Published:Updated:

`இதுபோன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது என்றே நீதிமன்றம் சென்றேன்!’ - பிள்ளையை இழந்த தந்தை கண்ணீர்

`இதுபோன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது என்றே நீதிமன்றம் சென்றேன்!’ - பிள்ளையை இழந்த தந்தை கண்ணீர்
News
`இதுபோன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது என்றே நீதிமன்றம் சென்றேன்!’ - பிள்ளையை இழந்த தந்தை கண்ணீர்

`இதுபோன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது என்றே நீதிமன்றம் சென்றேன்!’ - பிள்ளையை இழந்த தந்தை கண்ணீர்

மன்னார்குடி அருகே கஜா புயலின்போது வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டரை வயது பெண் குழந்தை இறந்துவிட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை இல்லாததால் நிவாரண தொகையான ரூ.10 லட்சம் தர அரசு மறுத்துவிட்டது. இந்த நிலையில் குழந்தையின் தந்தை வீரமணி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உடனே நிவாரணத் தொகையை தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரின் மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மிதர்ணா என்ற மகளும் இருந்தனர். மிதர்ணா கடைக்குட்டி என்பதால், அந்தக் குடும்பத்துக்கே தேவதையாக, செல்லமாக வளர்ந்திருக்கிறாள். வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்துகொண்டிருந்த நிலையில் கஜா புயல் இவர்களின் சந்தோஷம், நிம்மதி என எல்லாவற்றையும் நிலைகுலையச் செய்துவிட்டது.

கடந்த நவம்பர்  மாதம் 16-ம் தேதி நள்ளிரவில் கோர சத்தத்தோடு வீசிய கஜா புயல் அந்தப் பகுதியில் வீடு, மரம் என எந்தப் பாகுபாடும் பார்க்காமல் துவம்சம் செய்துவிட்டுச் சென்றது. இதில் வீரமணி வீட்டின் பின்பக்கச் சுவர் இடிந்து விழுந்ததில் மகள் மிதர்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மனைவி தனலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடியிருக்கிறார். என்ன செய்வதெனெ புரியாமல் இடிந்துபோன நிலையில் தலையில் அடித்துக்கொண்டு அந்தக் கும்மிருட்டில் கதறியிருக்கிறார் வீரமணி. ஆசையாக வளர்த்த மகள் சடலமாகக் கிடக்க, தலையில் ரத்தம் சொட்டிய நிலையில் மனைவி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்க அந்த இரவை கடப்பதற்குள் பெரும் துயரத்தை அனுபவித்திருக்கிறார் வீரமணி. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு வழியாக விடிந்ததும் அந்தப் பகுதியின் வி.ஏ.ஓ மற்றும் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தைக் கூறியிருக்கிறார். அதற்கு அதிகாரிகள் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து கிடக்கின்றன. இப்போது யாரும் வரவும் முடியாது. எதுவும் செய்யவும் முடியாது எனக் கையை விரித்திருக்கிறார்கள். உடனே உறவினர்கள் சிலருக்குத் தகவல் சொல்லி வீட்டுக்கு வரவழைத்து எப்படியாவது உயிருக்குப் போராடும் மனைவியைக் காப்பாற்ற வேண்டும் எனத் துடித்துள்ளார். பின்னர் உறவினர்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என பத்துக்கும் மேற்பட்டவர்கள் கயிற்றுக் கட்டில் ஒன்றில் தனலட்சுமியைப் படுக்க வைத்து கட்டிலை தோழில் சுமந்து மாற்றி மாற்றி தூக்கிக் கொண்டு நடந்தே 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் உடனே தஞ்சாவூர் அல்லது திருச்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். அப்போதுதான் காப்பாற்ற முடியும் எனக் கூறியுள்ளனர். அதன் பிறகு, இரண்டு சக்கர வாகனத்தில் தனலட்சுமியை உட்கார வைத்துக்கொண்டு சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தஞ்சாவூருக்கு வந்திருக்கிறார் வீரமணி. மனைவியின் உயிரைக் காப்பாற்றினால் போதும் என நினைத்தவர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனைவியைச் சேர்த்து உயிர் பிழைக்க வைத்திருக்கிறார். இப்போதும் அவர் மனைவிக்கு சிகிச்சைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தன் மகள் இறப்புக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையான ரூ.10 லட்சம் பணத்தைக் கேட்டு அதிகாரிகளிடம் மனுக் கொடுத்துள்ளார். குழந்தை இறப்புக்கான பிரேத பரிசோதனை அறிக்கை இல்லை. அதனால் நிவாரணம் தர முடியாது என மறுத்து, மேலும் வேதனையடையச் செய்துள்ளனர் அரசு அதிகாரிகள். இதையடுத்து நீதிமன்றம் சென்று நிவாரணத் தொகை அரசு கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை பெற்றுள்ளார் வீரமணி.

இது குறித்து வீரமணியிடம் பேசினோம். ``அந்த நேரத்தில் இறந்த என் குழந்தையைவிட உயிருக்குப் போராடும் மனைவியைக் காப்பாற்ற வேண்டும் எனத் தவித்தேன். இதனால் என் குழந்தையை புதைச்சப்பகூட நான் அருகில் இல்லை. இதுபோன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது. ஒரு வழியாக என் மனைவியின் உடல் நிலை தேறிய பிறகு நிவாரணம் தொகைக் கேட்டு மனு கொடுத்தேன். அதற்கு, பிரேத பரிசோதனை அறிக்கை கேட்டனர். இது போன்ற காலங்களில் அதற்கான அறிக்கை தேவையில்லை என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றேன். ஆனால், அதிகாரிகள் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அமைச்சர், அதிகாரிகள் என அனைவரிடத்திலும்  நான் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை.

பணம் ஒரு முக்கியம் இல்லை. அந்தச் சமயத்தில் நான் அடைந்த துயரத்துக்கு எவ்வளவு பணம் நிவாரணமாக கொடுத்தாலும் என்னை எந்தக் காலத்திலும் தேற்ற முடியாது. ஆனால், அரசு ஆணை இருந்தும் ஒரு உயிரைப் பறிகொடுத்தவனிடம் இப்படி நடந்துகொள்கிறார்களே என நினைத்துதான் மிகுந்த வேதனையடைந்தேன். அதன் பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுத்தேன். நீதிமன்றம் ஆறு வாரத்துக்குள் நிவாரண தொகையான 10 லட்சத்தை எனக்குத் தர வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது. இந்தப் பணம் என் மகளின் இறப்புக்கு எந்த வகையிலும் ஈடாகாது. ஆனால், யாருக்கும் இது போன்ற நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் அதற்காகவே நான் போராடினேன்’’ என்றார்.