Published:Updated:

‘அண்ணனை காப்பாற்றச் சென்ற தம்பியும் மரணம்!’ - பாதாளச் சாக்கடைக்குள் பறிபோன உயிர்கள்

‘அண்ணனை காப்பாற்றச் சென்ற தம்பியும் மரணம்!’ - பாதாளச் சாக்கடைக்குள் பறிபோன உயிர்கள்
‘அண்ணனை காப்பாற்றச் சென்ற தம்பியும் மரணம்!’ - பாதாளச் சாக்கடைக்குள் பறிபோன உயிர்கள்

 பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி துப்புரவுப் பணிபுரியும் சகோதரர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

‘அண்ணனை காப்பாற்றச் சென்ற தம்பியும் மரணம்!’ - பாதாளச் சாக்கடைக்குள் பறிபோன உயிர்கள்

கோவை சிங்காநல்லூர் பகுதியை அடுத்து உள்ளது திருநகர். அப்பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யவதற்காக திருநகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், கோவை உப்பிலிப்பாளையம் சி.எம்.சி காலனியிலிருந்து மூன்று நபர்களை வரவழைத்துள்ளனர். அவர்கள் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்டிருந்த அடைப்பைச் சரி செய்வதற்காக சாலையில் உள்ள பாதளச் சாக்கடையைத் திறந்துள்ளனர்.  
முருகன் என்பவர் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை சரிசெய்ய முற்பட்டுள்ளார். அப்போது பாதாளசாக்கடையிலிருந்து வெளிவந்த விஷவாயு தாக்கியதில் மயக்கமடைந்து சாக்கடைக்குள் சாய்ந்துள்ளார் முருகன்.

இதை எதிர்முனையிலிருந்து பார்த்த அவரின் சித்தப்பா மகனும் அவருடன் வேலைக்கு வந்தவருமான பாண்டிதுரை முருகனைக் காப்பாற்ற ஓடியுள்ளார். விஷவாயு வெளிவருவது தெரியாமல் பாதாளச் சாக்கடைக்குள் தலையைவிட்ட அவரையும் விஷவாயு தாக்க அவரும் மயங்கி சாக்கடைக்குள் விழுந்துள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலே பலியாகினர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த முருகன் மற்றும் பாண்டிதுரை இருவரும் சகோதரர்கள் எனவும், பாண்டிதுரைக்கு சமீபத்தில்தான் திருமணமாகி அவரது மனைவி கர்ப்பமாக உள்ளதாகவும் கதறுகிறார்கள் அவரது உறவினர்கள். முருகன் திருநகர் குடுயிருப்போர் நலச்சங்கத்தின் மூலமாக அங்கு மாதச் சம்பளத்துக்குப் பணியாற்றி வந்ததாகவும், பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமில்லாமல்  கழிவுநீர் தொட்டி மற்றும் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்ய வைத்ததே உயிரிழப்புக்கு காரணம் என துப்புரவுத் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.