். என்னுடைய வாழ்வனுபவங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டபோது அது இலக்கியத்தரமாக இருக்கிறது என்று சொல்லி முதல்முதலில் என்னை எழுதத்தூண்டியவரும் அவரே.

அவர் மனம் முழுக்க கதைகளே எப்போதும் உருக்கொண்டு அலைந்தன. நிறைய இயக்குநர் நண்பர்களின் கதை விவாதங்களில் ஒரு பைசா வாங்கிக்கொள்ளாமல் கலந்துகொள்வார். நண்பர்களுக்கு உதவுவதற்கு ஒரு நாளும் தயங்கமாட்டார். பிற்காலத்தில் சீரியல் கதை வாய்ப்பும் படம் இயக்கும் வாய்ப்பும் கிடைத்தபோது பணம் கொடுத்தும் உதவினார். அவருடைய சிறுகதைகளை விகடனில் படித்துவிட்டு அவரைத் தேடிவந்த இளைஞர்கள் ஏராளம். அந்த அளவுக்கு கவர்ந்திழுக்கும் எழுத்து நடை அவருடையது.

தாமிரா
தாமிரா

குடும்பப் பொருளாதாரத்தைச் சரிசெய்ய சீரியல்களுக்குக் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதிக்கொண்டிருந்தார். அவரின் சினிமா முயற்சி வெற்றிபெற அவர் குடும்பம் பொறுமையாகக் காத்திருந்தது. பத்து ஆண்டுகளுக்கும் மேலான கடுமையான முயற்சிக்குப் பின்னர் அவருக்கு சினிமா இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்மீது கொண்ட அன்பினால் பாலசந்தர் தாமிரா இயக்கிய ‘ரெட்டச் சுழி’ படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் பாரதிராஜாவையும் அந்தப் படத்தில் நடிக்கச் சொல்லி சிபாரிசு செய்தார். திறமையும் கடுமையான உழைப்பும் கொண்டவர் தாமிரா.

தமிழ் சினிமாவில் நிறைய படங்களை இயக்கியிருக்க வேண்டியவர் தாமிரா. அந்த அளவிற்கு அவரிடம் கதைகள் கொட்டிக் கிடந்தன. எப்போதும் தயாரிப்பாளர்களைத் தேடிக் கதை சொல்லிக்கொண்டே இருந்தார். அவருடைய கதைகள் பல திரைப்படமாக உருமாறுவதற்கு முன்பே கொரோனா என்னும் கொடும் நோய் அவரைக் கொண்டு சென்றுவிட்டது. தாமிராவின் கதைகள் எப்போதும் கோடம்பாக்கம் தெருக்களில் அலைவுற்றுக்கொண்டே இருக்கும்.